Friday, February 26, 2016

கீதை - 13.28 - அனைத்திலும் சமமாக இருப்பவன்

கீதை - 13.28 - அனைத்திலும் சமமாக  இருப்பவன்  


समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥१३- २८॥

ஸமம் பஸ்²யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தமீஸ்²வரம் |
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க³திம் || 13- 28||


ஸமம்= சமமாக

பஸ்யந்ஹி = பார்த்தல்

ஸர்வத்ர = எங்கும்

ஸமவஸ்தி = சம் + அவ + ஸ்தித =  நிலைத்து இருக்கும்

ஈஸ்வரம் = ஈஸ்வரனை

ந = இல்லை

ஹி நஸ்தி = தன்னை துன்பப் படுத்துதல் 

ஆத்மநாத்மாநம் = ஆத்மாவினால் ஆத்மாவை , தன்னைத் தானே

ததோ = அதனால்

யாதி = அடைகிறான்

பராம் கதிம் = பரம கதியை, உயர்ந்த பாதையை


எங்கும் ஈசன் சமமாக இருப்பதை காண்பவன் தன்னைத் தானே துன்பப் படுத்திக் கொள்ள மாட்டான். அப்படிப் பட்டவன் உயர்ந்த பாதையை அடைகிறான். 

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள்.

நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? நாம் ஏன் வருத்தப் படுகிறோம் ?

துன்பமும் வருத்தமும் எங்கிருந்து வருகின்றன.

துன்பமும் வருத்தமும் இரண்டு வழிகளில் அல்லது இரண்டு இடத்தில் இருந்து வருகின்றன.

ஒன்று நமக்குள் இருந்து.

மற்றது நமக்கு  வெளியில் இருந்து.

நமக்குள்  இருந்து எப்படி துன்பம் வரும் ? நாமே நமக்கு எப்படி துன்பம் செய்து கொள்ள முடியும் ?

ஆம். நாமே நமக்கு பல இன்னல்களை தேடிக் கொள்கிறோம்.

காமம், கோபம், பொறாமை, பேராசை என்று நமக்குள் வளர்த்துக் கொண்டு அவற்றால் துன்பப் படுகிறோம். நம் எதிர்பார்ப்புகள், நம் எண்ணங்கள் நமக்கு துன்பத்தைத் தேடி தருகின்றன. எதிர் பார்ப்புகள் நிறைவேறாத போது வருத்தம் வருகிறது.

ஆசை நிறைவேறாத போது துன்பம் வருகிறது. ஏமாற்றம் வருகிறது.

மற்றவன் பெற்ற செல்வத்தை, புகழை கண்டு பொறாமல் இருப்பதால் வருத்தமும் வாட்டமும் வருகிறது.

நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பம். அதை நாம் கட்டுப் அடுத்த முடியும். அதிலிருந்து விடு பட முடியும்.

எப்படி என்று கீதை சொல்கிறது. 


மீண்டும் இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரன் எங்கும் சம அளவில் இருக்கிறான் என்பதை காண்பவன் தன்னைத் தானே துன்பப் படுத்திக் கொள்ள மாட்டான் என்கிறது கீதை. 

எனக்குள்ளும் ஈஸ்வரன் இருக்கறான்.  ஈஸ்வரன் என்றால் ஏதோ கடவுள் , பரப்ரம்மம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

என்னில் இருந்து எனக்கு ஒளி ஊட்டும், என் அறிவு, என் ஞானம், இதுவே ஈஸ்வரன். எனக்கு வழி காட்டுவது, என்னை நல் வழியில் நடத்துவது எதுவோ அதுவே ஈஸ்வரன். 

நம் புலன்கள் நம்மை துன்பம் தரும் வழியில் இழுத்துச் செல்லும் போது இந்த   ஞானத்தால் அதை நாம் கட்டுப் படுத்தினால் நமக்கு நாமே துன்பம் செய்து கொள்ள மாட்டோம்.

