கீதை - 13.32 - பற்றற்ற பற்று
यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते ।
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ॥१३- ३२॥
யதா = அப்படி
ஸர்வகதம் = எங்கும் இருந்தாலும்
ஸௌக்ஷ்ம்யாத் = சூக்க்ஷுமமாய் இருப்பதால்
ஆ காஸம் = ஆகாசம்
ந பலிப்யதே = கரை படாமல் இருப்பது போல
ஸர்வத்ர = எங்கும்
ஆவஸ்தித = இருப்பினும்
தேஹே = தேகத்தில்
ததா = அதே போல
ஆத்மா = ஆத்மாவும்
ந பலிப்யதே = கரை படிவது இல்லை
எங்கும் நிறைந்து இருந்தாலும் ஆகாயம் தன் நுண் தன்மையால் பற்று அற்று இருப்பது போல, உடம்பினுள் ஆத்மா இருந்தாலும் அது பற்று அற்று இருக்கிறது.
நான் என்பது இரண்டு பகுதிகளை உடையது.
முதாலவது, இந்த உடல். இந்த உடலை தொட்டு உணர முடியும், அதற்கு எடை, நிறம், உயரம், என்று மற்ற பொருள்களுக்கு உள்ளது போல அனைத்து இயற்பியல் மற்றும் வேதியல் குணங்களும் உண்டு. உடலை நாம் பார்க்க முடியும், தொட முடியும், நுகர முடியும்...
இரண்டாவது, தொட முடியாத, பார்க்க முடியாத, எடை இல்லாத, உருவம் இல்லாத ஒன்று.
அது என்ன ?
அப்படி நம்முள் பல விஷயங்கள் இருக்கின்றன.
நம் மனம், நம் அறிவு, நம் குணங்கள், ஞாபகங்கள், உணர்சிகள் என்று. இவையும் என் உடலோடு சேர்ந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.
என் மனமும், புத்தியும், அறிவும், உணர்சிகளும், ஞாபகங்களும் இல்லாவிட்டால் , வெறும் உடம்பு மட்டும் நானாக முடியாது.
"அவரு ரொம்ப நல்ல மனிதர்"
"நிறைய படிச்சவர்"
"கோபமே வராது அவருக்கு, சாந்த குணம்"
"அள்ளி அள்ளித் தரும் வள்ளல்"
என்றெலாம் மற்றவர்களைச் சொல்லும் போது , நாம் அவர்களின் உடலைப் பற்றி சொல்லுவது இல்லை.
இந்த இரண்டு பகுதிகளில், முதலாவதை ஸ்தூல சரீரம் என்றும், இரண்டாவதை சூக்ஷும சரீரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த சூக்க்ஷும சரீரம் கண்ணுக்குத் தெரியாது, நுண்மையானது, நம் உடலில் எங்கும் நிறைந்து இருப்பது.
இந்த உடலையும், இந்த மனம், அறிவு, சிந்தனை, உணர்சிகள் என்பனவற்றையும் செலுத்தும் சக்தியும் சூக்க்ஷுமமானது தான். அது எங்கும் நிறைந்து நிற்கிறது. நுண்ணியமானது.
இதில் முக்கியமானது என்னவென்றால், நல்லதும் கெட்டதும் , உடலைத் தொடும், நினைவைத் தொடும், ஆனால் இந்த சூக்க்ஷமமான சக்தியைத் தொடாது.
எப்படி என்றால்,எங்கும் நிரந்த ஆகாயம் போல என்கிறது கீதை.
அது என்ன ஆகாயம் போல ?
ஆகாயம் என்றால் ஏதோ வானம் என்று மேலே பார்க்கக் கூடாது.
ஆகாயம் என்றால் வெளி. உங்களுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் வெளி தான் ஆகாயம்.
எதிரில் இருக்கும் ஒருவரை இன்னொருவர் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். வார்த்தைகள் கடுமையானவைதான். புண் படுத்தக் கூடியவைதான். அந்த வார்த்தைகள் இருவருக்கும் இடைப்பட்ட வெளியில் (ஆகாய மார்கமாக) தான் செல்கிறது. இருந்தும், அது அந்த ஆகாயத்தில் ஓட்டுவது இல்லை.
ஒரு பெரியவர், தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த மற்றொருவரை ஆசீர்வதித்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்கிறார். அந்த வார்த்தைகளும் ஆகாயத்தில் ஒட்டுவது இல்லை.
ஆகாயத்தின் வழியாகத்தான் செல்கிறது. ஆனால், அதில் ஓட்டுவது இல்லை.
அது போல, நம் உடலுக்குள் இருக்கும் , சூக்க்ஷுமமான ஆன அந்த சக்தியில், உடல் செய்யும் நல்லது கெட்டது எதுவும் ஓட்டுவது இல்லை.
வண்டியில் பெட்ரோல் போட்டு கோவிலுக்கும் போகலாம், மதுக் கடைக்கும் போகலாம். பெட்ரோல் என்ன செய்யும்.
அதுதான் நம்மை செலுத்திக் கொண்டு வந்தது. ஆனாலும் நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு அந்த பெட்ரோலின் பங்கு ஒன்றும் இல்லை.
இந்த உடலைத் தாண்டி, இந்த எண்ணங்கள், மனம், ஞாபகம், உணர்வுகள் என்ற இவற்றையெல்லாம் தாண்டி, இவற்றை செலுத்தும் அது எது என்று சிந்திப்போம்.
No comments:
Post a Comment