Friday, February 26, 2016

கீதை - 13.27 - ஒன்றாகக் காண்பதுவே காட்சி

கீதை - 13.27 -  ஒன்றாகக் காண்பதுவே காட்சி 


समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥१३- २७॥

ஸமம் ஸர்வேஷு பூ⁴தேஷு திஷ்ட²ந்தம் பரமேஸ்²வரம் |
விநஸ்²யத்ஸ்வவிநஸ்²யந்தம் ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி || 13- 27||

ஸமம் = சமமாக

ஸர்வேஷு= அனைத்து

பூதேஷு = பூதங்களிலும்

திஷ்டந்தம் = காண்கிறானோ

பரமேஸ்வரம் = பரமேஸ்வரனை

விநஸ்யத்ஸ்வ = அழிகின்றவற்றில்

அவிநஸ்யந்தம் = அழியாததை

ய: = எவன்

பஸ்யதி = பார்கிறானோ

 ஸ = அவனே

 பஸ்யதி = காட்சி உடையவன் ஆவான்


எல்லா  பூதங்களிலும் சமமாக இருப்பவன் பரமேஸ்வரன்.  அழிவனவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சி உடையவன் ஆவான். 

மரணம் !

மரணத்தை கண்டு பயப்படாதவர்கள் யார் ?

பயங்களுக்குள்ளே பெரிய பயம் மரண பயம்.

ஆசைகளுக்குள்ளே பெரிய ஆசை உயிராசை.

மரணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று மனிதன் தவிக்கிறான்.

மருந்தும், மாத்திரையும், உடற் பயிற்சியும் , உணவு கட்டுப் பாடும் மரணத்தை வெல்ல உதவும் என்று நினைக்கிறான். வெல்ல முடியாவிட்டாலும் தள்ளியாவது போட உதவும் என்று நினைக்கிறான்.

உலகிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் எது என்று கேட்டபோது , தர்மன் சொன்னான் "நாளும் உயிர்கள் எமனிடம் போவதை கண்டும் மனிதன் தனக்கு மரணம் வராது என்று நினைக்கிறானே, அது தான் உள்ளதுக்குள்ளேயே பெரிய அதிசயம் " என்றான்.

மரணத்தைக் கண்டு மனிதன் ஓடுகிறான்.

கீதை மரண பயத்தில் இருந்து விடுபட வழி சொல்கிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் புதியதாய் பிறக்கிறீர்கள்.

நேற்று இருந்த நீங்கள் இல்லை இன்று இருப்பவர்.

உங்கள் உடலில் எவ்வளவு மாற்றங்கள். புதியதாய் பல செல்கள், பழைய செல்கள் பல இறந்து மறைந்து போய்விட்டன, புது சிந்தனை, பழைய சிந்தனைகள் கொஞ்சம் மறந்து போய் விட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நேற்றைய நீங்கள் இறந்து இன்றைய நீங்கள் பிறக்கிறீர்கள்.

ஒவ்வொரு கணமும் நீங்கள் புதியதாய் மாறிக் கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்றால் ஒவ்வொரு கணமும் நீங்கள் இறந்து கொண்டே இருக்கிறீர்கள். இறக்காமல் எப்படி பிறக்க முடியும் ?

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது உங்களுக்குள்.

சந்தேகம் இருந்தால் உங்களது பழைய புகைப் படத்தை எடுத்துப் பாருங்கள். உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் அது நீங்கள் தானா என்று. எங்க போனது அந்த உருவத்தில் உள்ள நீங்கள் ? அது இறந்து போய் , இப்போது இருக்கும் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள்.

நாளும் இறந்து பிறந்து கொண்டிருக்கும் நீங்கள், எதற்காக மரணம் என்ற ஒன்றை நினைத்து பயப் படவேண்டும் ?  மரணம் ஒன்றும் புதியது அல்லவே ? நாளும் ஒத்திகை பார்த்தது தானே.

அது மட்டும் அல்ல,

நாளும் இறந்து பிறந்து கொண்டு இருந்தாலும் நீங்கள் அதே ஆள் தானே ?

உடல் மாறுகிறது. எண்ணங்கள் மாறுகிறது. சிந்தனை மாறுகிறது. உங்களில் மாறாது ஒன்றும் இல்லை தானே ?

அப்படி இருந்தாலும், நான் அதே ஆள் தான் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ?  மாறுகின்ற உங்களில் மாறாத ஒன்று ஏதோ இருக்கிறது அல்லவா ?

இந்த மாறும் உடல், சிந்தனை, ஞாபகம், எண்ணத் தொகுதி கடந்து ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா ?

அதே போல , நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி உள்ள அனைத்துமே இப்படித்தான் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருக்கிறது.

இருந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து, மாறாத ஒன்று இருக்கிறது அல்லவா . அதை காண்பவனே

இந்த அனைத்து மாற்றங்களுக்குப் பின்னாலும் மாறாத ஒன்று இருக்கிறது. அதைக் காண்பவனே காட்சி உடையவன் என்கிறது கீதை. மற்றவர்கள் உண்மையைக் காண்பது இல்லை.

இந்த மாற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மாறாத ஒன்றை எவன் காண்கிறானோ  அவனே காட்சி உடையவன் என்கிறது கீதை.

எப்படி உங்கள் மாற்றங்களுக்குப் பின்னால் மாறாத "நீங்கள்" இருக்கிறீர்களோ, அது போல மற்றவற்றின் மாற்றங்களுக்குப் பின்னாலும் மாறாது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.


"அழிவனவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சி உடையவன் ஆவான். "

கீதையின் ஆழம் புரிகிறதா ?


மேலும்,

இந்த அழிபனவற்றில் அழியாமல் இருக்கும் அது எல்லா இடத்திலும் சமமாக இருக்கிறது. உங்களில் அதிகமாகவும், என்னில் குறைவாகவும் இல்லை.

எல்லாம் சமம்.

உயர்வு தாழ்வு என்ற இருமை நம் கற்பனை.

ஆழ்ந்து சிந்தித்தால், மரணம் பற்றிய புது சிந்தனை பிறக்கும், சம நோக்கு வரும்.

வரணும்.







No comments:

Post a Comment