கீதை - 13.31 - செயல் அற்றவன், பற்று அற்றவன்
अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥१३- ३१॥
அநாதி³த்வாந்நிர்கு³ணத்வாத்பரமாத்மாயமவ்யய: |
ஸ²ரீரஸ்தோ²ऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13- 31||
அநாதித்வாந் = தோற்றம் இல்லாமல்
நிர்குணத் வாத் = குணங்கள் இல்லாமல்
பரமாத்மா = பரமாத்மா
அயம் = அவன்
அவ்யய: = மாற்றமில்லாமல்
ஸரீர ஸ்த = சரீரத்தில் நிலை பெற்று இருந்தாலும்
அபி = மேலும்
கௌந்தேய = குந்தி மைந்தனே
ந கரோதி = அவன் செயல் படுவது இல்லை
ந லிப்யதே = பற்று கொள்வதும் இல்லை . அவன் மேல் கறை படிவதும் இல்லை
ஆதியும் இல்லாமல், குணமும் இல்லாததால் இந்த பரமாத்மா கேடுகள் அற்றவன். இவன் உடலினுள் இருந்தாலும் செயல்பாடுகள் அற்றவன், பற்று அற்றவன்.
ஆதி இல்லாதது ...தொடக்கம் இல்லாதது எது ? எதற்குமே ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே ? ஒன்று இருக்கிறது என்றால் என்றோ அது தோன்றி இருக்கத்தானே வேண்டும் ? தொடக்கமே இல்லாதது எது ? நம்மால் அப்படி ஒன்றை சிந்திக்க முடிவது இல்லை.
இருக்கிறது. நாம் அன்றாடம் அதை காண்கிறோம், உணர்கிறோம்.
உண்மை. சத்யம். இதற்கு தொடக்கம் கிடையாது. உண்மை நிரந்தரமானது.
உதாரணமாக, அறிவியல் உண்மைகளை எடுத்துக் கொள்வோம். புவி ஈர்ப்பு விசை. பொருள்கள் ஒன்றை ஒன்று இழுக்கின்றன என்ற உண்மை எப்போதும் இருக்கிறது. நியூட்டன் கண்டு பிடிப்பதற்கு முன்னாலும் அது அப்படித்தான் இருந்தது.
அறிவியல் உண்மைகள் மாறலாம். மாறாத உண்மைகள், சத்தியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
குணம் இல்லாதது. உண்மைக்கு ஏது குணம். அது உண்மை அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை. குணம் என்பது தனித்து நிற்க முடியாது. ஏதோ ஒன்றோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் குணம் என்பதை நிர்ணயம் பண்ண முடியும். அந்த பெண் ஒல்லியாக இருக்கிறாள் என்றால் வேறு யாரோ குண்டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். எல்லோருமே ஒரே மாதிரியாக இருந்தால் ஒல்லி, குண்டு என்ற பாகு பாடு இருக்காது. உண்மையை ஒப்பிட முடியாது. இது நல்ல உண்மை, இது கெட்ட உண்மை, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது.
நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் அந்த உண்மையான பொருள் கேடுகள் அற்றது.
எப்படி ? இந்த உடலினால் நாம் எவ்வளவோ கெடுதல்கள் செய்கிறோம். கொலை, கொள்ளை, திருட்டு, பொறாமை, புறம் சொல்லுதல், காமம், கோபம் என்று ஆயிரம் குற்றங்களை இந்த உடலினால் செய்கிறோம். உடலுக்குள் இருக்கும் அது எப்படி இவற்றால் கெடாமல் இருக்க முடியும் ?
மேலும், கீதை சொல்கிறது "அவன் பற்று அற்றவன்".
இந்த கேள்வியை ஒருமுறை இராம கிருஷ்ணபரமஹம்சரிடம் ஒரு மாணவன் கேட்டான். உடலுக்குள் இருக்கும் அது உண்டலின் மேல் பற்று கொண்டது இல்லை, உடல் செய்யும் தீமைகள் அதைப் பற்றாது என்று சொல்கிறீர்களே அது எப்படி என்று.
அவர், அந்த சீடனை இரவு வரச் சொன்னார். "நாம் இரவு உணவு உண்டு விட்டு இது பற்றி பேசுவோம் " என்றார்.
சீடனும், சரி என்று சொல்லிச் சென்றவன் இரவு வந்தான்.
நல்ல சர்கரைப் பொங்கல், நெய் வழிய வழிய செய்து இருந்தது. சீடனும், ருசித்துருசித்து சாபிட்டான்.
சாப்பாடு முடிந்த பின்னால், பிரமஹம்சர் சீடனுக்கு கையை கழுவிக் கொள்ள சீயக்காய் போடி கொடுத்தார். உணவில் நெய் அதிகம் இருந்ததால், கை எல்லாம் ஒரே வழ வழப்பு. சீடனும், சீயக்காய் போட்டு நன்றாக கழுவினான்.
