கீதை - 14.23 - குணங்களால் சலனம் அடையாமல் இருக்க
उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥१४- २३॥
உதா³ஸீநவதா³ஸீநோ கு³ணைர்யோ ந விசால்யதே |
கு³ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட²தி நேங்க³தே || 14- 23||
உதாஸீநவத் = உதாசீனம் செய்பவனைப் போல
அஸீநோ = அமர்ந்து இருப்பான்
குணை = குணங்களால்
யோ = எவன் ஒருவன்
ந = இல்லை
விசால்யதே = அலைகழிக்கப் படுவதில்லை, சலிப்படைவதில்லை
குணா =குணங்கள்
வர்தந்த = நிகழும்
இதி = இப்படித் தான்
யேவ = நிச்சயமாக
யோ = அவன்
அவ திஷ்டதி = ஸ்த = நிலையாக. அவ திஷ்டதி = ஸ்திரமாக இருப்பான்
இங்கதே = சலனம் அடையாமல்
குணங்கள் இப்படித்தான் வரும் போகும் என்று அறிந்து, அவற்றை புறக்கணிப்பவன் போல இருப்பான்; அசைவற்று இருப்பான்; குணங்களால் அலைகழிக்கப் பட மாட்டான்.
குணங்களால் அலைகழிக்கப் படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
நான்கு விஷயங்கள் சொல்கிறார் வியாசர்.
முதலாவது, குணங்களின் தன்மைகளை அறிந்து கொள்வது.
இது சற்று ஆழமாக சிந்திக்க வேண்டிய .ஒன்று.
குணங்களின் தன்மை என்றால் என்ன ? அவற்றை எப்படி அறிந்து கொள்வது ?
எந்த குணங்கள் எப்போது தலை தூக்குகிறது என்று அறிய வேண்டும். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, பொதுவாக இந்த குணங்கள் சில விதிகளுக்கு உட்பட்டு வருகின்றன போகின்றன. இவற்றை மிக மிக நுண்மையாக கவனித்து நம் பெரியவர்கள் சிலவற்றை நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.
அவை,
1. குணங்களும் நேரங்களும் - ஒவ்வொரு குணமும் ஒவ்வொரு நேரத்தில் தலை தூக்கும். உதாரணமாக சாத்வீகம் அதி காலையில் உச்சம் பெரும். சூரிய உதயத்திற்கு முன். ஒரு நான்கு அல்லது நாலரை மணி வாக்கில் சாத்வீகம் உச்சியில் நிற்கும். அந்த நேரத்தில் எழுந்து படிப்பது, பூஜை செய்வது போன்ற நல்ல காரியங்கள் செய்து பாருங்கள். படிப்பது அப்படியே மனதில் ஏறும்.
"காலை எழுந்தவுடன் படிப்பு" என்று பாரதி சொன்னது சும்மா பாட்டுக்காக சொன்னது இல்லை.
பகல் ஏற ஏற ரஜோ குணம் தலை தூக்கும். ,ஆக்கம், செயல் என்று ஓட வைக்கும்.
"மாலை முழுவதும் விளையாட்டு" என்றான் பாரதி.
இரவில் தமோ குணம் தலை தூக்கும். சோம்பல், அசதி, மயக்கம், செயலின்மை என்ற தமோ குணங்கள் வெளிப்படும்.
2. குணங்களும் மற்ற கால அளவைகளும் - எப்படி ஒரு நாளில் குணங்கள் மாறி மாறி வருகின்றதோ அது போல ஒரு வாரத்திலும், மாதத்திலும், வருடத்திலும் குணங்கள் மாறி மாறி வரும். எது எப்போது என்று மற்றொரு ப்ளாகில் பார்ப்போம்.
3. குணங்களும் உணவுகளும் - சில வகை உணவுகள் சில குணங்களை தூண்டி விடுகின்றன. நீங்கள் உங்களை கவனித்துப் பார்த்தால் தெரியும்....எந்த குணம் தூக்கலாக இருக்கிறது என்று கவனியுங்கள். அதற்கு முன்னால் எந்த உணவை உட்கொண்டீர்கள் என்று பாருங்கள். ஒவ்வொரு உணவும் ஒரு குணத்தை உருவாக்கும்.
