கீதை - 13.30 - நீங்கள் பிரமத்தின் ஒரு பகுதி
यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥१३- ३०॥
யதா³ பூ⁴தப்ருத²க்³பா⁴வமேகஸ்த²மநுபஸ்²யதி |
தத ஏவ ச விஸ்தாரம் ப்³ரஹ்ம ஸம்பத்³யதே ததா³ || 13- 30||
யதா = எப்போது
பூத ப்ருதக் பாவ = பல்வேறு பூதங்கள்
ஏக ஸ்தம் = ஒன்றில் நிலை பெற்று இருக்கிறது
அ நுபஸ்யதி = என்பதைக் காண்பானோ
தத = அவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
விஸ்தாரம் = விரிந்த
ப்ரஹ்ம = பரந்து
ஸம்பத்³யதே= அடைகிறான்
ததா = அப்போது
வேற்றுமையே துன்பகளுக்குக் காரணம். வேறுபாடு தோன்றத் தோன்ற துன்பங்கள் அதிகரிக்கும்.
நாட்டின் பெயரால், ஜாதியின் பெயரால், குலத்தின் பெயரால், மொழியின் பெயரால், கடவுள்களின் பெயரால் எத்தனை வேற்றுமைகள்.எத்தனை சண்டை சச்சரவுகள் ?
உலகம் பல்வேறு உயிர்களாலும், பொருள்களாலும் ஆனது போலத் தோன்றினாலும், அடிப்படையில் அது ஒன்றே தான்.
அது எப்படி ?
நானும், நீங்களும் ஒன்றாக முடியும் ?
முடியும். எப்படி என்று பார்ப்போம்.
ஒரு விஷயத்தை நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம் ? தெரிந்த ஒன்றை வைத்து தெரியாத ஒன்றை நாம் அறிந்து கொள்கிறோம்.
உதாரணமாக , புலி எப்படி இருக்கும் என்றால் அது பூனை மாதிரி இருக்கும், கொஞ்சம் பெருசா இருக்கும் அப்படினு சொல்லி புரியவைக்கலாம்.
அணுவை கண்ணால் பார்க்க முடியாது. நுண் அணு கருவி மூலமும் பார்க்க முடியாது . பின் எப்படி அதை நாம் அறிந்து கொள்வது. ஒரு மணல் துகள் இருக்கிறதே அதில் கோடியில் ஒரு பங்கு இருக்கும் என்று சொன்னால் , அணுவை நேரில் பார்க்காமலேயே நம்மால் அணுவைப் பற்றி யூகித்து அறிய முடிகிறது அல்லவா, அது போல இந்த உலகம் ஏதோ ஒன்றால் ஆனது என்பதை நாம் சில உதாரணங்கள் மூலம் அறிய முடியும்.
நம் உடலில் வலது பக்கம், இடது பக்கம் என்று இருக்கிறது அல்லவா. வலது உயர்ந்தது , இடது தாழ்ந்தது என்று வைத்து இருக்கிறோம். இடது கையால் கொடுத்தால் மரியாதை குறைவு. இடது கை சுத்தம் செய்ய பயன்படுவது என்று வைத்து இருக்கிறோம்.
நம் உடலில், வலது எங்கே முடிந்து , இடது பாகம் எங்கிருந்து தொடங்குகிறது ?
இந்த இடத்தில் இருந்து வலது பக்கம் முடிகிறது, இங்கிருந்து இடது பக்கம் தொடங்குகிறது என்று கூற முடியாது அல்லவா. உடல் ஒன்று தான். நாம் தான் இடம் வலம் என்று பிரித்து வைத்து வைத்து இருக்கிறோம். அது மட்டும் அல்ல, வலது உயர்ந்தது, இடது தாழ்ந்தது என்றும் வைத்து இருக்கிறோம்.
உயர்ந்ததும், தாழ்ந்ததும் உடலின் கூறுகள் தானே. உடல் ஒன்று தானே ? இதில் வலது இடது என்ற பாகு பாடு இங்கிருந்து வந்தது ?
இடதிலிருந்து வலது தொடங்குகிறது. வலதில் இருந்து இடது தொடங்குகிறது. இரண்டும் சேர்ந்த கலவை தான் இந்த உடல்.
பிரிவுக்கு பின்னால் இருக்கும் ஒருமை புரிகிறதா ?
உயர்வும் தாழ்வும் ஒன்றுதான் என்று புரிகிறதா.
இது ஒரு உதாரணம்.
இந்த உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அமீபா, வைரஸ் போன்ற ஒரு செல் உயிரில் இருந்து யானை போன்ற பெரிய விலங்குகளும் இருக்கிறது.
மணல் துகளில் இருந்து இமய மலை வரை இருக்கிறது.
நல்லவனும், வல்லவனும், இளைத்தவனும், எல்லாம் இருக்கிறார்கள்.
இருந்தும் எல்லாம் அடிப்படையில் அணுவினால் ஆனது என்று நமக்குத் தெரியும். இத்தனை பிரிவு இருந்தாலும், அனைத்தும் அணு என்ற ஒன்றால் ஆனது என்று நாம் நம்புகிறோம்.
இந்த உலகமும் இதில் உள்ளவை அனைத்தும் அடிப்படையில் ஏதோ ஒன்றால் ஆனது.
இதை அறிபவன் விஸ்தாரமான பிரமத்தை அடைகிறான்.
பிரமம் என்றால் விரிந்தது என்று பொருள்.
நீங்கள் யார் ?
உங்கள் கை மட்டுமா ? கால்கள் மட்டுமா ? கண்கள் மட்டுமா ? எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் நீங்கள் அல்லவா ? இதில் கை உயர்ந்தது, காது தாழ்ந்தது என்று நினைப்பீர்களா ? நினைக்க மாட்டீர்கள் அல்லவா .....அது போல, நீங்கள் இந்த பரந்து விரிந்த உலகின் ஒரு பகுதி என்று நினைத்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், என்ற பாகு பாடுகள் மறையும்.
விரிந்து பட்ட உலகின் ஒரு கூறு என்று அறிவீர்கள்.
காக்கை குருவி எங்கள் ஜாதி
காடு மலை எங்கள் கூட்டம்
என்றானே பாரதி, அது போல....இந்த உலகின் சக்கரவர்த்தி நீங்கள்.
ஏன் உங்களை ஒரு நாட்டின், ஒரு ஜாதியின், ஒரு மொழியின், ஒரு இனத்தின் சின்ன வட்டத்துக்குள் அடைத்துக் கொண்டு , அந்த வட்டத்துக்கு வெளியே உள்ளவர்களோடு முரண் படுகிறீர்கள் ?
வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு நீங்கள்.
பெருமிதம் கொள்ளுங்கள்.
கீதை உங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.
இந்த புது உலகிற்கு உங்களை நீங்களே வரவேற்றுக் கொள்ளுங்கள்.
வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
No comments:
Post a Comment