கீதை - 14.4 - நானே பரம பிதா
सर्वयोनिषु कौन्तेय मूर्तयः संभवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥१४- ४॥
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||
ஸர்வ = அனைத்தின்
யோநிஷு = ஆதி, மூலம், தோற்றம்
கௌந்தேய = குந்தி புத்திரனே
மூர்தய: = வடிவங்கள் , தோற்றங்கள்
ஸம்ப⁴வந்தி = உதிகின்றன
யா: = அவை
தாஸாம்= அவைகளில்
ப்³ரஹ்ம மஹத் = உயர்ந்த பிரம்மத்தின்
யோநி = தோற்றத்தில், மூலத்தில்
அஹம் = நான்
பீஜப்ரத = விதைக்கும், தோன்றவைக்கும்
பிதா = தகப்பன்
நான் தரும் விதை மற்றும் இந்த பெரிய பிரம்மமே அனைத்து வடிவங்களின் தோற்றத்திற்கும் காரணம். நானே அனைத்திற்கும் பிதா.
முந்தைய ஸ்லோகத்தில் சொன்னதை மீண்டும் இங்கே வலியுறுத்துகிறான் கண்ணன்.
பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் என் எண்ணங்களை ஏற்றி (நானே விதை) அதற்கு நான் உயிர் தருகிறேன்.
நான் காணும் உலகம், என்னால் உருவாக்கப் பட்டது. அதற்கு நானே காரணம்.
நிலம் இல்லாமல் விதை முளைக்க முடியாது. அது போல, என் எண்ணங்கள் மட்டும் உலகை படைக்க முடியாது. பிரக்ரிதி, க்ஷேத்ரம் என்ற வெளி உலகு வேண்டும்.
என் எண்ணங்கள் அதில் கலக்கும் போது , என் உலகம் தோன்றுகிறது.
இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால்:
முதலாவது, இந்த உலகம் மாயை , வெறும் கற்பனை என்று கீதை சொல்லவில்லை.
ப்³ரஹ்ம மஹத் என்ற பெரிய பிரபஞ்சம் வேண்டும். அதுவே ஆதாரம்.
அதுதான் நிலம் . அந்த நிலத்தில் நம் எண்ணங்கள் கலக்கும் போது நமக்கான உலகம் உண்டாகிறது.
இரண்டாவது, என்ன மரம் வரப் போகிறது என்று மண் தீர்மானிப்பதில்லை, விதை தீர்மானிக்கிறது. இந்த உலகை இன்பமயமாக்குவதும், துன்பமயமாகுவதும் நம் கையில் இருக்கிறது. அதை மாற்றும் பிதா நாம். பெண் என்பவள் எப்படி ஆணின் விந்தை வாங்கி குழந்தையாக்கித் தருகிறாளோ அது போல, இந்த உலகம் நம் எண்ணங்களை வாங்கி நமக்கான உலகைத் தருகிறது.
மூன்றாவது, என்ன விதைகிறோமோ அது தான் முளைக்கும். பாகற்காய் விதையை விதைத்து விட்டு பலா மரம் வரவில்லையே என்றால் வராது. எது வேண்டுமோ அதை விதையுங்கள். தினை விதைத்தால் தினை அறுப்பீர்கள் . வினை விதைத்தால் வினைதான் அறுக்க முடியும்.
நான்காவது, விதை விதைத்த பின் வளர்வது நம் கையில் இல்லை. நிலமும் சூழ்நிலையும் பார்த்துக் கொள்ளும். விதைப்பது எல்லாம் முளைத்து விடுவதில்லை. நல்லதே விதைத்துக் கொண்டிருப்போம். அதில் ஏதேனும் முளை விட்டால் அது நல்லதாகவே இருக்கும்.
ஐந்தாவது, ஒரு முறை விதைத்து அது விளைந்து விட்டால் அதில் இருந்து மேலும் விதைகள் வரும். அந்த விதைகள் மேலும் பல தாவரங்களைத் தரும். மேலும் மேலும் வளர வேண்டாம் என்றால், விதைக்கமலேயே இருந்து விடுதல் நலம்.
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
என்பார் மணிவாசகர். வித்து மேல் விளையாமல் போக வேண்டும் என்று வேண்டுகிறார் அவர்.
அந்த விதை எங்கிருந்து வருகிறது ? அதை விதைக்காமல் இருப்பது எப்படி என்று மேலும் சிந்திப்போம்.
(For other slogas - http://bhagavatgita.blogspot.in/2016/03/144.html )
No comments:
Post a Comment