Wednesday, March 9, 2016

கீதை - 14.5 - குணங்கள் நம்மை பிணிக்கின்றன

கீதை - 14.5 - குணங்கள் நம்மை பிணிக்கின்றன 


सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसंभवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥१४- ५॥

ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு³ணா: ப்ரக்ருதிஸம்ப⁴வா: |
நிப³த்⁴நந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹிநமவ்யயம் || 14- 5||


ஸத்த்வம் = சத்வம்

ரஜஸ் = ரஜஸ்

தம = தமஸ்

இதி = என

குணா: = குணங்கள்

ப்ரக்ருதி = பிரக்ரிதியில்


ஸம்ப⁴வா: = சம்பவிக்கின்றன

|
நிபத்⁴நந்தி = பிணைக்கின்றன

மஹாபாஹோ = பெரிய தோள்களை உடையவனே

தேஹே = உடலையும்

தேஹிநம் அவ்யயம் = உடலைக் கொண்டதையும் பிணைக்கின்றன




சத்வம், ரஜஸ், தமஸ் இந்த  மூன்று குணங்களும் குணங்கள் பிரகிருதியில் தோன்றுகின்றன. பெரிய தோள்களை உடையவனே, இவை உடலையும் உடலைக் கொண்டதையும் பிணைக்கின்றன. 

மிக மிக அற்புதமான அத்யாயம்.

இந்த சத்வம், ரஜஸ் , தமஸ் என்ற குணங்களைப் பற்றி மிக விரிவாக பின்னால் பார்க்க  இருக்கிறோம். எனவே, இப்போது அதில் மெனக்கெட வேண்டாம்.

இந்த குணம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் ?  குணம் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு  பிணைத்தல் என்று ஒரு பொருள் உண்டு. அதற்கு சரியான தமிழோ அல்லது ஆங்கில சொல்லோ இல்லை.

குணங்கள்தான் நம்மை இந்த உலகோடு பிணைக்கின்றன.

எப்படி என்று சிந்திப்போம்.

சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறது. நல்ல உணவு, இனிய சங்கீதம், நமக்கு பிடித்த புத்தகம், என்று எத்தனையோ பிடித்த விஷயங்கள் இருக்கின்றன.

ஏன் அவற்றை நமக்குப் பிடிக்கிறது ?

அவற்றின் குணங்கள்தான் காரணம்.

இனிப்பு என்ற குணம் பிடிக்கிறது, குளிர்ச்சி என்ற குணம் பிடித்து இருக்கிறது, லயமாக வரும்  சப்த்தம் பிடிக்கிறது.

இப்படி உலகில் உள்ளவைகளின் குணங்கள் சில நமக்கு பிடிக்கின்றன, சில பிடிப்பது இல்லை,  சிலவற்றில் நாம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கிறோம்.

பிடித்தவற்றை நாம் நமக்கே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்க ஆசைப் படுகிறோம். வேறு யாராவது  நமக்கு இல்லாமல் எடுத்துக் கொண்டு போய் விடக் கூடாதே என்று கவலைப் படுகிறோம்.

இதே போல் மற்ற குணங்களும்.

இப்படியாக குணங்கள் நம்மை இந்த உலகோடு பிணைக்கின்றன.

பிடித்த குணங்களை தேடி ஓடுகிறோம், பிடிக்காத குணங்களை விட்டு ஓடுகிறோம்.

இப்படியாக குணங்கள் நம்மை அலைகழிக்கின்றன.

சற்று கூர்ந்து சிந்தியுங்கள்.

எனக்கு ஒன்றைப் பிடிக்கிறது என்று சொல்லும் போது என்ன நிகழ்கிறது.

பிடித்தல் என்ற குணம் என்னில் எழுகிறது.

அந்த பிடித்தல் என்ற உணர்வு எழ அந்தப் பொருளின் ஏதோ ஒரு குணம் காரணமாகிறது.

"எனக்குப் பிடித்திருக்கிறது" என்று கூறும்போது, பிடித்தலாகிய உணர்வை, குணத்தை என்னோடு சேர்த்துக் கொள்கிறேன். அப்போது பிடித்தல் வேறு, நான் வேறு அல்ல. எனக்குப் பிடித்து இருக்கிறது.

இப்படி வெளியில் உள்ள ஒன்றின் குணம் என்னுள் ஒன்றைத் தூண்டி விட்டு இந்த  இரண்டுக்கும் ஒரு பிணைப்பு நிகழ்கிறது.

இந்த குணங்கள் எதனால் வருகின்றன, அவற்றின் விளைவுகள் என்ன, அவற்றை எப்படி கட்டுப் படுத்துவது, கட்டுப் படுத்தியவர்கள் எப்படி இருப்பார்கள், கட்டுப் படுத்தினால் என்ன நிகழும் என்று விரிவாக பார்க்க இருக்கிறோம்.

வாருங்கள்.

(For other slogas: http://bhagavatgita.blogspot.in/2016/03/145.html )

No comments:

Post a Comment