Sunday, March 20, 2016

கீதை - 14.16 - குணங்கள் எங்கிருந்து வருகின்றன ?

கீதை - 14.16 - குணங்கள் எங்கிருந்து வருகின்றன?


कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥१४- १६॥

கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப²லம் |
ரஜஸஸ்து ப²லம் து³:க²மஜ்ஞாநம் தமஸ: ப²லம் || 14- 16||

கர்மண: = செயல்களின்

ஸுக்ருதஸ்ய = சுக்கிரதசை = சு + க்ர + தஸ்ய = 'சு' என்றால் உயர்ந்த, சிறந்த. க்ர  என்றால் காரியம். உயர்ந்த நல்ல (செயல்களின்)

ஆஹு: = சொல்லப் படுகிறது

ஸாத்த்விகம் = சாத்வீக குணம்.

நிர்மலம் = தூய்மையான

பலம் = பலன்


ரஜஸஸ் து = ரஜோ குணத்தின்

பலம்  = பலன்

து:கம் = துக்கம்

அஜ்ஞாநம் = அறிவீனம்

தமஸ: = தமோ குணத்தின்

ப²லம் = பலன்

சத்வ குணமுடைய  நிர்மலத் தன்மையே நல்ல செய்கையின் பலன் என்பர்.  ரஜோ குணத்தின் பலன்  துன்பம். தமோ குணத்தின் பலன்  அறிவின்மை.

எல்லோருக்கும் சாத்வீக குணம் மிகுந்து இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எப்படி சாத்வீக குணத்தை அதிகப் படுத்துவது ?

படிப்பதன் மூலம், தியானத்தின் மூலம், சாத்வீக குணத்தை அதிகப் படுத்த  முடியுமா ?

நல்ல காரியங்களின் விளைவு சாத்வீக குணம்.

நீங்கள் சாத்வீக குணம் உங்களுக்குள் நிறைந்து இருக்க வேண்டும் என்று விரும்பினால், உயர்ந்த , நல்ல காரியங்களை செய்து கொண்டிருங்கள்.ஒவ்வொருமுறை நல்ல காரியம் செய்து முடிக்கும்போதும் சாத்வீகம் தலை தூக்கும்.  எப்போதுமே நல்ல காரியங்களையே செய்து கொண்டிருந்தால் தானே சாத்வீகம் ஓங்கி நிறுக்கும்.

நான் எல்லா கெட்ட காரியங்களையும் செய்வேன், எனக்குள் சாத்வீகம் ஓங்கி நிற்க வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

முதலில் காரியம், பின் குணம். நாளடைவில் குணம் படிந்து விடும். பின் குணத்தில் இருந்து காரியம் பிறக்கும்.

எது நல்ல காரியம், எது கெட்ட காரியம் ?

இங்குதான் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை வருகிறது. குழந்தைகள்  சிறியவர்களாக இருக்கும் பொழுது அவர்களுக்கு நல்லது கெட்டதை சொல்லித் தந்து அவர்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அப்படி அவர்கள் செய்து வந்தால், நாளடைவில் அவர்களுக்குள் சாத்வீகம் உயர்ந்து நிற்கும்.

வயதான பின், நல்லவர்களின், உயர்ந்தவர்களின் தொடர்பை நாட வேண்டும். அது நம்மை நல் வழிப் படுத்தும். நல்ல வழியில் சென்று நல்ல காரியங்களைச் செய்து வந்தால் சாத்வீகம் உச்சம் பெரும்.

நல்ல காரியங்களை விடுத்து அல்லாத காரியங்களை செய்தால் ரஜோ குணம் தலை எடுக்கும். அது துன்பத்தில் தள்ளிவிடும்.

நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல , சோம்பேறியாய் இருந்தால், தமோ குணம் தலைப் படும். அது அறிவீனத்தில் கொண்டு சேர்க்கும்.

எனவே, செயல்கள் (அல்லது செயலின்மை) குணங்களை நிர்ணயிக்கிறது.

நல்லதே நினையுங்கள். நல்லதே செய்யுங்கள். உங்களுக்குள்ளும் சாத்வீகம் நிறையும்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1416.html

No comments:

Post a Comment