Monday, July 24, 2023

பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி

 பகவத் கீதை - 2.60 - இந்திரியங்கள் வழி செல்லும் புத்தி 


यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः।

इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः


yatato hy api kaunteya puruṣasya vipaścitaḥ

indriyāṇi pramāthīni haranti prasabhaṃ manaḥ


யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|

இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந:


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/260.html


(pl click the above link to continue reading)


யததோ = கடின விடா முயற்சி 

ஹியபி  = இருந்தாலும் 


 கௌந்தேய = குந்தி மகனே 


புருஷஸ்ய = ஒருவன் 


விபஸ்²சித: = அறிவுள்ள 


இந்த்³ரியாணி = புலன்கள் 


ப்ரமாதீ²நி = அலைகழிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு 


ஹரந்தி = கொண்டு செல்லப்படும் 


ப்ரஸப⁴ம் = வலுக்கட்டாயமாக 


மந: = மனம், புத்தி 


நாம் வாழ்வில் பல முடிவுகளை எடுக்கிறோம். அவை அறிவு சார்ந்த முடிவா? உணர்வு சார்ந்த முடிவா என்று எப்படி அறிந்து கொள்வது. 


கோபம் வரும் போது, ஏதேதோ பேசி விடுகிறோம். என்னதான் படித்து, அறிவு இருந்தாலும், அந்த நேரத்தில் புத்தி மந்தமாகிப் போய் விடுகிறது அல்லவா?


உணவு கட்டுப்பாடு வேண்டும். கண்டதையும் தின்னக் கூடாது என்று முடிவு எடுத்து இருப்போம். இருந்தும், ஒரு நல்ல தின் பண்டத்தைக் கண்டால் கை தானே போகிறது அல்லவா?  அறிவு எங்கே போனது?


எல்லாம் படிப்போம். எல்லாம் தெரியும். ஆனால், ஒரு சில நேரத்தில் புலன்கள் நம் புத்தியை தன் பாட்டுக்கு இழுத்துச் சென்று விடும். 


புலன்கள் யானை மாதிரி. புத்தி என்பது அதை கொண்டு செல்லும் யானை பாகன் மாதிரி. பாகன் எப்படித்தான் ஓட்டிச் சென்றாலும், யானைக்கு ஒரு கடையில் சென்று பழத்தை தின்ன வேண்டும் என்று ஆசை வந்து விட்டால், பாகன் என்ன முயன்றாலும் அதை கட்டுப் படுத்த முடியாது. 


நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், நம் முடிவுகள் எல்லாமே சரியான முடிவுகள் என்று நாம் சொல்ல முடியாது. நம்மை அறியாமல், நம்மையும் மீறி நாம் சில முடிவுகளை எடுத்து விடுகிறோம். 


அப்படி என்றால் என்ன செய்வது?


முதலில், நான் எடுத்த முடிவு சரிதான் என்று சாதிக்கக் கூடாது. நாம் எடுத்த முடிவு உணர்வுகளால் உந்தப்பட்டு, புலன்களால் இழுத்துச் செல்லப்பட்ட முடிவாக இருக்கலாம். அடம் பிடிக்கக் கூடாது. 


இரண்டாவது,  பெரிய முடிவுகளை நம்மைவிட அறிவில் சிறந்தவர்களை கொண்டு சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பயம், ஆசை, போன்றவற்றால் உந்தப்பட்டு தவறான பாதையில் சென்று விடக் கூடாது. 


இங்கே, அர்ஜுனன் போர் செய்ய மாட்டேன் என்கிறான். அது சரியான முடிவா?  பாசம் என்ற உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவு எடுக்கிறான். அதன் விளைவுகள் அவனுக்குத் தெரியவில்லை. 


மூன்றாவது, முடிவுகள் எடுக்கும் முன், சில கோட்பாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும். எதனால், எதற்கு இந்த முடிவை எடுக்கிறோம் என்று. இல்லை என்றால், அறிவு பற்ற ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும். 


உதாரணமாக, அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும்?  போர் செய்யாமல் இருக்க ஆயிரம் காரணம் இருக்கிறது. போர் செய்ய என்ன காரணம்?


அவன் ஒரு க்ஷத்ரியன். தர்மத்துக்காக போராட வேண்டியது அவன் கடமை. அந்த கடமை, பொறுப்பு, தர்மம், அறம் என்ற கோட்பாடுகள் இல்லை என்றால், புலன்கள் செல்லும் பக்கம் எல்லாம் போக வேண்டி இருக்கும். 


கண்ணன் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறான்  "படித்து அறிந்த அறிஞனைக் கூட, புலன்கள் ஒரு கண நேரத்தில் இழுத்துச் சென்று விடும் " என்று. 


சில கொள்கைகளை, சில வரைமுறைகளை வைத்துக் கொண்டு அதன் படி வாழப்  பழக வேண்டும். 


No comments:

Post a Comment