Saturday, March 12, 2016

கீதை - 14.7 - ரஜோ குணம்

கீதை -  14.7 - ரஜோ குணம்


रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥१४- ७॥

ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் |
தந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||

ரஜோ = ரஜோ குணம்

ராகா³த்மகம் = ஆர்வத்துடன் கூடிய விருப்பம்

வித்³தி = அறிந்து கொள்

த்ருஷ்ன = தாகம்

ஸங்க = சேர்தல் , கூடுதல்

ஸமுத்³ப⁴வம் = உருவாகிறது

தந் = அது

நிபத்நாதி = கட்டுதல், பிணைத்தல்

கௌந்தேய = குந்தியின் மகனே

கர்மஸங்கேந = செயல்களோடு சேர்வதனால்

தேஹிநம் = யார் உடலை கொண்டு இருக்கிறானோ


ரஜோகுணம் விரும்பும் இயல்பு உடையது.   ஆசையின் சேர்க்கையால் பிறப்பது. . குந்திமகனே, தொழிலின் சேர்க்கையால் நம்மை கட்டுப் படுத்துகிறது.

ரஜோ குணம் என்றால் என்ன ?

ஆர்வம், கிளர்ச்சி, ஆனந்தம், இன்பம் இவற்றை நாடுவது ரஜோ குணம்.

நாடுவது என்றால் ஏதோ கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பெரிய நட்டம் ஒன்றும் இல்லை என்பது போல இல்லை.

தண்ணீர் தாகம் கொண்டவன் எப்படி நீரை நாடுவானோ அதுபோன்ற நாட்டம் அது.

பொன், பொருள், பெண், செல்வாக்கு, புகழ் என்று எதையும் ஒரு உணர்ச்சி பூர்வமாக, மிகுந்த ஆவலுடன் தேடுவது ரஜோ குணம்.

தேடுவதில் உள்ள தாகம், கிடைத்த பின் அதை தக்கவைத்துக் கொள்வதில் உள்ள பற்று இது இரண்டும் ரஜோ குணத்தின் கூறுகள்.

ரஜோ குணம் செயலைத் தூண்டும். நம்மை ஓட வைக்கும். மேலும் மேலும் சேர்க்கச் சொல்லும். இன்பங்களை துயிக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கும்.

எல்லாம் இருந்தும், மாற்றான் மனைவியை தொட்டுப் பார்க்கத் தூண்டியது இராவணின் ரஜோ குணம்.

பரந்த சாம்ராஜ்யத்தில் , ஐந்து வீடு தரமாட்டேன் என்று ஐந்து இலட்சம் வீரர்களை  பலி கொடுத்தது துரியோதனின் ரஜோ குணம்.

வேண்டியது கிடைக்கும் வரை, ஓய்வில்லை , ஒழிச்சல் இல்லை. தேடியது கிடைத்த பின், அடுத்த ஒன்றை தேடத் தூண்டுகிறது.

வீடு வேண்டும், பங்களா வேண்டும், பெரிய கார் வேண்டும்,உலகம் எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும், என்று ஆசைகளைத் தூண்டி, செயல்பட வைப்பது ரஜோ குணம்.

தேடலின் ஆர்வம்.
அடைந்தவற்றை பாதுகாக்கும் பொறுப்பு என்ற இந்த  இரண்டின் மூலம் அது நம்மை பிணிக்கிறது. கட்டிப் போடுகிறது.

ஒவ்வொரு ஆசையும் ஒரு சங்கிலி.

ஆசையின் மூலம் அடைந்த ஒவ்வொன்றும் ஒரு சங்கிலி.

எத்தனை சங்கிலிகள்.

பேராசை எனும் பிணியில் பிணி பட்டு என்பார் அருணகிரி.

மனைவி, மக்கள், வீடு, கார், டிவி, நிலம், நகை,....என்று எத்தனை சங்கிலிகள்.

எப்போதுதான் இவற்றிலிருந்து விடுதலை அடைவது ?

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/147.html  )



No comments:

Post a Comment