Sunday, February 21, 2016

கீதை - 13.23 - மறு பிறப்பு இல்லை

கீதை - 13.23 - மறு பிறப்பு இல்லை 


य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥१३- २३॥

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு³ணை: ஸஹ |
ஸர்வதா² வர்தமாநோऽபி ந ஸ பூ⁴யோऽபி⁴ஜாயதே || 13- 23||


ய = எவன்

ஏவம் = இதனை

வேத்தி = அறிகிறானோ

புருஷம் = புருஷன்

ப்ரக்ருதிம் = பிரகிருதி

ச = மற்றும்

குணை:  = குணங்களை

ஸஹ = சேர்ந்த

ஸர்வதா = முழுவதும்

வர்தமாந = சென்றாலும்

அபி = மேலும்

ந = இல்லை

ஸ = அவன்

பூயோ = மேலும்

அபிஜாயதே = பிறப்பது


இவ்வாறாக, புருஷனையும், பிரகிருதியையும்,  மற்றும் அதன் குணங்களையும் அறிந்தவன் எந்த வழியில் சென்றாலும் , அவனுக்கு மறு பிறப்பில்லை.

மூன்று விஷயங்கள்,

புருஷன், பிரகிருதி, மற்றும் அவற்றின் குணங்கள்.

இந்த மூன்றையும் அறிந்தவன், வாழ்வில் எந்த வழியில் சென்றாலும் அவன் மீண்டும் பிறப்பது இல்லை.

அப்படி என்றால், இவற்றைப் பற்றி அறியாதவன் மீண்டும் பிறப்பது இல்லை என்று ஆகிறது அல்லவா ?

அறியாமை அவ்வளவு பெரிய குற்றமா ? சரி குற்றமே என்றாலும், ஏன் இது எளிமையாக எல்லோருக்கும் புரிவது இல்லை. புரியாமல் வைத்தது யார் குற்றம் ?

"மீண்டும் பிறப்பது இல்லை" என்பதற்கு அர்த்தம் மீண்டும் குழந்தையாக இன்னொரு தாய் வயிற்றில் பிறப்பது என்று அர்த்தம் இல்லை.

மனிதன், உடல் தான் , தான் என்று எண்ணிக் கொண்டு, இன்பங்களின் பின்னால் அலைகிறான். அப்படி அலையும்போது ஒன்று மாறி ஒன்றாகப் பிறக்கிறான்.

எப்படி ?

சாதாரண வாலிபனாக இருந்தவன், இன்பங்கள் வேண்டும், அதற்காக செல்வம் என்று  ஏதோ நிறுவனத்தில் வேலையில் சேர்கிறான்.

ஒரு ஊழியன் பிறக்கிறான்.

இன்பம் வேண்டும் என்று திருமணம் முடிக்கிறான்.

ஒரு கணவன் பிறக்கிறான்.

பிள்ளைகள் வேண்டும் என்று பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

ஒரு தகப்பன் பிறக்கிறான்.

ஒவ்வொன்றை அனுபவிக்க, ஒவ்வொரு நிலையை அடைகிறான்.

அது ஒவ்வொன்றும் ஒரு பிறப்பு தான்.

இப்படியாக எண்ணற்ற பிறவிகள் பிறந்து கொண்டே இருக்கிறான் இந்த வாழ்க்கையிலேயே.

சரி, இந்த புருஷன், பிரகிருதி, அதன் குணங்கள் பற்றிய ஞானம் வந்து விட்டால் மட்டும் இப்படி பிறப்பது நின்று விடுமா ?

நிற்காது ஆனால் பிறப்பது யார் என்று தெரியும்.

இந்த உடல் ஊழியனாக,  கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, மாறுகிறது...அல்லது பிறக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும் தந்தையும் பிறக்கிறார்கள்.

இந்த பிறவிகள் எல்லாம் உடலுக்குத்தான்.

நான் இந்த உடல் அல்ல என்று அறியும் போது இரண்டு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

முதலாவது, இந்தப் பிறவிகள் எனக்கு அல்ல இந்த உடலுக்குத்தான் என்று புரிகிறது.

இரண்டாவது, இந்த உடலுக்கே கூட ஏன் இத்தனை பிறவிகள் நிகழ்கின்றன என்றால் ஆசைகள், அறியாமைகள், குணங்கள், அவற்றின் சங்கமங்களால் நிகழ்கின்றது  என்று அறியும்போது இந்த ஆசைகள், அறியாமைகள், குணங்கள்  சங்கம் இவை நிகழ்வது அற்று போகும்.

முன்பெல்லாம், அரசர்களுக்கு சர்க்கரை வியாதி வரும். நன்றாக உண்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் , சர்க்கரை வியாதி வரும். ஆனால், அது சர்க்கரை வியாதி என்று தெரியாது. வைத்தியர் ஏதேதோ பச்சிலை சாறுகளை  தந்து விட்டு, ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டுப் போய் விடுவார். இராஜாவும், ஓய்வு எடுத்துக்  கொண்டு மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்.

சர்க்கரை வியாதிக்குக் காரணம் இனிப்பு பொருள்கள் என்று தெரிந்தால் அதை நிறுத்தி விடலாம்.

அது போல, இந்த பல்வேறு பிறவிகளுக்கும், அவற்றால் வரும் துன்பங்களுக்கும்  காரணம் இந்த புருஷன், பிரக்ரிதி, மற்றும் குண சங்கமங்கள் என்ற அறியாத அறியாமையே.

அறியும் போது இன்பம் என்றால் என்ன, இன்பம் எங்கிருந்து வருகிறது, அதை எப்படி அனுபவிப்பது, எவ்வளவு அனுபவிப்பது என்று புரிந்து கொள்ள முடியும்.

அறிய அறிய பிறவிகள் குறையும்

சிந்திப்போம்.

 






No comments:

Post a Comment