கீதை - 13.24 - அறிவது எப்படி ?
ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे ॥१३- २४॥
த்⁴யாநேநாத்மநி பஸ்²யந்தி கேசிதா³த்மாநமாத்மநா |
அந்யே ஸாங்க்²யேந யோகே³ந கர்மயோகே³ந சாபரே || 13- 24||
த்யாநேந = தியானத்தின் மூலம்
ஆத்மநி = ஆத்மாவை
பஸ்யந்தி = காண்கிறார்கள்
கே சித் = சிலர்
ஆ தாத்மாநமாத்மநா = ஆத்மாவினால் ஆத்மாவை
அந்யே = மற்றவர்கள்
ஸாங்க்யேந = சாங்கியத்தின் மூலமும்
யோகேந = யோகத்தின் மூலமும்
கர்மயோகேந = கர்ம யோகத்தின் மூலமும்
சா = மேலும்
அபரே = மற்றவர்கள்
சிலர் ஆத்மாவைப் பற்றி சிந்திப்பதன் மூலமும், யோகத்தாலும், கர்ம யோகத்தாலும், சாங்கிய யோகத்தாலும் ஆத்மாவை அறிகிறார்கள்;
பிரகிருதி, புருஷன், குணங்கள், அவற்றின் சங்கமம் இவற்றைப் பற்றி எப்படி அறிந்து கொள்வது.
இதெல்லாம் உண்மையா, இல்லை வெறும் கற்பனையா ?
மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்வதை விட நாமே நேரடியாக எப்படி இதை அறிந்து கொள்வது ?
என்னை நம்பு, அதுவே போதும் என்று கண்ணன் சொல்லவில்லை.
அல்லது நான் சொல்லும் வழி ஒன்று தான் இதை அறிய வழி என்றும் சொல்ல வில்லை.
மனிதர்கள் வேறுபாடு கொண்டவர்கள். எல்லோருக்கும் ஒரே வழி சரிப்படாது.
படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும், மாணவனுக்கும், பண்டிதனுக்கும் ஒரே வழி எப்படி சரிப்படும் ?
இந்த உண்மைகளை அறிய கீதை பல வழிகளைச் சொல்கிறது.
முதலாவது, ஆத்மாவைப் பற்றி தியானம் செய்து இவற்றை அறிவது. தியானிப்பது என்றால் சிந்திப்பது. இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், ஆத்மாவை படித்து தெரிந்து கொள்ள முடியாது. மற்றவர் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது. தன்னைத் தானே ஆராய்ந்து , சிந்தித்து அறிய வேண்டிய ஒன்று.
இரண்டாவது, யோகத்தால் அறிய முடியும். யோகம் என்றால் இணைப்பது. சேருவது. மனதால், உடலால் நாம் பிரிந்து கிடக்கிறோம். நல்லவன், கெட்டவன் , உயர்ந்தவன் தாழ்ந்தவன், நன்மை தீமை, பணக்காரன் ஏழை என்று பிரிந்து கிடக்கிறோம். இந்த பிரிவினைகள் எல்லாம் போய் , எல்லாம் ஒன்றுபடுவது யோகம். அந்த யோகத்தின் மூலம் இதை உணரலாம்.
மூன்றாவது, கர்ம யோகத்தின் மூலம் இதை அறிய முடியும். சரி, எனக்கு சிந்திக்கவும் தெரியாது, யோகமும் பிடிபட மாட்டேன் என்கிறது என்றால் எனக்கு இதை அறிய முடியாதா என்றால் , இல்லை, அப்படிப் பட்டவர்களுக்கும் ஒரு வழி இருக்கிறது என்கிறது கீதை. அதாவது, உனக்குத் தெரிந்த தொழிலை கர்ம யோகத்தில் சொன்னபடி செய்வதன் மூலம் இந்த உண்மைகளை அறிய முடியும். பலனில் அக்கறை கொள்ளாமல் காரியங்களைச் செய்வதன் மூலம், இவற்றை அறிய முடியும்.
நாலாவது, இந்த பலனை எதிர்பார்க்காமல் காரியம் செய்வது எல்லாம் நமக்கு ஆகாது...வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், ஆம், இன்னும் ஒரு வழி இருக்கிறது என்கிறது கீதை அடுத்த ஸ்லோகத்தில் ....
No comments:
Post a Comment