கீதை - 13.29 - செய்வது யார் ?
प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥१३- २९॥
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ²: |
ய: பஸ்²யதி ததா²த்மாநமகர்தாரம் ஸ பஸ்²யதி || 13- 29||
ப்ரக்ருத்ய = பிரக்ரிதி
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
கர்மாணி = காரியங்களை
க்ரியமாணாநி = செய்கிறது
ஸர்வஸ = அனைத்து
ய: = எவன்
பஸ்யதி = இதை காண்கிறானோ
ததா = அப்படி
ஆத்மாநம் = ஆத்மா
அகர்தாரம் = செய்வது இல்லை (கர்த்தா = செய்பவன் , அ - கர்த்தா = செய்யாதவன் )
ஸ = அவனே
பஸ்யதி = காட்சி உடையவன்
எங்கும் காரியங்கள் பிரக்ரிதியால் செய்யப் படுகின்றன. எனவே, தான் கர்த்தா இல்லை என்று காண்பவனே உண்மையான காட்சி உடையவன்.
கர்மயோகத்தில், கடமையைச் செய், பலனில் நாட்டம் கொள்ளாதே என்று கீதை கூறியது.
யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் அதை. பலன் இல்லாவிட்டால் , எதற்கு கடமையைச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சரியான விடை கர்மயோகத்தில் இல்லை.
இந்த ஸ்லோகத்தில் இருக்கிறது.
காரியங்கள் யாரால் செய்யப்படுகிறது ?
நான் காரியங்களைச் செய்கிறேன் என்றால், என்ன அர்த்தம் ?
என் கைகள் காரியங்களைச் செய்கின்றன, என் கண் பார்க்கிறது, என் கால் நடந்து செல்கிறது.
ஆனால் இவைகள் தானே செய்வது இல்லை. இவற்றை இயக்குவது மூளை. அந்த மூளையை இயக்குவது எது ?
அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்....ஆத்மா, உயிர், புருஷன் ...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அது செயல்படுத்துகிறது ஆனால் செயல்படுவது இல்லை.
அது எப்படி ?
அதுவும் என்னுள் ஒரு பகுதிதானே. அதுவும் சேர்ந்துதானே காரியம் செய்கிறது. எப்படி அது மட்டும் செய்யவில்லை என்று சொல்ல முடியும் ?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நீங்கள் இரயிலிலோ அல்லது ஆகாய விமானத்திலோ பயணம் செய்து இருக்கிறீர்களா ?
உங்கள் சக பயணி நகர்வதாக உங்களுக்குத் தெரிவது இல்லை அல்லவா. வெளியில் பார்த்தால் தான் தெரியும் எல்லோரும் நகர்வது.
நகர்வதற்கு , நகர்தல் என்ற செயலுக்கு நகராத ஒன்று தேவைப் படுகிறது அல்லவா ?
செயல் நிகழ , செயல் படாத ஒன்று வேண்டும்.
செயல் நிகழ்வதற்கு இடைவெளி வேண்டும், கால வித்தியாசம் வேண்டும், செய்பவன், செய்யாதவன் என்ற வேறுபாடு வேண்டும்.
வேற்றுபாடுகள் அற்ற ஒன்றுக்கு செயல் இல்லை.
அனைத்திலும் இருப்பது ஒன்று என்றால், அது எவ்வாறு செயல் படும். அதற்கு செயல் இல்லை.
செயல் நிகழ பிரிவு வேண்டும்.
சரி, அது எப்படியோ போகட்டும்.
பிரகிரிதியில் செயல் நிகழ்கிறது.
புருஷன் செயல் அற்று இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்...அதனால் என்ன ? அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?
முக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான செய்தி இருக்கிறது.
செயல்கள் செய்வது நான் இல்லை. நான் கர்த்தா இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால், என்னவெல்லாம் நிகழும் ?
முதலாவது, செயலின் விளைவுகளின் மேல் ஆசை இருக்காது. வருவது வரட்டும் என்ற நிலை வரும்.
இரண்டாவது, கர்மத்தின் விளைவில் பற்று இல்லாவிட்டால், ஏமாற்றம் இல்லை, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம் இல்லை, மற்றவனுக்கு கிடைத்துவிடுமோ என்ற பொறமை இல்லை, அவனுக்கு கிடைத்து எனக்கு கிடைக்கமால் போய் விடுமோ என்ற ஏக்கம் இருக்காது.
மூன்றாவது, நான் செய்கிறேன், என்னால் நிகழ்கிறது என்ற ஆணவம் போய் விடும். ஆணவம் போனால், செயலின் வெற்றியில் எனக்கு பங்கு வேண்டும் என்ற சுயநலம் போகும்.
நான்காவது, செயல்கள் என் மூலம் நிகழ்கின்றன. என்னால் நிகழ்வது இல்லை . நான் செயலற்றவன் என்று தோன்றும் பொழுது செயலைப் பற்றிய விமர்சினங்கள் நம்மை பாதிப்பது இல்லை.
எனவே, செயல்கள் என் மூலம் நிகழ்கிறது. நான் நிகழ்த்துவது இல்லை என்ற இந்த சித்தாந்ததை சற்று ஆழமாக சிந்தியுங்கள்.
மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்கு வழி காட்டும் தத்துவம்.
No comments:
Post a Comment