Thursday, March 3, 2016

கீதை - 13.33 - ஞான ஒளி

கீதை - 13.33 - ஞான ஒளி 


यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः ।
क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥१३- ३३॥

யதா² ப்ரகாஸ²யத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி: |
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா² க்ருத்ஸ்நம் ப்ரகாஸ²யதி பா⁴ரத || 13- 33||

யதா =  அப்படி

ப்ரகாஸயத் = பிரகாசத்தை தருகிறதோ

ஏக  = ஒரு

க்ருத்ஸ்நம் =  முழுவதும்

லோகம் = உலகம் முழுமைக்கும்

இமம் = இந்த

ரவி:  = சூரியன்

க்ஷேத்ரம்  = க்ஷேத்ரம்

க்ஷேத்ரீ =க்ஷேத்ரத்தை அறிபவன், கொண்டவன்

ததா = அதே போல

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ப்ரகாஸயதி = பிரக்கசிக்கச் செய்கிறான்

பா⁴ரத = பாரத குலத்தவனே

சூரியன் ஒருவனாய், எப்படி இந்த உலகம் அனைத்தையும் ஒளியுறச்செய்கிறானோ, அதே போல க்ஷேத்திரத்தை உடையவன் , க்ஷேத்திரம் முழுவதும் ஒளியுறச் செய்கிறான்.

மிக மிக முக்கியமான சுலோகம்.

சூரியன் எவ்வாறு அனைத்தையும் ஒளியுறச் செய்கிறானோ....

இதற்கு என்ன அர்த்தம்?

முதலாவது, உலகை ஒளி அடையச் செய்வது என்று ஒரு வேலையை சூரியன் செய்வது இல்லை. அது பாட்டுக்கு வருகிறது. போகிறது. அது அப்படி ஒளிப் பிழம்பாய் இருப்பதால் அதன் முன்னால் எல்லாம் ஒளி  பெறுகின்றன. ஒளி தருவது சூரியனின் வேலை அல்ல. அதன் இயற்கை.  வேலை என்றால் அதற்கு ஒரு தொடக்கமும்  முடிவும் இருக்கும் அல்லவா ? சூரியனுக்கு அப்படி  அல்ல. அது தன் இருப்பின் மூலமே அனைத்தையும் ஒளி பெறச் செய்கிறது.

இரண்டாவது, சூரியனின் முன்னால் அனைத்தும் ஒளி பெறுகின்றன. நல்லதும், அல்லாததும் ஒளியூட்டப் படுகின்றன. சூரியனுக்கு பேதம் இல்லை. இவன் நல்லவன், இவன் மேல் ஒளி சிந்துவோம். இவன் கெட்டவன் , இவனுக்கு ஒளி  கிடையாது என்று மறைத்து வைப்பது அல்ல. எல்லோருக்கும் பொது.

மூன்றாவது, நல்ல செயலும், தீய செயலும் சூரிய ஒளியால் நடக்கும். ஆனால், அந்த சூரியன் அதற்கு பொறுப்பு இல்லை. யாரும் அதை பொறுப்பாக்குவதும் இல்லை. அது அதன் நிலையில் இருக்கிறது. அதன் ஒளியில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, சூரியன் அதைப் பற்றி கவலைப் படுவது கிடையாது.

நான்காவது, நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதன் பலன்கள் சூரியனைப் போய் அடைவது இல்லை. அது கேட்பதும் இல்லை, நாம் கொடுப்பதும் இல்லை. அது தன்  இயற்கையில் இருக்கிறது.

சரி, இதெல்லாம் தெரிந்தது தானே. இதை ஏன் இவ்வளவு விஸ்தாரமாக விளக்குவானேன் என்ற கேள்வி எழலாம்.

விளக்கியது சூரியனின் இயல்பைச் சொல்ல அல்ல.


"அந்த சூரியனைப் போல க்ஷேத்ரம், க்ஷேத்ரத்தை அறிபவன் அல்லது அறிந்து , கொண்டவன் க்ஷேத்ரத்தை ஒளியுறச் செய்கிறான்"

மீண்டும் ஒரு முறை க்ஷேத்ரம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

நமக்கு வெளியே உள்ள அனைத்தும் (பொருள்கள் + உயிர்கள்) + நம் புலன்கள் (கண், காது, மூக்கு போன்றன) + புலன்கள் நமக்குத் தரும் உணர்வுகள் (சுவை, ஓசை, ஊறு , நாற்றம் என்பன) + இந்த புலன்கள் தரும் செய்திகளை பகுத்து அறியும் அறிவு இவை அனைத்தும் க்ஷேத்ரம் (இடம் அல்லது field).

இவற்றை தெளிவுறச் செய்வது க்ஷேத்ரன்ஞன் என்ற   என்னுள் இருக்கும் அந்த ஞான ஒளி . எப்படி சூரியன் தன் ஒளியால் உலகில் உள்ளவற்றை தெளிவு பெறச் செய்கிறதோ, அது போல எனக்குள் இருக்கும் அந்த ஞான தீபம், ஞான ஒளி இந்த உலகை எனக்குத் தெளிவு பெறச் செய்கிறது.

புலன்கள் அறிவது இல்லை. புலன்கள் செய்திகளை கொண்டு செல்வதோடு சரி. உலகம் எது, அது எப்படிப் பட்டது, அதில் உள்ளது எது, நல்லது எது, அல்லது எது என்று புலன்கள் சொல்லும் செய்திகளை கொண்டு இந்த உலகை நமக்கு விளங்கச் செய்வது நம் அறிவென்ற ஒளி. ஞானம் என்ற தீபம்.

அந்த ஒளிச் சுடரின் முன்னால் எல்லாம் தெளிவு பெறுகிறது, எல்லாம் நடக்கிறது.

அந்த சுடரை ஏற்றுங்கள். அது பிரகாசிக்கட்டும். உங்கள் வாழ்வில் அது ஒளி தரட்டும். அந்த ஒளி அஞ்ஞானத்தை போக்கும்.

ஆழ்வார்கள் ஏற்றிய ஞான தீபம் அது.

வையம் தகளியாக வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று 

ஞான சுடர் விளக்கு அது....


அன்பே தகளியாக, ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் 

அந்த ஞானச் சுடர், உண்மையை கண்டு கொள்ள உதவும்....

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் 
செருக்கி வரும் பொன்னாழி கண்டேன் 
புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று - 

சுடர் வந்தவுடன், ஒளி  வரும். ஒளி வந்தவுடன் இருள் மறையும். அஞ்ஞானம் மறையும் போது உண்மை தானே தெரியும். ஒளி வரவும், இருள் விலகவும், உண்மை வெளிப்படவும் நாள் பல ஆகாது. உடனே நிகழும்.

"என்னாழி வண்ணன்பால் இன்று "

இராமலிங்க அடிகள் சொன்ன

"அருட்பெரும் ஜோதி"  அது

மணிவாசகர் கூறிய

“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”

அந்த ஞான ஒளி, உங்களுக்குள்ளும் தோன்றி நல்வழி காட்டட்டும்.

காட்டும்.


















No comments:

Post a Comment