கீதை - 13.21 - நல்லவனாவதும் தீயவனாவதும்
पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥१३- २१॥
புருஷ: ப்ரக்ருதிஸ்தோ² ஹி பு⁴ங்க்தே ப்ரக்ருதிஜாந்கு³ணாந் |
காரணம் கு³ணஸங்கோ³ऽஸ்ய ஸத³ஸத்³யோநிஜந்மஸு || 13- 21||
புருஷ: = புருஷன்
ப்ரக்ருதி = பிரகிரிதியில்
ஸ்தோ ஹி = நிலைத்து நின்று
புங்க்தே = உண்கிறான் அல்லது அனுபவிக்கிறான்
ப்ரக்ருதி ஜாந் = ப்ரக்ருதியில் ஜனிக்கும்
குணாந் = குணங்களை
காரணம் = காரணங்களை
குண ஸங் கோஸ்ய = குண சங்கமங்களோடு தொடர்பு கொண்டு
ஸதஸத் = எப்போதும், மீண்டும் மீண்டும்
யோநி = கருவறையில்
ஜந்மஸு = ஜன்மம் எடுக்கிறான்
புருஷன் பிரகிருதியில் நிலை கொண்டு இருக்கிறான். பிரகிருதிக்கு நிகழ்பவைகளை அவனும் அனுபவிக்கிறான். குணங்கள் மற்றும் அவற்றின் சங்கமங்களில் பற்றுக் கொண்டு இவன் நல்லவனாகவும் தீயவனாகவும் பிறக்கிறான் .
நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.
ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அதற்கு ஒரு குட்டி பிறந்தது. குட்டி பிறந்த சில நாட்களிலேயே தாய் சிங்கம் இறந்து விட்டது. அங்கிருந்த மான் குட்டிகள் இந்த குட்டி சிங்கத்தை வளர்த்து வந்தன. இந்த சிங்கமும், தானும் ஒரு மான் குட்டி என்றே நம்பி , மான் குட்டிகளைப் போல வாழ்ந்து வந்தது.
அப்படி இருக்கும் போது , ஒரு நாள் ....
இன்னொரு பெரிய சிங்கம் இந்த மான்களை வேட்டையாட வந்தது. மற்ற மான்களோடு இந்த பழைய குட்டி சிங்கமும் பயந்து ஓடியது. வேட்டையாட வந்த பெரிய சிங்கம், இந்த குட்டி சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது.
"ஏய், நீ ஒரு சிங்கக் குட்டி. ஏன் இப்படி மான்கள் மாதிரி பயந்து ஓடுகிறாய்" என்றது.
புதியதாய் வந்த சிங்கம் வந்து சொன்ன பின் தான், அந்த சிங்கக் குட்டிக்கு தான் ஒரு சிங்கம் என்று தெரிய வந்தது.
நீங்களும் ஒரு சிங்கம் தான்.
சிங்கம் என்று தெரியாமல், அறியாமையில் மான் குட்டிகள் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். வசிட்டர் என்ற சிங்கம் வந்து சொல்கிறது, நீங்கள் சிங்கம் தான் என்று.
நம்ப கடினமாகத்தான் இருக்கும். ரொம்ப நாள் மான்களுடனேயே வாழ்ந்து விட்டதால் சிங்கம் என்று உணர சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
இந்த கதைக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்....
"புருஷன் பிரகிருதியில் நிலை கொண்டு இருக்கிறான்."
நான் என்ற என் உள்ளுணர்வு, என் ஞானம், அறிவு, தன் உணர்வு இந்த உடலுக்குள் இருக்கிறது. புருஷன் என்பவன் பிரகிர்தியில் இருக்கிறான். உடலை விட்டு வெளியே இந்த புருஷன் இருக்க முடியாது. உடலின் மூலம் தான் அவன் செயல் பட முடியும்.
மான்களுக்கு மத்தியில் உள்ள சிங்கம் போல.
பிரகிருதிக்கு நிகழ்பவைகளை அவனும் அனுபவிக்கிறான்.
உடலுக்கு, பிரகிரதிக்கு என்ன என்ன நிகழ்கிறதோ அவன் அதை உணர்கிறான். நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். வெற்றியும் வரும், தோல்வியும் வரும். நல்லது நடக்கும் போது பிரக்ரிதி மகிழ்கிறது. அந்த மகிழ்ச்சியை புருஷன் என்ற நான் உணர்கிறேன்.
மான்களுக்கு நிகழ்வது சிங்கத்துக்கும் நிகழ்வது போல.
குணங்கள் மற்றும் அவற்றின் சங்கமங்களில் பற்றுக் கொண்டு இவன் நல்லவனாகவும் தீயவனாகவும் பிறக்கிறான் .
குணங்கள் - ரஜோ, தமோ, தாமச குணங்கள்.
அவற்றின் சங்கமங்களில் - நம் மன நிலை இந்த மூன்று குணங்களின் கலவையாகவே இருக்கிறது. அன்பு, பகை, காதல்,பொறாமை, காமம், கோபம், வெகுளி, கருணை , வெறுப்பு எல்லாம் இந்த மூன்று குணங்களின் வெவ்வேறு விதமான கலவையே.
இந்த குணக் கலவையால் மனிதன் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுகிறான்.
பிறக்கிறான் என்பதை உருவாகிறான் என்று பொருள் கொள்ளலாம்.
இந்த உலகமும், இந்த குணங்களும், இந்த குணங்களின் கலவைகளும் நீங்கள் அல்ல.
ஆனால், இவைதான் நான் என்று நாம் நினைத்துக் கொண்டு அவை இழுக்கும் பக்கம் எல்லாம் ஓடுகிறோம். அவற்றோடு நம்மை தொடர்பு படுத்திக் கொள்கிறோம்.
நீங்கள் இவற்றை எல்லாம் விட உயர்ந்தவர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள், இந்த குணங்கள் தான் நீங்கள் என்று நினைத்து.
கோபம் வரும் போது , கோபத்தோடு நீங்கள் ஒன்றாகி விடுகிறீர்கள். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்று தெரிவது இல்லை. அதனால் வரும் தீமைகளைச் செய்து தீயவனாக உருவாகி விடுகிறீர்கள்.
அன்பும், கருணையும் அப்படித்தான். அந்த குணங்களால் உந்தப் பட்டு, நல்லவனாக உருவாகிரீர்கள்.
இரண்டையும் தாண்டி மேலே போங்கள் .
இவை அல்ல நீங்கள்.
ஏன் நீங்கள் நல்லவனாகவும், தீயவனாகவும் மாறுகிறீர்கள் என்றால் இந்த குணங்களோடு ஒன்றிப் போய் அவை செலுத்தும் இடங்களுக்குச் செல்வதால்.
நான் என்ற எனக்கும், இவற்றிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நான் என்ற இந்த உணர்வு உடலின் உள்ளே இருப்பதால், அதன் மூலம் வெளிப் படுவதால், நீங்கள் இந்த உடலோடு, அந்த உடலுக்கு நேரும் குணங்களோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.
சிந்தித்துப் பாருங்கள்.
இந்த குணங்களோடு நீங்கள் உங்களைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் யார் என்று, இந்த உயரத்துக் போக முடியும் என்று...
No comments:
Post a Comment