Saturday, November 17, 2018

பகவத் கீதை - 2.30 - நீ வருந்தாதே

பகவத் கீதை - 2.30 - நீ வருந்தாதே 


देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि॥३०॥

தே³ஹீ நித்யமவத்⁴யோऽயம் தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத்ஸர்வாணி பூ⁴தாநி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-30||


தே³ஹீ  = உடலை உடையவன்

நித்யம் = நிரந்தரமாக

அவத்யோ = வதைத்தல் என்றால் கொல்லுதல். அ + வதை என்றால் கொல்லப் பட முடியாதது

அயம் = அது

தேஹே  = உடலில்

ஸர்வஸ்ய = எங்கும் நிறைந்து இருக்கிறது

பாரத = பாரத குலத் தோன்றலே

தஸ்மாத் = அதனால்

ஸர்வாணி = அனைத்து

பூதாநி = உயிர்களிலும்

ந = இல்லை

த்வம் = நீ

ஸோசிது = கவலைப் படுவது

மர்ஹஸி = தகாது

உடலில் உள்ள அதை கொல்ல முடியாது. எனவே நீ எந்த உயிரைப் பற்றியும் கவலை கொள்வது தகாது. 

நமது சிறு வயது புகைப் படத்தைப் பார்த்தால், நாமா அது என்று ஆச்சரியப் படுவோம். அப்படி ஆச்சரியம் வரவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்று பாருங்கள். இரண்டு வயது, ஒரு வயது, ஆறு மாத குழந்தை வடிவத்தைப் பாருங்கள். இப்போதுள்ள வடிவையும் பாருங்கள். ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? எங்கே அந்த குழந்தை? எங்கே போய் விட்டது ? கண், காது, மூக்கு, முடி, பல் என்று எல்லாமே மாறிப் போய் விட்டதே. அதற்கும் இப்போதுள்ள உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அந்த உருவம் இறந்து போய் விட்டது தானே ?

சரி, அப்போது இருந்த மன நிலை இருக்கிறதா ? ஒரு வயதில், இரண்டு வயதில், ஐந்து வயதில், பத்து வயதில் இருந்த மனம் இப்போது இருக்கிறதா ?

உடலும் அது மாதிரி இல்லை.

மனமும் அது மாதிரி இல்லை.

அப்படி என்றால் இப்போது உள்ளது எங்கிருந்து வந்தது? ஏதாவது ஒரு தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா?

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. மனம் மாறிக் கொண்டே இருக்கிறது.

பழையன இறந்து புதியன பிறந்து  கொண்டே இருக்கிறது.

இருந்தும் நான் என்ற அந்த ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது அல்லவா.

பத்து வயதில் உள்ள நானுக்கும், ஐம்பது வயதில் உள்ள நானுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இருந்தும் , இரண்டும் ஒரே ஆள் தான் என்று நினைக்கிறோம்.

அந்த உடம்பு காணாமலே போய் விட்டது. தேடினாலும் கிடைக்காது. இருந்தும் நான் என்பது இந்த உடம்புதான் என்று நாம் நினைக்கிறோம்.

எந்த உடம்பு ? பத்து வயது உடம்பா ? இப்போது உள்ள உடம்பா ? நாளை இருக்கப் போகும் உடம்பா ?

புரிகிறதா ?

இறப்பு என்பது ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது உங்களுக்குள்.

உங்கள் உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. திடீரென்று ஒரு நாளில் இந்த உடலும் மனமும் மாறுவது இல்லை.

அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது.

கொஞ்சம் இறந்து, கொஞ்சம் பிறந்து என்று ஒவ்வொரு நாளும் இந்த இறப்பும் , பிறப்பும் உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அதற்காக நீங்கள் வருத்தப் படுகிறீர்களா ? ஐயோ என் அறிவு வளர்ந்து விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ? ஐயோ என் உடல் வளர்ந்து விட்டதே என்று வருத்தம் வருமா ?

மாற்றம் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த இறப்பைக் கண்டு நீ வருத்தம் கொள்ளாதே என்கிறான் கண்ணன்.

இந்த மேலோட்டமான (உடல் மற்றும் மனம்) இறப்பிற்கு பின்னால் தொடரும் "நான்" என்ற அந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

மாற்றத்தை அனுமதி.

பழைய சிந்தனைகள் மறையட்டும். புது சிந்தனைகள் பிறக்கட்டும்.

பழைய செல்கள் போகட்டும். புது செல்கள் உருவாகட்டும்.

இது புரிந்தால், மரணம் பற்றிய பயம் போகும்.

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நம் துக்கம் எல்லாம், இந்த மாற்றத்தை நாம் மறுதலிக்கும் போது தான்.

நெருங்கிய ஒருவர் இறந்து போகிறார் என்றால், நமக்கு துக்கம் வருகிறது. ஏன் ? அந்த மாற்றத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

அது முடியுமா ?

அதற்காக வருந்துவது சரி தானா ?

சரி இல்லை என்கிறான் கண்ணன்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

https://bhagavatgita.blogspot.com/2018/11/230.html

No comments:

Post a Comment