4. குணங்களும் மூச்சும் : நம் மூச்சு எப்படி இருக்கிறதோ அதன் படி குணங்கள் மாறும்.
“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
என்றான் பாரதி. மூச்சின் சுழற்சியில் முக்குணங்களும் மாறும்.
இப்படி குணங்கள் எவ்வெவ்வற்றால் பாதிக்கப் படுகிறது என்று அதன் தன்மையை அறிய வேண்டும்.
இரண்டாவது, குணங்களால் சலிப்படையக் கூடாது. குணங்கள் வரும் போகும். அவற்றால் கோபமோ சலிப்போ அடையக் கூடாது. அது அப்படித்தான் இருக்கும். தினமும் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைவது போல. நீங்கள் அதைப் பற்றி சலித்து என்ன ஆகப் போகிறது.
மூன்றாவது, மிக முக்கியமானது, உதாசீனம் செய்பவர்களைப் போல இருப்பான். வியாசர் குணங்களை உதாசீனம் செய்யச் சொல்லவில்லை. உதாசீனம் செய்தவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருப்பான்.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
எடுத்த உடனேயே உதாசீனப் படுத்து என்றால் "அதெல்லாம் முடியாது, இது கேக்க நல்லா இருக்கு ஆனால் நடை முறைக்கு சாத்தியம் ஆகாது " என்று நாம் ஒதுக்கி விடுவோம். எனவே, அதற்கு பயிற்சி தருகிறார் வியாசர். உதாசீனம் செய்பவர்களைப் போல இரு. நாளடைவில் உன்னாலும் முடியும். அதில் உள்ள நன்மைகளைக் கண்டு நீயே உதாசீனம் செய்யத் தொடங்கி விடுவாய் என்பது மறைமுக கருத்து.
நான்காவது, அசைவற்று இருப்பான். அசைவற்று இருப்பான் என்றால் ஏதோ சிலை மாதிரி இருப்பான் என்று அல்ல அர்த்தம். நல்லதும் வரும், தீமையும் வரும். நல்லது வந்தால் தலை கால் புரியாமல் ஆடுவதும் இல்லை, தீமை வந்தால் குடியே முழுகிப் போனது போல உடைந்து போவதும் இல்லை. இவை எல்லாம் குணங்களின் விளையாட்டு என்று அறிந்து சலனம் இன்றி இருப்பான்.
இதில் ஒரு படி மேலே போய் சிந்தித்தால், இன்பமும் துன்பமும் வரும்போது சலனம் இன்றி இருப்பான் என்பது போய் சலனம் இன்றி இருப்பதால் இன்பமும் துன்பமும் வருவது இல்லை என்பதும் புரியும்.
வாளித் தண்ணீரில் சூரியனின் பிம்பம் தெரிகிறது. நீர் சலனம் அடைந்தால் பிம்பமும் சலனம் அடையும். பிம்பம் சலனம் அடையக் காரணம் சூரியன் அல்ல, வாலி நீரில் எற்பட்ட சலனம். சலனம் நின்றால் பிம்பம் அலைவது இல்லை.
இந்த உலகம் அமைதியாகத் தான் இருக்கிறது.
குணங்களால் உந்தப்பட்ட அறிவும் மனமும் சலனம் அடைந்து அதனால் இன்பமும் துன்பமும் அடைகின்றன. சலனம் நிற்கும் போது இன்பமும் துன்பமும் மறையும்.
"அசையாமல் இருப்பான்"
ப்ளாகை மூடி விட்டு மனதுக்குள் அசை போட்டுப் பாருங்கள்.
குணங்களின் தன்மையை அறிவது, அவைகளின் சுழற்சியை அறிவது, உதாசீனம் செய்பவர்களைப் போல இருப்பது, சலனம் இல்லாமல் இருப்பது....
உங்களை நீங்களே ஆராயத் தொடங்கினால் இவை புரியத் தொடங்கும்.
புரிய புரிய குணங்களின் சங்கிலியில் இருந்து விடுபடுவீர்கள்.
அந்த நாள் சீக்கிரம் வர வாழ்த்துக்கள்.
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1423.html )
No comments:
Post a Comment