Wednesday, March 16, 2016

கீதை - 14.11 - வாசலில் வெளிச்சம்

கீதை - 14.11 -  வாசலில் வெளிச்சம்


सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥१४- ११॥


ஸர்வத் வாரேஷு தேஹே ஸ்மிந்ப்ரகாஸ  உபஜாயதே |
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத் விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத || 14- 11||

ஸர்வ = அனைத்து

த்வாரேஷு = வழிகளிலும்

தேஹே = தேகமுடைய

அஸ்மிந் = இதில்

ப்ரகாஸ = பிரகாசம்

உபஜாயதே = வெளிப் படுமானால்

ஜ்ஞாநம் = அறிவு , ஞானம்

யதா = அப்போது

ததா = அதனால்

வித்யாத் = அறிவு

விவ்ருத்தம் = மேலதிகமாகி

ஸத்த்வம்  = சத்வ குணம்

இதி = எனவே

யுத = நிச்சயமாக


உடம்பில் அனைத்து வாயில்களிலும் ஞானத்தின்  ஒளி உருவாகுமாயின்  அப்போது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்று அறிந்து கொள்.

மனிதனை ஆறறிவு கொண்டவன் என்கிறோம். அது என்ன ஆறு அறிவு ? எது முதல் அறிவு ? எது இரண்டாம் அறிவு ?

இதற்கு விடை காண வேண்டும் என்றால் அறிவு எப்படி வருகிறது என்று சிந்திக்க வேண்டும்.

நமது புலன்கள் நமக்கு அறிவை கொண்டுவந்து தருகின்றன.

இது கருப்பு, இது உயரம், அது சுடும், இது குளிர்ச்சி, இது இனிமையான இசை, இது இனிப்பு பதார்த்தம் என்று நம்மை சுற்றியுள்ள உலகில் உள்ள அறிவை நமக்கு நம் புலன்கள் கொண்டு வந்து தருகின்றன.

ஆசிரியர் சொல்லக் கேட்டு அறிந்து கொள்கிறோம். கேட்பதற்கு செவி துணை செய்கிறது. அது ஒரு புலன்.

சிலவற்றை பார்த்து தெரிந்து கொள்கிறோம். பார்பதற்கு கண் உதவுகிறது. அது ஒரு புலன்.

இப்படியாக நாம் நமது ஐந்து புலன்கள் வழியாக அறிவைப் பெறுகிறோம்.

ஒரு புலன் வேலை செய்யாவிட்டால், அதன் மூலம் வரும் அறிவு நமக்கு இருக்காது.

உதாரணமாக, கண் பார்வை இல்லாத ஒருவர், நிறம் என்றால் என்ன, எது என்ன நிறம் என்ற அறிவைப் பெறவே முடியாது.

எனவே, ஐந்து புலன்கள் மூலம் அறியும் அறிவு ஐந்தறிவு.

அப்படியென்றால் ஆறாவது அறிவு எங்கிருந்து வந்தது ?

இந்த ஐந்தும் இல்லாமல், நாம் மனதால் நினைத்தும் , கற்பனை செய்தும் சில அறிவைப் பெறுகிறோம்.

உதாரணமாக, ஒரு மலை மேல் புகை வருகிறது என்றால் அங்கே நெருப்பு இருக்கும் என்று   அறிகிறோம். எப்படி ? நெருப்பை பார்க்கவில்லை, நெருப்பின் சூடு நம்மைத் தொடவில்லை. அதனால் கருகிய மணமும் நம் நாசியைத் தொடவில்லை. இருந்தும், அங்கே நெருப்பு இருக்கும் என்று அறிகிறோம்.

அது மனத்தால் அறிவது.

ஐந்த புலன்கள் + ஒரு மனம் சேர்த்தால் நமக்கு ஆறறிவு உள்ளவர்கள் என்று பெயர் வந்தது.

கண் இல்லாத ஒருவர் , காது கேளாத ஒருவர் ஐந்தறிவு உள்ளவர்தான்.

விலங்குகளுக்கு மனதால் சிந்தித்து அறியும் அறிவு இல்லை, அதனால் அவை ஐந்தறிவு உள்ளவை என்று கூறுகிறோம்.

மனம் அசைவதால் மனிதன் என்று பெயர்.

நன்றாக கூர்ந்து கவனித்தால் தெரியும், குழந்தைகளை அது , இது என்று தான் சொல்வோம். அதுக்கு பசிக்குது போல, அதுதான் அது அழுகுது என்கிறோம்.