கண்டதை சாப்பிடச் சொல்கிறது நாக்கு,
தேவை இல்லாததை காணச் சொல்கிறது கண்.
வரம்பு மீறி தொட்டுச் பார்க்கச் சொல்கிறது உடல்...

இப்படி நமக்குள் உள்ள புலன்கள் இன்பத்தை அனுபவிக்க தவறான பாதையில் நம்மை  இழுத்துச் செல்லும் போது ஒரு கணம் நின்று யோசிக்க வேண்டும்.

அறிவை , ஞானத்தை கொண்டு சிந்தித்தால் சரி எது தவறு எது என்று புரியும். அப்படி தெரிந்து கொண்டால், தவறான பாதையில் செல்ல மாட்டோம்.

நமக்கு நாமே துன்பம் செய்து கொள்ள மாட்டோம்.

சரி, புரிகிறது. புலன்களை கண்ட வழியில் ஓட விடாமல், அறிவினால் அவற்றை கட்டுப் படுத்தினால் நம் புலன்களால், நம் தீய எண்ணங்களால் நமக்கு  நாமே தேடிக் கொள்ளும் துன்பங்களைத் தவிர்க்கலாம்.

அது என்ன "ஈஸ்வரன் எங்கும் சம அளவில் நிறைந்து இருக்கிறான்" ...அப்படி என்றால் என்ன ?

நமக்குள் இருக்கும் அதே சக்திதான் மற்ற உயிர்களுக்குள்ளும் இருக்கிறது.

ஏன் உயிர்கள் என்று பிரித்துப் பேசுவானேன்....உயிர் உள்ளது, உயிர் இல்லாதது என்று அனைத்திலும் அந்த சக்தி சமமாக இருக்கிறது.

அப்படி நினைத்தால், மற்றவற்றிற்கு நாம் எப்படி துன்பம் செய்வோம் ? நமக்கு மற்றவர்கள் எப்படி  துன்பம் செய்வார்கள். அப்படியே துன்பம் செய்தாலும் அது ஒரு உடல்  இன்னொரு உடலுக்குச் செய்யும் துன்பம் என்று நினைக்காமல் ஒரு சக்தி இன்னொரு சக்தியிடம் நடத்து உறவு என்ற எண்ணமே வரும். அப்படி வரும் போது , நமக்குத் துன்பம் தந்தவர்கள் மீது கூட கோபமோ, காழ்ப்பு உணர்வோ வராது.

இந்த உலகம் அனைத்தும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று தோன்றும்.

மேலும், அந்த சக்தி அனைத்திலும் சமமாக இருக்கிறது. ஒன்றில் அதிகமாகவும், மற்றொன்றில் குறைவாகவும் இல்லை.

அனைத்தும் ஒரு சக்தியின் ஒரு அளவிலான வெளிப்பாடு.

இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ?

அவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்ற பொறாமை எங்கிருந்து வரும் ?

அவனுக்கு கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்தது போலத்தான்.

என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ என்று பரதன் பெற்ற அரசை தான் பெற்ற அரசாகவே இராமன் நினைத்தானே அந்த மனோபாவம் வரும். அந்த மனோபாவம் வந்ததால், இராமனுக்கு தசரதன் மேல் கோபம் இல்லை, கைகேயி மேல் கோபம் இல்லை, பரதன் மேல் கோபம் இல்லை.
‘நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

 யார் மேலும் கோபம் இல்லை.

நீங்கள் இந்த உடல் இல்லை. புலன்கள் இல்லை. ஞான சொரூபம். இதை நீங்கள் மறந்து போவதனால் உங்களுக்கு நீங்களே தீமை செய்தி கொள்கிறீர்கள்.

ஞானத்தினால் வாழ்வை  நடத்திப் பாருங்கள். தன்னைத் தானே வருத்திக் கொள்ளும்  சோகம் நிகழாது. மற்றவர்களை வருத்தும் செயல் நிகழாது. மற்றவர்கள் உங்களை துன்பப் படுத்தவும் முடியாது.

சிந்திக்கலாம்தானே ?







No comments:

Post a Comment