Monday, March 7, 2016

கீதை - 14.3 - நான் இந்த உலகை உருவாக்குகிறேன்

கீதை - 14.3 - நான் இந்த உலகை உருவாக்குகிறேன் 


मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥१४- ३॥

மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந்க³ர்ப⁴ம் த³தா⁴ம்யஹம் |
ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத || 14- 3||


மம = என்

யோநி = ஆரம்பம், தொடக்கம்

மஹத்= பெரிய, உயர்ந்த

ப்ரஹ்ம = பிரமம்

தஸ்மிந் = அதில்

கர்பம்  = கர்பம்

ததாமி = நான் செலுத்துகிறேன்

அஹம் = நான்

ஸம்பவ: = சம்பவிக்க, பிறக்க, தோன்ற

ஸர்வ பூதாநாம் = அனைத்தையும்

ததோ  = அதன் பிறகு

பவதி = வந்தன

பாரத = பாரத வம்சத்தவனே

பெரிய பரப்பிரம்மமே எனக்கு ஆதாரம்; அதன் கர்பத்தில் நான் என்னை செலுத்துகிறேன்.  பாரதா, அனைத்தும் அதிலேதான் பிறக்கின்றன.

இவ்வளவுதான் அந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம். இதில் இருந்து நாம் என்ன அறிய முடியும் ?

சிந்திப்போம்.


ஒரு நாள் இந்த வாழ்கை இனிமையாக இருக்கிறது. இன்னொரு நாள் அதுவே துக்கமாக இருக்கிறது.

சில சமயம் சுகமாக இருக்கும் வாழ்க்கை, சில சமயம் சுமையாகவும்  இருக்கிறது.

இது சுகமா ?சுவையா ? இன்பமா ? துன்பமா ?

ஒரு சிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அந்த சிலை எப்படி தோன்றியது ?

சிலை தோன்றக்  கல் வேண்டும். கல் தான் ஆதாரம். கல் இல்லாமல் சிற்பம் வர முடியாது.

வெறும் கல் மட்டும் சிற்பமாக முடியுமா ? முடியாது.

சிற்பியின் கற்பனை மற்றும்  அவன் கை வண்ணம் சேரும்போது அது சிற்பமாக உருவாகிறது.

அது போல, இந்த உலகம் உண்டாக அதில் உள்ள பொருள்கள் தான் ஆதாரம். "மஹத்³ப்³ரஹ்ம" என்றால் முடிவே இல்லாத  என்று பொருள்.  முடிவே இல்லாத உலகம்,  பரந்து விரிந்த பொருட்களால் ஆனது.

"அதன் கர்ப்பத்தில் என்னைச் செலுத்தி நான் இந்த அனைத்து உயிர்களையும் உருவாக்குகிறேன்"

இந்த உலகம் நம் கற்பனையில், நாம் எவ்வாறு அதனோடு தொடர்பு கொள்கிறோமோ அதன் மூலம் அது உருவாகிறது.

எப்படி சிற்பியின் கற்பனையும், கை வண்ணமும் சேரும்போது சிற்பம் உருவாகிறதோ அப்படி, நம் எண்ணங்களும் செயல்களும் இந்த உலகை உருவாக்குகின்றன.

ஒரு கல்லுக்குள் இருந்து ஆண் வடிவ சிற்பமும் வரலாம், பெண் வடிவ சிற்பமும் வரலாம், ஒரு விலங்கின் வடிவம் கூட வரலாம். கல் ஒன்று தான், சிற்பி ஒருவன்தான் என்றாலும் அவன் கற்பனைக்கு ஏற்ப சிற்பம் மாறுபடுவதைப் போல,  உலகம் ஒன்றுதான், நீங்கள் ஒருவர் தான், உங்கள் கற்பனைக்கு, எண்ணங்களுக்கு ஏற்ப உலகம் மாறுகிறது.

அதைத்தான் கண்ணன் இங்கே சொல்கிறான்,

"அதன் கர்பத்தில் நான் என்னை செலுத்துகிறேன்.  பாரதா, அனைத்தும் அதிலேதான் பிறக்கின்றன."

நாம் நம் கற்பனைகளை, கனவுகளை, ஏக்கங்களை, எதிர்பார்புகளை இந்த உலகில் ஏற்றுகிறோம்.

அதற்கு தக்க, இந்த உலகம் நமக்கு உயிர் பெற்று எழுகிறது.

புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது....

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

நான் ஒரு பெண்ணை பார்க்கிறேன். அவள் யாரோ, நான் யாரோ.

அவள் என்னைப் பாதிக்கவில்லை, இது வரை.

எனக்கு அவளைப் பிடிக்கத் தொடங்குகிறது.

சந்தோஷப் படுகிறேன்.

அவளை காதலிக்கிறேன்.

இன்னும் சந்தோஷம்.

அவள் என் காதலை ஏற்றுக் கொள்கிறாள்...நான் இறக்கை இல்லாமல் பறக்கிறேன்.

அல்லது, அவள் என் காதலை மறுத்து விடுகிறாள்...

நான் துன்பத்தில் விழுகிறேன்.

இந்த இன்பமும் துன்பமும் என்னால் உருவாக்கப்  பட்டது.

சுகம், துக்கம், இன்பம், துன்பம், உயர்வு, தாழ்வு, என்ற அனைத்தும் என்னால் இந்த  உலகைக் கொண்டு உருவாக்கப் பட்டது.

எப்படி நான் இவற்றை உருவாக்குகிறேன் ? ஏன் நான் உருவாக்குகிறேன் ? எது என்னை உருவாக்கச் செய்கிறது ?

இவற்றை நான் உருவாக்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ? இவற்றை உருவாக்குவது என் கையில் இருக்கிறதா ? அல்லது நான் செலுத்தப் படுகிறேனா ?

 வாருங்கள்,சேர்ந்து சிந்திப்போம்.

For other slogas: http://bhagavatgita.blogspot.com/2016/03/143.html

No comments:

Post a Comment