கீதை - 14.2 - பிறப்பும், இறப்பும் இல்லை
इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥१४- २॥
இத³ம் ஜ்ஞாநமுபாஸ்²ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா: |
ஸர்கே³ऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச || 14- 2||
இதம் = இந்த
ஜ்ஞாநம் = ஞானத்தை
உபாஸ்ரித்ய = உபாசித்த பின், கடை பிடித்தபின்
மம = என்
ஸாதர்ம்யம் = சஹ + தர்மியம் = என் நிலையை
ஆகதா: = அடைவார்கள், அடைந்தவர்கள்
ஸர்கே = பிறப்பிலும்
அபி = மேலும்
ந = இல்லை
உபஜாயந்தே = பிறப்பது (உப + ஜன் + யதே)
ப்ரலயே = பிரளய காலத்தில், அழிவு காலத்தில்
ந = இல்லை
வ்யதந்தி = நடுங்குவது இல்லை, பிறழ்வது இல்லை, சமநிலை தவறுவது இல்லை.
ச =மேலும்
இந்த ஞானத்தை அடைந்து, என் நிலையை அடைந்தோர், படைப்புக் காலத்தில் பிறப்பதும் இல்லை; ஊழிக் காலத்தில் இறப்பதும் இல்லை.
ஞானத்தில் உயர்ந்த ஞானத்தை உனக்கு விளக்குகிறேன் என்றான் கண்ணன் முந்தைய ஸ்லோகத்தில்.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெறுவதால் என்ன பயன் ? நிறைய செல்வம் கிடைக்குமா ? பதவி , அதிகாரம் இதுவெல்லாம் கிடைக்குமா ?
இல்லை, அதையும் தாண்டி, வேறு ஒன்று கிடைக்கும்.
அது,
முதலாவது, இறை நிலையை அடைவது. "என் நிலையை அடைந்து" என்று கூறுகிறான் கண்ணன். அதாவது, இந்த ஞானத்தைப் பெற்றால், கண்ணன் போன்ற நிலையை அடைய முடியும்.
இரண்டாவது, அந்த ஞானத்தைப் பெற்றவர்கள், தோன்றும் காலத்தில் தோன்றுவது இல்லை, அழிவு காலத்தில் அழிவது இல்லை.
இது என்ன புதுச் சிக்கலாக இருக்கிறது.
தோன்றும் போது தோன்றாமல் இருப்பது, அழியும் போது அழியாமல் இருப்பது என்றால் என்ன ?
தோற்றம் அழிவு என்பதை ஏதோ குழந்தை பிறப்பது, முதியவன் இறப்பது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
தோற்றம் என்றால் புதிதாக தோன்றுவது. அழிவது என்றால் ஏற்கனவே இருப்பது இல்லாமல் போவது.
தினம் தோறும் நாம் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அது வேணும், இது வேணும், அதுவும் வேணும், இதுவும் வேணும் என்று நாளும் நாளும் ஆசைகள் வளர்ந்து கொண்டே போகின்றன. பணம், செல்வம், புகழ், செல்வாக்கு, பட்டம், பதவி, அதிக்கரம், அனுபவம் என்று எல்லாவற்றிலும் மேலும் மேலும் வேண்டும் வேண்டும் என்று ஓடுகிறோம்.
அலைகிறோம்.
இந்த அலைச்சலை சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒன்று புரிபடும்.
எது வேண்டும் என்று அலைந்தோமோ, அது கிடைத்தவுடன் அலைச்சல் நிற்பது இல்லை. அந்த இடத்தில் வேறு ஒன்று புதிதாக வந்து விடுகிறது.
புதிய ஒன்றிற்காக அலைகிறோம் .
பழைய ஆசைகள் முடிந்து புது ஆசைகள் பிறக்கிறது. ஒரே சமயத்தில் பலப் பல ஆசைகள்.
வீடு வாங்க வேண்டும், கார் வேண்டும், வெளிநாட்டில் உல்லாச பயணம், பதவி உயர்வு, என்று இப்படி ஆயிரம் ஆசைகள் நம்மை போட்டு வறுத்து எடுக்கின்றன.
