Monday, February 15, 2016

கீதை - 13.20 - சுகமும் துக்கமும் உள்ளே

கீதை - 13.20 - சுகமும் துக்கமும் உள்ளே 


कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते ।
पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥१३- २०॥

கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே |
புருஷ: ஸுக²து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே ஹேதுருச்யதே || 13- 20||

கார்ய = செயல்களையும்

கரண = அதன் காரணங்களையும்

கர்த்ருத்வே = உண்டாக்கும்

ஹேது:  = பொருள்

ப்ரக்ருதி = பிரக்ரிதி

ருச்யதே = என்று சொல்லப் படுகிறது

புருஷ: = புருஷன்

ஸுக² = சுகம்

து³:கா²நாம் = துக்கங்களை

போ⁴க்த்ருத்வே = அனுபவிப்பதில்

ஹேது = பொருள்

ருச்யதே = என்று சொல்லப் படுகிறது

காரிய காரணங்களை ஆக்குவது பிரக்ரிதி.
சுக துக்கங்களை அனுபவிப்பது புருஷன் 

உலகில் வேறுபாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஏற்றத் தாழ்வுகள் என்றும் இருக்கும். நல்லது கெட்டது , உயர்ந்தது தாழ்ந்தது, சூடு பனி, செல்வம் வறுமை என்று எல்லாம் கலந்ததுதான் இந்த உலகம்.

இந்த வேறுபாடுகள் புற உலகில் இருந்து பிறக்கின்றன.  ஒன்று உயர்ந்து இருக்கிறது, ஒன்று தாழ்ந்து இருக்கிறது. ஒன்று கறுப்பாய் இருக்கிறது, மற்றது சிவப்பாய் இருக்கிறது.

ஆனால், இந்த வேற்றுமைகள் நமது சுக துக்கங்களுக்கு காரணம் அல்ல.

நமது சுக துக்கங்களுக்குக் காரணம் நாம் தான்.

நாம் என்று சொல்லும் போது , புருஷன் என்று முன்னால் பார்த்தோமே அந்த நான். நான் என்று உள் உணர்வு, தன் உணர்வு தான் காரணம்.

எப்படி ?

என்னிடம் ஒரு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. என் நண்பனிடம் ஐந்து கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றால், அவனைக் கண்டு எனக்கு பொறாமை, எனக்கு அவ்வளவு இல்லையே என்ற ஏக்கம்,  எப்போது எனக்கும் அவ்வளவு  சொத்து இருக்கும் என்ற கவலை எல்லாம் வருகிறது.

அதே சமயம், இன்னொரு நண்பன் பத்து கோடி சொத்து வைத்து இருந்தால், அவன் ஐந்து கோடி சொத்து வைத்து இருக்கும் நண்பனைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

எனவே, கவலை சொத்தில் உள்ள வேறுபாட்டில் இல்லை. என் மனதில் இருக்கிறது.

என் மனம் அலையும் போது , ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, புற உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசை கொள்ளும் போது சுக துக்கங்களை அனுபவிக்கிறது.

இன்பமும் துன்பமும் வெளியில் இல்லை.

நமக்குள்ளேயே இருக்கிறது.

காரண காரியங்கள் வெளியில் இருக்கிறது...பிரகிரிதியில்
சுக துக்கங்கள் உள்ளே இருக்கிறது ...புருஷனில்

ஸ்லோகத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

கீதையின் எளிமையும், ஆழமும் விளங்கும்.









No comments:

Post a Comment