பரமஹம்சர் மேலும் ஒரு கரண்டி பொடி கொடுத்தார்.
சீடன் "குருவே கையில் உள்ள நெய் பசை எல்லாம் நன்றாகப் போய் விட்டது. சீயக்காய் போதும் " என்றான்.
பரமஹம்சர்: சீடனே, எனக்குத் தெரியும் கை சுத்தமாகி விட்டது என்று. இது உன் நாக்குக்கு.
சீடன்: என்னது ? நாக்குக்கா ....? நாக்குக்கு யார் சீயக்காய் போடுவார்கள்
பரமஹ்சர்: என்னப்பா , கையில் நெய் ஒட்டியது...வாய் வழியாக உண்டால் நாக்கிலும் ஓட்டும் தானே என்றார்.
சீடன் உண்மையை உணர்ந்து கொண்டான். நாக்கின் மேல் நெய் பட்டாலும் , நெய் நாக்கில் ஓட்டுவது இல்லை.
அது போல , உடலின் மேல் அனுபவங்கள் சேர்ந்தாலும் அது உடலுக்குள் இருக்கும் அதைத் தீண்டுவது இல்லை.
நான் அதை என்று சொல்லுவதற்குக் காரணம், இந்த சுலோகம் அது ஆத்மா என்று சொல்லவில்லை. நான் என்ற தன் உணர்வு (self consciousness )என்பது பொருத்தமாக இருக்கும். அதற்கு ஒரு பெயரை தந்து விட்டால், பின் நம் மனம் அந்தப் பெயரைப் பிடித்துக் கொள்ளும்.
ஆத்மா என்று சொல்லலாம்,உயிர் என்று சொல்லலாம், ஜீவாத்மா என்று சொல்லலாம், பரமாத்மா என்று சொல்லலாம்...
பெயரை விட்டு விடுகிறேன். பெயர் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.
எந்த சொல்லுக்கும் மூன்று வேலை உண்டு.
அந்த சொல் தரும் சப்தம்,
அந்த சப்தம் சுட்டும் பொருள் அல்லது செயல்
அந்தப் பொருளின் பின்னால் இருக்கும் உணர்வு, தன்மை.
உதாரணமாக,
மனைவி என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் அந்த சொல்லின் சப்த்தம் நமக்கு கேட்கிறது.
பின், அது மனைவி என்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. சப்தம் போய் விட்டது, பொருள் வந்து விட்டது.
அடுத்த கட்டம், அந்தப் பெண் பற்றிய நினைவுகள், அவளின் குணங்கள் எல்லாம் வந்து நிற்கிறது. பொருள் போய் விட்டது, பொருளுக்கு பின்னால் இருக்கும் உணர்வும்,அவளின் தன்மையும் நிற்கிறது.
சிக்கல் என்னவென்றால், நாம் முதல் இரண்டு நிலையிலேயே நின்று விடுகிறோம்.
நம் உடலுக்குள் இருக்கும் அவன் , தோற்றம் இல்லாதவன், பற்று இல்லாதவன், செயல் பாடுகள் இல்லாதவன்.
இதில் சிறப்பு என்ன என்றால், உடலுக்குள் இருக்கும் அது தான் நீங்கள். ஏனோ, இந்த உடல் தான் நீங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருகிறீர்கள்.
இல்லை.
ஆகாய விமானத்தை ஓட்டும் விமானி, அந்த விமானம்தான் தான் என்று நினைப்பானா ? அவன் அதை செலுத்துகிறான். அவன் கட்டுப் பாட்டில் அது இயங்குகிறது. அவன் நில் என்றால் நிற்கும். போ என்றால் போகும். பற என்றால் பறக்கும். ஆனால், அந்த விமானிக்குத் தெரியும், தான் என்பது விமானம் அல்ல என்று.
அந்த விமானத்திற்கு சக்கரம் பழுது ஆகலாம், இறக்கை எங்காவது உரசி கெட்டுப் போகலாம், ஆனால் அது அந்த விமானியை பாதிப்பது இல்லை.
அது போல உங்கள் உடல் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கும். நில் என்றால் நிற்கும், தொடு என்றால் தொடும். ஆனால் நீங்கள் இந்த உடல் இல்லை.
எவ்வளவுதான் ஆசையாக இருந்தாலும், பெருமையாக இருந்தாலும், சேரும் இடம் வந்த பின், விமானி விமானத்தை விட்டு இறங்கிப் போய் விடுவான்.
நீங்கள் இந்த உடலை விட மிக மிக பெரியவர்கள்.
அதை உணருங்கள். அது தான் கீதையின் நோக்கம்.
No comments:
Post a Comment