கீதை - 14.8 - தமோ குணம்
तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥१४- ८॥
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் |
ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||
தம = தமோ குணம்
து = மேலும்
அஜ்ஞாநஜம் = அறிவீனத்தில் இருந்து பிறக்கிறது
வித்தி = அறி
மோஹநம் = மயக்கம், குழப்பம்
ஸர்வ = அனைத்து
தேஹிநாம் = இணைந்துள்ள, பிணைத்துள்ள, சேர்ந்துள்ள
|
ப்ரமாதா = பித்து பிடித்து, மனக் குழப்பம் அடைந்து,
அலஸ்ய = சோம்பேறித்தனத்தில்
நித்ராபி = தூக்கத்தில்
தந் = அது
நிபத்நாதி = பிணைக்கிறது
பாரத = பாரத குலத் தோன்றலே
தமோகுணம் அறிவீனத்தில் பிறக்கிறதென்று அறிந்து கொள். இது அனைத்து உயிர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி, தவறு, சோம்பல் மற்றும் உறக்கத்தால் கட்டுப் படுத்துகிறது.
கீதையை பலர் உண்மையிலேயே அதை வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும் என்றுதான் படிக்கிறார்கள்.
ஆனால், படிக்க படிக்க...அதில் உள்ளது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வருமா என்று சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு வேதாந்ததுக்கு, வாதத்துக்கு சரியாக இருக்கும், நடைமுறை சாத்திய கூறு குறைவு என்று தள்ளி வைத்து விட்டு வேலையைப் பார்க்க போய் விடுகிறார்கள்.
இது அறியாமையினால் விளைவது.
இரண்டாவது சில பேர், நல்லாத்தான் இருக்கு, ஆனா இப்ப முடியாது. பிள்ளைகளை படிக்க வைக்கணும், அவங்க நல்ல வேலைக்குப் போகணும், அவங்களுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கணும், அப்பா அம்மாவைப் பார்க்கணும் ....இது எல்லாம் முடிந்த பின் பார்க்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு விடுகிறார்கள்.
இது சோம்பேறித்தனத்தால் விளைவது. இப்ப வேண்டாம், அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போடும் குணம்.
இன்னும் சில பேர், செய்ய முயற்சிப்பார்கள், முழுவதும் இல்லை, அரைகுறையாக செய்வது, பின் சரியாக வரவில்லை என்று விட்டு விடுவது. இது தூக்கத்தால் வருவது.
வாழ்க்கையில் எதை எதையோ தேடி அலைகிறோம்.
குடும்பம், கணவன்/மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, மற்ற சுற்றம் என்று அவர்களின் வாழ்வாதாரத்திற்கு , முன்னேற்றத்திற்கு என்று அலைகிறோம்.
செல்வம், புகழ், அதிகாரம், என்று இவைகள் வந்தால் வாழ்கை இனிமையாக இருக்கும் என்று நினைத்து அவற்றின் பின்னால் அலைகிறோம்.
அன்பு, காதல், காமம், பக்தி, நேசம் என்று பல்வேறு உணர்வுகளால் உந்தப் பட்டு அவை இழுக்கும் இழுப்புகெல்லாம் இழுபட்டு அவற்றின் பின்னால் அலைகிறோம்.
எது சரி, எது தவறு என்று தெரிவது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று உந்த அவற்றால் அலைகழிக்கப் படுகிறோம்.
வேண்டியதை அடைந்த பின் , இதற்கா இத்தனை அலைந்தோம் என்று வருந்துகிறோம்.
எதை அடைய வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்று அறிவில்லாமல் செய்து கொண்டே இருக்கிறோம்.
நாம் செய்வது சரிதானா என்று கேள்வி கூட கேட்பது இல்லை. இயந்திரம் போல செய்து கொண்டிருக்கிறோம்.
இவை எல்லாம் தமோ குணத்தின் வெளிப்பாடு.
அறிவற்ற செய்கை.
மயக்கம், குழப்பம், சோம்பல், தூக்கம், போன்றவற்றில் ஆழ்ந்து விடுவது.
எப்போதெல்லாம் நாம் அறிவின் துணையின்றி காரியம் செய்கிறோமோ, செய்யும் காரியத்தில் தெளிவின்றி செய்கிறோமோ, செய்ய வேண்டிய காரியத்தை தள்ளிப் போடுகிறோமோ...அப்போதெல்லாம் தமோ குணத்தின் பிடியில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த குணங்களைப் பற்றி மேலும் பார்ப்போம்.
(For other slogas: http://bhagavatgita.blogspot.in/2016/03/148.html )
No comments:
Post a Comment