Monday, March 21, 2016

கீதை - 14.17 - குணமும் பலனும்

கீதை - 14.17 - குணமும் பலனும் 


सत्त्वात्संजायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥१४- १७॥

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச |
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோ ஜ்ஞாநமேவ ச || 14- 17||


ஸத்த்வாத் = சத்வ குணம்

ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது

ஜ்ஞாநம் = ஞானம்

ரஜஸோ = ரஜோ குணம்

லோப = பேராசை

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ப்ரமாத = மயக்கமும்

மோஹௌ =  குழப்பமும்

தமஸோ = தமோ குணத்தின்

பவதோ = ஒன்றாகிறது

அஜ்ஞாநம் = அறிவீனம்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

சத்வ குணத்தில் இருந்து ஞானம் பிறக்கிறது; 
ரஜோ குணத்தில் இருந்து பேராசை பிறக்கிறது 
தமோ குணத்தில் இருந்து  தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் பிறக்கின்றன. 


இந்த ஸ்லோகத்தைப் படிக்கும் போது ஏதோ ஒவ்வொரு குணத்தில் இருந்து ஒவ்வொன்று பிறக்கிறது என்று தோன்றும்.

சாத்வீக குணத்தில் இருந்து ஞானம், ரஜோ குணத்தில் இருந்து பேராசை, தமோ குணத்தில் இருந்து தவறுகள், குழப்பம், அறிவீனம் இவை தோன்றுவதாகத் நமக்கு புரிகிறது.

இல்லை.

சாத்வீக குணம் வந்த பின் , ஞானம் பிறக்குமா ? அப்படி என்றால் எவ்வளவு நாள் ஆகும் ? எவ்வளவு சாத்வீக குணத்திற்கு எவ்வளவு ஞானம் என்று ஏதாவது  அளவு இருக்கிறதா ?

குணங்களும் அவற்றின் பலன்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்தவை. ஒன்று வந்தபின் அடுத்தது வரும் என்று அல்ல. குணங்களும் அவற்றின் பலன்களும்  ஒன்றாக பிறக்கின்றன.

ஸஞ்ஜாயதே என்ற சொல்லுக்கு சம் + ஜனம் என்று பிரித்து உடன் பிறக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும்.

சாத்வீகம் தோன்றும் போது ஞானமும் தோன்றுகிறது.

சாத்வீகம் உச்சம் பெற பெற ஞானமும் உச்சமும் பெறும்.

அதே போலத்தான் ரஜோ மற்றும் தமோ குணங்களும் அவற்றின் பலன்களும்.


ஞானம் அதிகரிக்க வேண்டுமா ? சாத்வீகத்தை அதிகரித்துக் கொண்டே போங்கள் .

நிறைய துன்பம் வேண்டுமா ? ரஜோ குணத்தை கூட்டிக் கொண்டே போங்கள் .

மயக்கமும், குழப்பமும், அறிவீனமும் வேண்டுமா, தமோ குணத்தைக் கூட்டுங்கள்.

முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம் சாத்வீகம் எப்படி அதிகரிக்கிறது என்று. நல்ல காரியங்களைச்  செய்ய செய்ய சாத்வீகம் அதிகரிக்கும்.

சாத்வீகம் பிறப்பினால் வருவது அல்ல. செயலினால் வருவது. சில குடும்ப சூழ்நிலைகள்   நல்ல காரியங்களை செய்ய ஏதுவாக அமையலாம். அப்போது, இந்த குலத்தில் பிறந்ததனால் நமக்கு சாத்வீகம் வந்து விட்டது என்று தோன்றும். உண்மை அது அல்ல. அங்கு பிறந்ததனால், நல்ல காரியங்களை எளிதாக செய்ய முடிந்ததனால் சாத்வீகம் உச்சம் பெற்றது.

மேலும், என் மனம் அமைதியாக இருக்கிறது. நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்வது இல்லை. எனக்கு பேராசை கிடையாது.  மந்திரங்கள், பூஜை புனஸ்காரங்கள் எல்லாம்  ஒழுங்காகச் செய்கிறேன்...எனக்கு சாத்வீகம் கூடிவிட்டது என்று நினைக்கக் கூடாது.

இவை எல்லாம் சாத்வீக குணத்தின் அடையாளங்கள் அல்ல. தானம் செய்வது, பூஜை செய்வது, ஆச்சாரமாக இருப்பது, பக்தி செய்வது, போட்டி பொறாமை இல்லாமல் இருப்பது, பேராசை இல்லாமல் இருப்பது  இதெல்லாம் சாத்வீகமாகாது.

சாத்வீகத்திற்கு ஒரே பலன் தான் உண்டு - ஞானம்.  ஞானம் அதிகரித்தால் சாத்வீகம்  அதிகரிக்கிறது என்று அர்த்தம். அஞ்ஞானம் அதிகரித்தால் தமோ குணம் அதிகரிக்கிறது என்று பொருள். ரொம்ப துன்பப் படுகிறீர்களா ? ரஜோ குணம் உச்சம் அடைகிறது என்று பொருள்.

சாத்வீகம் என்றால் சாந்த குணம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஞானம் தான் சாத்வீகத்தின் வெளிப்பாடு.



அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு 
ஞானத் தமிழ் புரிந்த நான்  


ஞானம் சுடர் விட்டு பிராகாசிக்க வேண்டும். அதுதான் சாத்வீகம்.


 உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் பெற்றார் திருஞானசம்பந்தர்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
 பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
 உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் 
 தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் 


அறிந்தேன் எவரும் அறியா மறையை என்று அதிசயிப்பார் அபிராமி பட்டர்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!


மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே, அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே என்பார் மணிவாசகர்.

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானத் தன்னை யகல்விக்கும் நல்லறிவே


நல்லதே செய்யுங்கள். சாத்வீகம் வளரும். ஞானம் பெருகும். பெருகட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1417.html )

No comments:

Post a Comment