Tuesday, March 15, 2016

கீதை - 14.10 - முக்குண கலப்பு

கீதை - 14.10 - முக்குண கலப்பு 


रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥१४- १०॥

ரஜஸ்தமஸ்சாபி பூய ஸத்த்வம் பவதி பாரத |
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா² || 14- 10||



ரஜஸ் = ரஜோ குணம்

தமஸ் = தமோ குணம்

சா = மேலும்

அபிபூய = மேற்செல்கிறது

ஸத்த்வம் = சத்வ குணம்

பவதி = ஆகிறது

பாரத = பாரத குலத் தோன்றலே

|
ரஜ:= ரஜோ குணம்

ஸத்த்வம் = சத்வ குணத்தையும்

தமஸ் = தமோ குணத்தையும்

ச = மேலும்

எவ = ஆகிறது

தம: = தமோ குணம்

ஸத்த்வம் = சத்வ குணம்

ரஜஸ் = ரஜோ குணம்

ததா = மேலும்




பாரதா, சில சமயங்களில் சத்வ குணம், ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி தான் மேலெழுகிறது. அதே போல் சில சமயம், ரஜோ குணம் சத்வ மற்று தமோ குணத்தை அடக்கி மேலெழுகிறது. அதே போல், சில சமயம், தமோ குணம் சத்வ மற்றும் ரஜோ குணத்தை அடக்கி மேலெழுகிறது.

எந்த ஒன்று மனிதனும் நல்லவனா அல்லது கெட்டவனா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று திகைப்போம்.

நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என்று கேட்டால் ?

பெரும்பாலும், நல்லவர் என்றே பதில் சொல்லுவோம்.

உண்மையில் நீங்கள் நல்லவரா ?

உங்களை, உங்களுக்கு முழுவதும் தெரியுமா ?

இதற்கு விடை தெரியாது என்பதுதான்.

ஏன் என்றால், நல்லவனும், கெட்டவனும் எல்லோருக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறான். எப்போது யார் வெளி வருவார் என்று யாருக்கும் தெரியாது.

நல்லவனுக்குள் கெட்டவனும், கெட்டவனுக்குள் நல்லவனும் மறைந்து கிடைக்கிறார்கள்.

கைகேயி நல்லவளா ? கெட்டவளா ?

நல்லவளாகத்தான் இருந்தாள். கூனி சொல் கேட்டு கெட்டவளாக ஆனாள் .

இது எப்படி நிகழ்கிறது ?

கீதை சொல்கிறது ....நமக்குள் சத்துவ, ரஜோ மற்றும் தமோ குணங்கள் நிறைந்து கிடக்கிறது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு குணம் வெளிப்பட்டு நிற்கிறது.

ஒரு குணம் வெளிப்பட்டு நிற்கும் போது மற்ற இரண்டு குணங்களும் அடங்கிப் போய் விடுகின்றன.

மறைந்து போவது இல்லை, அடங்கிப் போய் விடுகின்றன.

அடங்கிப் போன ஒன்று , மற்றொரு சமயத்தில் உத்வேகம் கொண்டு எழும். நீருக்குள் அமுக்கி பிடித்து வைத்திருந்த பந்து கையை எடுத்தவுடன் துள்ளி எழுவது போல.

குணங்கள் ஒன்றை ஒன்று அழுத்தி மற்றவை வெளிப்படுகின்றன என்பது செய்தி.

இதில் இருந்து நாம் பெரும் பாடம் என்ன ?

முதலாவது, நல்லவன் என்றும் கெட்டவன் என்றும் யாரும் இல்லை. குணங்கள் மிகுந்தும், குறைந்தும் வெளிப்படுவதால் நல்லவனாகவும் கெட்டவனாகவும் தெரிகிறோம். யாரையும், முழுமையாக நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ கூறி விட முடியாது.

இரண்டாவது, அவனா இப்படி செய்தான் ? இருக்காதே, அவன் ரொம்ப நல்லவன் ஆயிற்றே , என்று யார் மேலும் சந்தேகப் பட வேண்டாம். நீங்கள் மிக மிக  நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருப்பவன், உங்களால் நினைத்துக் கூட பார்க்க  முடியாத ஒரு கெட்ட காரியத்தை செய்யல்லாம். எல்லாம் குணங்களின் லீலை.

மூன்றாவது, குணங்கள் ஒவ்வொன்றும் மிஞ்சி நிற்க போட்டி போடுகின்றன. நல்லவனாய் இருப்பவனுக்குள் இருக்கும் கெட்ட குணம் நேரம் பார்த்து இருக்கும் வெளிப்பட. யாரையும் முழுவதும் நம்புவது முடியாத காரியம்.

நான்காவது, இந்த குணங்களின் அலைகள் நம் பிரயத்தனத்தில் இல்லை. இருந்தால் எப்போதும் சாத்வீக குணத்திலேயே இருந்து விடுவோமே. எந்த குணம் எப்போது மிஞ்சி நிற்கும் என்று நமக்குத் தெரியாததால், எப்போது நாம் நல்லவனாக  இருப்போம், அல்லது வேறு விதமாக இருப்போம் என்பது நம் கையில் இல்லை.

ஐந்தாவது, மிக முக்கியமான ஒன்று....குணங்கள் மேல் எழுவதும், அடங்கிப் போவதும் நம் கையில் இல்லை என்பதால் எப்போது எது நிகழும் என்று நமக்குத் தெரியாது. எனவே, குணங்களைத் தாண்டி நாம் சென்று விடவேண்டும். குணங்களின் பிடியில் இருந்து நாம் விடுபட வேண்டும். சாத்வீகம் நல்ல குணம் தானே என்று இருந்தால், மற்றொரு சமயத்தில் சாத்வீகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு, தமோ குணம் மேலெழுந்து நிற்கலாம். எனவே, குணங்களின் பிடியில் இருந்து விடுதலை அடைய வேண்டும்.


மனவியலின் ஆழமான கருத்துகளை இரண்டு வரியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு சொல்லி இருக்கிறது கீதை.

எப்படி குணங்களின் ஆதிக்கத்தை அறிந்து கொள்வது ? எப்படி குணங்களின் பிடியில் இருந்து விடுபடுவது ?

உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன் அறிந்து கொள்ள.

வாருங்கள் , மேலும் பயணிப்போம்.

(For other slogas from Gita...http://bhagavatgita.blogspot.in/2016/03/1410.html )



















No comments:

Post a Comment