Tuesday, March 22, 2016

கீதை - 14.18 - முன்னேற

கீதை - 14.18 - முன்னேற 


ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥१४- १८॥

ஊர்த்வம் க³ச்ச²ந்தி ஸத்த்வஸ்தா² மத்யே திஷ்ட²ந்தி ராஜஸா: |
ஜகந்யகு³ணவ்ருத்திஸ்தா² அதோ க³ச்ச²ந்தி தாமஸா: || 14- 18||

ஊர்த்வம் = மேல் நோக்கி

க³ச்ச²ந்தி = செல்வார்கள்

ஸத்த்வஸ்தா = சாத்வீக குணம் கொண்டோர்

மத்யே = நடுவில்

திஷ்ட²ந்தி = இருப்பார்கள்

ராஜஸா: = ராஜச குணம் உடையோர்

|
ஜகந்ய கு³ண வ்ருத்தி ஸ்தா = கீழான குணத்தை கொண்டோர்

அதோ = கீழ்நோக்கி

க³ச்ச²ந்தி  = செல்வர்கள்

தாமஸா: = தமோ குணம் உடையவர்கள்

சாத்வீக குணம் உடையவர்கள் மேல் நோக்கிப் போகிறார்கள். 
ரஜோ குணம் உடையவர்கள் இடையில் நிற்கிறார்கள். 
தமோ குணம் உடையவர்கள் கீழ் நோக்கிப் போகிறார்கள். 


நமக்கு எந்த குணம் அதிகமாக இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது ?

யாரைக் கேட்டாலும் தயங்காமல் எனக்கு சாத்வீக குணம் தான் அதிகம் என்று தயங்காமல் சொல்வார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் தமோ குணம் இருக்கு, அதை விட்டு விட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மத்தபடி எனக்கு எப்போதும் சாத்வீகம்தான் என்று எல்லோரும் கூறுவார்கள்.

அது தானே உள்ளதிற்குள் நல்ல குணமாக இருக்கிறது.

இதைத் தெரிந்து வியாசர் சொல்கிறார்..."நீ நினைத்தால் போதாது...அதற்கு என்று சில நியதிகள் இருக்கு. ஒவ்வொரு குணமும் மிகுந்து இருக்கும் போது என்ன  நிகழும் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதன் படி நடந்தால் அந்தந்த குணங்கள் உனக்கு  உயர்ந்து இருக்கிறது என்று கண்டு கொள் " என்று பட்டியல் தருகிறார்.

சாத்வீக குணம் இருந்தால், நீங்கள் மேல் நோக்கிப் செல்வீர்கள்.

மேல் நோக்கி என்றால் படிக் கட்டில் ஏறியோ அல்லது lift ல் செல்வதோ அல்ல.

நாளுக்கு நாள் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள்.

நேற்றையை விட இன்று நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள்.

எதில் ? பணத்திலோ அல்லது சொத்து சேகரிப்பதிலோ அல்ல.

அறிவில், ஞானத்தில், பொறுமை போன்ற உயர்ந்த குணங்களில் நீங்கள் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே சென்றால் உங்களுக்குள் சாத்வீகம் ஓங்கி நிற்கிறது என்று அர்த்தம்.

சிந்தித்துப் பாருங்கள் , கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உயர்ந்து இருகிறீர்கள் என்று.

ஒரு பட்டியல் போடுங்கள்.

ரொம்ப ஒண்ணும் உயரவில்லை என்றால், ரஜோ குணம் கூடி நிற்கிறது என்று பொருள்.

முன்பு இருந்ததை விட இப்போது மோசமான நிலை என்றால், தமோ குணம் கூடி நிற்கிறது என்று பொருள்.

இது ஒரு புறம் நிற்கட்டும்.

இன்றிலிருந்து நீங்கள் உங்களை எப்படி உயர்த்திக் கொள்ளப் போகிறீர்கள் என்று  சிந்தியுங்கள்.

என்னென்ன தீய குணங்கள் இருக்கின்றது உங்களுக்குள் என்று உங்களுக்குத்தான் தெரியும்.

கோபம், பொறாமை, பேராசை, போன்ற கெட்ட குணங்கள் இருந்தால் அவற்றை  எப்படி மாற்றுவது என்று சிந்தியுங்கள்.

அதே போல , பரோபோகாரம், அன்பு, கருணை போன்ற நல்ல குணங்கள் இருந்தால் அவற்றை  எப்படி மேலும் விருத்தி செய்வது என்று சிந்தியுங்கள்.

அப்படி உயர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

ஆம். மிக மிக உயர்ந்த ஒருவர் இருக்கிறார். உங்களுக்கு மிக மிக பரிச்சியமானவர். அவர் யார் , அவர் எப்படி உயர்ந்தார் என்று நாளை பார்க்கலாம்.

ஒவ்வொருநாளும் உங்களை உயர்த்திக் கொண்டே போங்கள் .

சாத்வீகம் உச்சம் அடையும். சாத்வீகத்தின் உச்சத்தில் ஞானத்தின் தெளிவு பிறக்கும்.

இன்றே ஆரம்பியுங்கள்.

நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1418.html )

No comments:

Post a Comment