ஒரு ஆசை தீர்வதற்கு முன்பே பல புது ஆசைகள் பிறக்கின்றன.
ஒவ்வொரு ஆசையுடனும் நாம் நம்மை பிணைத்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு ஆசை பிறக்கும் போதும் நாம் புதிதாக உருவெடுக்கிறோம். அந்த ஆசை நிறைவேற வேண்டி திட்டம் போடுகிறோம், வேலை செய்கிறோம், படிக்கிறோம், யார் யாரையெல்லாமோ போய் பார்க்கிறோம்..ஏன் கடவுளைக் கூட துணைக்கு அழைத்துக் கொள்கிறோம்.
ஏன் இது நிகழ்கிறது. ஏன் அமைதியாக ஓட்டம் இல்லாமல், சலனம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல் இருக்க முடிவதில்லை ?
எது அலைகிறது ?
எது பூரணத்துவம் (perfection ) அடையவில்லையோ, அது அலைந்து கொண்டே இருக்கிறது.
பூரணத்துவம் அடைந்து விட்டால், ஓட்டம் நின்று விடும்.
ஊர் போய்ச் சேரும் வரைத்தானே பயணம். ஊர் வந்து சேர்ந்து விட்டால் பயணம் நின்று போகும் அல்லவா ? அது போல,
பூரணத்துவத்தை அடையும் வரை, இந்த அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு ஆசையுடனும் நாம் நம்மை ஒன்று படுத்திக் கொண்டு, அந்த ஆசைகளோடு நாம் பிறக்கிறோம்.
அந்த ஆசைகள் நிறைவேறும் போது , அந்த ஆசை இறந்து விடுகிறது...அதோடு சேர்ந்து நாமும் , அந்த ஆசையோடு கூடிய நாமும் இறக்கிறோம்.
வாடகை வீட்டில் இருப்பவன், ஒரு படுக்கை அறை உள்ள வீடு வேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதற்காக உழைக்கிறான், கடன் வாங்குகிறான், கடனை அடைக்கியப் பாடு படுகிறான்....இது ஒரு புது அவதாரம்.
கடனை அடைத்து முடித்தவுடன், அந்த ஆசை முடிந்து போகிறது. அடுத்து இரண்டு படுக்கை அறை உள்ள வீடு வேண்டும் என்று ஆசைப் படுக்கிறான்.
ஒரு படுக்கை அறை உள்ள வீட்டுக்குப் ஆசைப்பட்டவன் இல்லை. மறைந்து விட்டான். இறந்து விட்டான். இரண்டு படுக்கை அறை உள்ள வீட்டுக்கு ஆசைப் படுபவன் பிறந்து இருக்கிறான்.
இபப்டி ஒவ்வொரு ஆசைகளோடும் நம்மை இணைத்துக் கொண்டு, அது வேறு நாம் வேறு அல்ல என்று நினைத்துக் கொண்டு பிறந்து பிறந்து இறக்கிறோம்.
இந்த அத்தியாயத்தில் சொலப்பட்ட ஞானம் வந்தால், இந்த (ஆசை) பிறக்கும் போது நாம் பிறப்பதும், இந்த ( ஆசை ) இறக்கும் போது நாம் இறப்பதும் நிகழாது.
ஆசைகள் ஏன் நிகழ்கின்றன ? அவை எங்கிருந்து பிறக்கின்றன ? எந்தவிதமான ஆசை, எப்போது நிகழ்கிறது...அவற்றை எப்படி நம் கட்டுக்குள் கொண்டு வருவது...அவற்றை தாண்டி எப்படி போவது என்பது பற்றி எல்லாம் இந்த அத்தியாயம் கூறப் போகிறது.
உங்களைப் போலவே நானும் ஆவலாக இருக்கிறேன், இவற்றை அறிந்து கொள்ள.
(For other slogas , please visit: http://bhagavatgita.blogspot.in/2016/03/142.html )
No comments:
Post a Comment