Monday, January 7, 2019

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில்

கீதை - 2.37 - துணிந்து , எழுந்து நில் 


हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||


ஹதோ = கொன்றால்

வா = மறுபக்கத்தில்

ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்

ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்

ஜித்வா = வென்ற பின்

வா = மறுபக்கம்

போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்

மஹீம் = இந்த உலகை

தஸ்மாது = எனவே

உத்திஷ்ட = எழுந்து நில்

கௌந்தேய = குந்தி புத்திரனே

யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்

க்ருதநிஸ்²சய: = துணிந்து,


இந்த யுத்தத்தில் இறந்தால் சுவர்க்கம் போவாய். வென்றால் இந்த உலகை ஆண்டு அனுபவிப்பாய். எனவே துணிந்து எழுந்து நின்று போர் செய்வாய். 


இந்த மாதிரி சில ஸ்லோகங்கள் இருக்கிறது. இந்த ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு, கீதை வன்முறையை தூண்டுகிறது என்று விமரிசனம் செய்பவர்கள் உண்டு.

அர்ஜுனன், அன்பின் வயப்பட்டு, உறவினர்களை கொல்ல மாட்டேன்,  ஆசிரியரை கொல்ல மாட்டேன்  , எனக்கு பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன் என்கிறான்.

கண்ணன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? "அர்ஜுனா, நீ எவ்வளவு நல்லவன். யுத்தம் சரி இல்லை. அன்பான , அமைதியான வழியே சிறந்தது. சமாதானம் தான் நல்லது " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு...போர் செய், செத்தால் சுவர்க்கம், இல்லை என்றால் இந்த பூமி....என்று யுத்தம் வேண்டாம் என்று சொன்னவனை வலுக் கட்டாயமாக யுத்தத்தில் பிடித்து தள்ளுகிறான் கண்ணன்.

இது சரியா?

அமைதி வழியை விட்டு விட்டு, மக்களை கொன்று குவிக்கும் போர் செய்ய தூண்டும் கீதை ஒரு நல் வழி காட்டும் நூலா ?

இதற்கு உரை எழுதியவர்களும் கண்ணன் யுத்தம் செய்யத்தான் சொல்கிறான் என்று சொல்கிறார்கள்.

நான் அதை அப்படி பார்க்கவில்லை.

சற்று விரிவாக பார்ப்போம்.

ஒரு வேலையை செய்யும் போது அதில் வெற்றியும் வரலாம். தோல்வியும் வரலாம்.

தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. பெரிய வேலையை எடுத்தால், பெரிய வெற்றி வரலாம், அல்லது பெரிய தோல்வி வரலாம். தோல்விக்கு பயந்து நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

அதெல்லாம் என்னால் முடியாதுப்பா, நமக்கும் அதுக்கும் சம்பந்தம் கூட கிடையாது, எனக்கு அடைப்படையே தெரியாது..நான் எப்படி அதை செய்ய முடியும் என்று நாம் பெரிய வேலைகளை நினைப்பது கூட கிடையாது.

மாறாக, துணிந்து ஒரு பெரிய வேலையை கையில் எடுத்து செய்ய ஆரம்பித்தால் , வெற்றி பெற்றால் நல்லது. அதில் தோல்வி அடைந்தாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சில உதாரணங்கள் பார்க்கலாம்.

இந்த வருடம் நான் 10 கிலோ எடை குறைக்கப் போகிறேன் என்று ஒரு பெரிய  குறிக்கோளை  கையில் எடுத்து அதற்க்காக வேலை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி என்று பல முயற்சிகள் செய்கிறேன். முடிவில் நான் 10 கிலோ எடையை குறைத்து விட்டேன் என்றால் மகிழ்ச்சி. ஒரு வேளை அதில் தோல்வி அடைந்து 8 கிலோ தான் குறைக்க முடிந்தால், அதுவும் நல்லது தானே. அது மட்டும் அல்ல இந்த உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி எல்லாம் என் உடலுக்கு பல நன்மைகளை தந்திருக்கும். என்னால் 10 கிலோ எடையை குறைக்க முடியாமல் போய் இருக்கலாம் (அது ஸ்வர்கம்). 8 கிலோ எடை குறைந்தது (இந்த உலகை ஆள்வாய்) நல்லது தானே.

ஒரு இளைஞன் வேலைக்குப் போய் கொண்டே மேலே படிக்க நினைக்கிறான். நேரம் இருக்காது. படிப்பது கடினமாக இருக்கும். ரொம்பவும் முயற்சி செய்கிறான். படித்து பட்டம் பெற்றால் நல்லது. ஒரு வேளை முடியவில்லை என்றால், படித்துப் பெற்ற அறிவு நல்லது தானே. ஸ்வர்கம் அல்லது இந்த உலகம் என்று கண்ணன் குறிப்பது நல்லது தான்.

வள்ளுவரும் இதையே கூறுகிறார்:

கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது

என்கிறார்.

குறிபார்த்து முயலை வேல் எறிந்து கொள்வதை விட யானையை எதிர்த்து போர் செய்து அதன் மேல் வேல் எறிந்து அது யானையை கொல்லாமல் போனாலும் பரவாயில்லை என்கிறார்.

யானை மேல் எறிந்த வேல் தப்பி இருக்கலாம். ஆனால், யானையோடு எப்படி போர் செய்வது, அந்த தைரியம், அந்த திட்ட மிடுதல், எல்லாம் அதில் கிடைத்த இலாபம் அல்லவா?

பெரிதாக நினையுங்கள். தோல்வியை பற்றி கவலைப் படாதீர்கள். பெரிய வேலையில் தோற்றாலும் அது கூட நல்லதுதான்.

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து படித்தால், வெள்ளியாவது கிடைக்கும். நல்லதுதானே.

என்னால் முடியாது, நான் தோற்று விடுவேன், எனக்கு திறமை இல்லை, அறிவு பத்தாது என்று நினைத்து  சோம்பி இருந்து விடாதீர்கள்.

பெரிதாக எதையாவது தொடங்குங்கள்.

வென்றாலும் தோற்றாலும் அது உங்களுக்கு நல்லதே.

என்ன செய்யப் போகிறீர்கள் ?

புது வீடு, புதிதாக எதையாவது அறிந்து கொள்வது, ஒரு கோடி பணம் சம்பாதிப்பது,  பத்து கிலோ எடை குறைப்பு ....என்று ஏதாவது தொடங்குங்கள்.

சரியா ?

https://bhagavatgita.blogspot.com/2019/01/237.html





No comments:

Post a Comment