ஏன் ?

அவனுக்கு பசிக்கிறது என்றோ, அவளுக்கு பசிக்கிறது என்றோ சொல்வதில்லை. ஏன் ? அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று தெரியாமல் இல்லை. தெரியும். இருந்து அதை அது இது என்று ஒரு விலங்கை குறிப்பது போலவே கூறுவோம்.

ஏன் என்றால், குழந்தைக்கு இன்னும் மனம் வேலை செய்யத் தொடங்கவில்லை.

அதே போல இறந்த மனிதனை , இன்னும் பாடிய எடுக்கலையா என்றுதான் கேட்ப்பார்கள். இன்னும் அவரை எடுக்கலையா என்று கேட்பது இல்லை. மனம் நின்றால் மனிதன் என்பது இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

கீதை என்ன சொல்கிறது - அறிவு வரும் வாயில்கள் எல்லாம் ஞானத்தால் ஒளி பெற்றால் , அங்கே சாத்வீகம் உயர்ந்து நிற்கிறது என்று பொருள்.

ஒளி பெற்றால் என்றால், ஏதோ யாரோ டார்ச் அடிக்கிறார்கள் என்று இல்லை.

வெளியில் இருந்து அறிவு உள்ளே வரும்போது, உடலின் உள் நுழையும் அந்த இடம், ஞானத்தால் விளங்கப் பெற வேண்டும்.

உலகை அறிவு பூர்வமாக பார்க்க வேண்டும். உணர்ச்சி பூர்வமாக பார்க்கக் கூடாது.

எது சரி, எது தவறு என்று அறிவு சொல்ல வேண்டும்.

ஏதோ ஒரு கோலா பானம் குடிக்கிறோம் என்றால், நாக்கு சொல்கிறது நன்றாக இருக்கிறது என்று. இது சரிதானா , இது நல்லதுதானா என்று அறிந்து கொண்டால் அதை குடிக்க மாட்டோம். சுவை என்ற உணர்வு , நாக்கு என்ற வாசல் வழியாக உள்ளே செல்லும் போது நல்லது கெட்டது உணரும் ஞானத்தின் ஒளி நமக்கு வழி காட்ட வேண்டும்.


உள்ளே அனுப்பும் எந்த அனுபவத்தையும், உணர்ச்சியையும் அறிவின் மூலம் ஒளியேற்றி, ஆராய்ந்து அனுப்ப வேண்டும்.

அது மட்டும் அல்ல, நாம் தெரியாமல் கெட்டுப் போன ஒரு உணவை உண்டுவிட்டால், நம் உடல் வாந்தி, வயிற்று இளைச்சல் என்று அந்த கெட்ட உணவை வெளியேற்றி விடும்.

ஆனால், தவறான ஒன்றை நம் மூளைக்குள் போட்டுவிட்டால், அதை வெளியே அனுப்ப முடியாது. ஒரு முறை உள்ள சென்று விட்டால், அது நிரந்தரமாய் நிற்கும். எனவே, எதை உள்ளே அனுப்புகிறோம் என்று அறிந்து தெளிந்தே அனுப்ப வேண்டும்.

அதைத்தான் கீதை சொல்கிறது...உடலின் அனைத்து வாயில்களிலும் ஞானத்தின் ஒளி ஊட்டப்பட்டால்....என்று.

அப்படி அறிவு பூர்வமாக சிந்தித்து, உலகை நாம் அறியும் போது சாத்வீக குணம்  உயர்ந்து நிற்கிறது என்று பொருள்.


உணர்வால் உந்தித் தள்ளப் படும்போது அறிவின் துணை கொண்டு அதை வெல்ல வேண்டும்.

சீதை என்ற அழகிய  பெண்ணை அடைய விரும்பினான் இராவணன். அது சரியல்ல என்ற ஞானம் வேலை செய்திருந்தால் அழிந்திருக்க மாட்டான்.

சாத்வீகம் மேலோங்கி நின்றால்,  அனுபவங்களும்,உணர்சிகளும் அறிவினால் விளக்கம்  செய்யப்  படும்.

 ரஜோ,தமோ குணங்களைப் பற்றி   அடுத்து வரும் சுலோகங்களில் சிந்திப்போம்.

(For other slogas , http://bhagavatgita.blogspot.com/2016/03/1411.html )

No comments:

Post a Comment