Tuesday, October 28, 2014

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து 


द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥११- २०॥

த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் ||

த்யாவா ப்ருதிவ்யோ = தியா என்றால்  தீபம்.ஒளி.  ஒளி வீசும் விண்ணுக்கும்; ப்ரித்வி என்றால் நிலம். பூமி. ஆகாயத்திற்கும் பூமிக்கும்

இதம் = இந்த 

அந்தரம் = உள்ளே 

ஹி = நிச்சயமாக

வ்யாப்தம் = வியாபித்து , நிறைந்து

த்வயை = உன்னால்

ஏகேன = ஒருவனாய்

திஸ = திசைகளிலும்

ச = மேலும்

ஸர்வா:  = அனைத்து

த்ருஷ்ட = காணும் 

ஆத்புதம்  = அற்புதம்

ரூபம் = வடிவம்

உக்ரம்  = உக்கிரமான

லோகத்ரயம்= மூன்று உலகங்களிலும்

ப்ரவ்யதி²தம் = நடுங்கும்படி

மஹாத்மந் = உயர்ந்த

விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒன்றாய் நிறைந்த உன் உக்கிரமான வடிவைப் பார்த்து மூன்று உலகங்களும் நடுங்குகின்றன 

நீங்கள் இருக்கும் அறை . அதையும் மற்ற அறைகளையும் சேர்த்து உங்கள் வீடு. உங்கள் வீட்டையும், மற்ற வீடுகளையும் சேர்த்து உங்கள் apartment . உங்கள் அபர்த்மென்ட் -டையும் மற்றவற்றையும் சேர்த்து உங்கள் தெரு. உங்கள் தெரு போல  பல தெருக்கள் சேர்த்த உங்கள் இடம் அல்லது ஊர். உங்கள் ஊரோடு பல  ஊர்கள் சேர்ந்து உங்கள் நாடு.

உங்கள் நாட்டைப் போல பல நாடுகள் சேர்ந்து இந்த பூமி. உங்கள் பூமியைப்   போல  பல கிரகங்கள் சேர்ந்து இந்த சூரிய குடும்பம். உங்கள் சூரிய குடும்பம் போல  சூரிய குடும்பங்கள் சேர்ந்து உங்கள் பால் வெளி என்று இந்த உலகம  விரிந்து கொண்டே போகிறது.

மாடியில் இருந்து பார்த்து பார்த்தால் அறைகள் தெரியாது...வீடுகள் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால் வீடுகள் தெரியாது, நகரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் நகரம் தெரியாது நாடு தெரியும்.

இப்படி நம் பார்வை விசாலமாக விசாலமாக மேடு பள்ளங்கள், ஏற்றத் தாழ்வுகள்  மறைந்து அனைத்தும் சமம் என்று தோன்றும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உள்ள அனைத்தும் ஒரு  சக்தியின் வெளிப்பாடு  என்று பார்க்கும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அது நிறைந்து  நிற்கிறது. எங்கும் வியாபித்து நிற்கிறது.

மாமன், மச்சான், குரு, தாத்தா, என்று பிரித்துப் பார்த்த அர்ஜுனன் இப்போது  சேர்த்துப்  பார்க்கிறான். எங்கும் நிறைந்து நிற்கும் ஒன்றைப் பார்க்கும் போது அவனுக்கு  நடுக்கம் வருகிறது. இதுவரை கண்டிராத ஒன்று.

அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வரூப தரிசனம்.

சூரியனையும், சந்திரனையும், கிரகங்களையும், பால்வெளியையும் ஒன்றாக  சேர்த்து பாருங்கள்.

எவ்வளவு பெரிய பிரமாண்டம். அதை நினைக்கும் போது அர்ஜுனனக்கு நடுக்கம் வருக்கிறது .

இதுவரை அப்படி அவன் பார்த்தது இல்லை.

தான் பெரிய வில்லாளி, அழகன் என்ற ஆணவம் எல்லாம் அவனை விட்டுப் போகிறது. நடுங்குகிறான். இதன் முன்னால் நாம் ஒன்றும் இல்லை என்ற பயம் வருகிறது.

அவன் மட்டும் என்ன ?  நாமும்தான்.

உலகை பிரித்து பிரித்து பார்த்தே நாம் பழகி விட்டோம். சேர்த்துப் பார்க்க பழகுவோம்.

சேரச் சேர அதன் பிரமாண்டம் தெரியும். நம் ஆணவம் விலகும்.  பணிவு வரும். எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றுமை உணர்வு வளரும்.

உள்ளே போகப் போக ஆத்மா என்ற ஒன்றை அடைவோம்.

அதை உணர்வது கடினம் ஏன் என்றால் அதை பார்க்க முடியாது.

உள்ளே செல்லும் பார்வையை வெளியே செலுத்தினால் உலகம் விரிந்து கொண்டே போகும்.

அந்த பிரமாண்டம்தான் விஸ்வரூபம்.

நம் பார்வை விரியட்டும்.

விஸ்வரூபம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. நாம் தான் நம் பார்வையை குறுக்கிக் கொண்டு  அதை உணர்வதை தவிர்க்கிறோம்.

நீங்கள் நினைத்தால் இன்றே அந்த விஸ்வரூப தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


No comments:

Post a Comment