Thursday, February 18, 2016

கீதை - 13.22 - பரமாத்மா என்பது யார் ?

கீதை - 13.22 -  பரமாத்மா என்பது யார் ?

http://bhagavatgita.blogspot.in/2016/02/1322.html


उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥१३- २२॥

உபத்³ரஷ்டாநுமந்தா ச ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: |
பரமாத்மேதி சாப்யுக்தோ தே³ஹேऽஸ்மிந்புருஷ: பர: || 13- 22||

உபத்ரஷ்டா = திருஷ்டா என்றால் திருஷ்டி, பார்வை. பார்பதற்கு உதவுபவன். அல்லது, பார்ப்பவன்,

அநுமந்தா = அனுமதிப்பவன்

ச = மேலும்

பர்தா = தாங்கிப் பிடிப்பவன்

போக்தா = அனுபவிப்பவன்

மஹேஸ்²வர: = மகேஸ்வரன்

பரமாத்மா = பரமாத்மா

இதி = இதே

சா = மேலும்

அபி = அது அன்றியும்

யுக்தோ = கூறப் படுகிறான்

தே³ஹே = தேகத்தில்

அஸ்மிந் = இந்த

புருஷ: பர:  = பர புருஷன்



காண்பதற்கு உதவியாக இருப்போன் ,  அனுமதி தருவோன், அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவன் , அனுபவிப்பவன்,  மகேசுவரன் என்று இந்த உடலில் உள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப் படுகிறான்.


காண்பதற்கு உதவியாக இருப்போன்...அப்படி என்றால் என்ன ?

உங்களுக்கு நிகழ்பவற்றிற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள். உங்களைச் சுற்றி நிகழ்பவற்றிற்கு சாட்சியாக இருங்கள்.

சாட்சி என்றால் யார் ? நடப்பவற்றை பார்கிறான் ஆனால் அவைகளுக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

சாலையில் நடந்து போகிறீர்கள். அந்த சாலையை கடக்கும் ஒருவரை ஒரு வாகனம் இடித்து விடுகிறது. அதை நீங்கள் பார்கிறீர்கள்.

அந்த விபத்துக்கு நீங்கள் சாட்சி. ஆனால், அந்த விபத்தினால் உங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. இடித்தவன் யாரோ, இடி கொண்டவன் யாரோ. ஆனால், அந்த விபத்து நடந்தபோது நீங்கள் அங்கே இருந்தீர்கள். உங்களுக்குத் தெரியும். அந்த விபத்தினால் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட ஒரு சுகமோ துக்கமோ இல்லை. வலி இல்லை. ஆனந்தம் இல்லை. பார்த்தீர்கள் , அவ்வளவுதான்.


அதே  போல,உங்கள் வாழ்க்கைக்கும் ஒரு சாட்சியாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிகழ்பனவற்றை ஒரு சாட்சியாக இருந்து பாருங்கள். யாருக்கோ நிகழ்வது போல பாருங்கள். நல்லது நடக்கிறது, தீமை நடக்கிறது...இரண்டையும்  பார்த்துக் கொண்டிருங்கள் , ஒரு சாட்சியைப் போல.

நல்லது நடந்தால் துள்ளாதீர்கள்.

அல்லது நடந்தால் துவளாதீர்கள்.

நடக்கும் சம்பவங்களால் சாட்சி எப்படி பாதிக்கப் படுவது இல்லையோ,அது போல இந்த  உடலுக்கு நிகழ்வதற்கு நீங்கள் பாதிக்கப் பட வேண்டியது இல்லை. நீங்கள் இந்த உடல் இல்லை.

இப்படி ஒரு சாட்சியாக இருக்கப் பழகிக் கொண்டால், ஒரு பற்று அற்ற தன்மை வரும்.

நான் எனது என்ற அஹங்காரம், மமகாரம் விட்டுப் போய் விடும்.

நாளடைவில் நீங்கள் நடந்து செல்வதை, நீங்கள் உறங்குவதை, நீங்கள் உண்பதை நீங்கள் ஒரு மூன்றாம் மனிதனைப் போல, ஒரு சாட்சியைப் போல பார்க்க முடியும்.

அப்புறம் சுகம் ஏது , துக்கம் ஏது ?

அனுமதி தருவோன்....

அப்படி ஒரு சாட்சியாக நீங்கள் இருக்கும் போது , வாழ்க்கையில் நடப்பவைகளில்  எது எவ்வளவு உங்களை பாதிக்கலாம் என்று நீங்கள் அனுமதி தர முடியும். இதற்கு நான் கோபப்படலாமா ? இதை நான் உண்ணலாமா ? இதற்கு நான் சந்தோஷப் படலமா என்று ஒரு தன் உணர்வோடு  செயல் பட முடியும்.

நமக்கு இப்போது சிக்கல் என்ன என்றால், நாம் ஒரு இயந்திரத்தைப் போல வாழ்கிறோம்.  கோபமும், காமமும், இன்பமும், துன்பமும் ஏதோ சுவிட்ச் போட்ட மாதிரி  நிகழ்கிறது. நம் அனுமதி இன்றி நிகழ்கிறது.

நீங்கள் அனுமதித்தா உங்கள் கோபம் வருகிறது ? நீங்கள் அனுமதித்தா காமம் உங்களைப்  பற்றுகிறது ? இல்லை.

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு சாட்சியாகப் பார்க்கும் போது , உங்களுக்கு நிகழ்வதை , அவை எவ்வளவு தூரம் உங்களை பாதிக்கலாம் என்று என்று நீங்கள் அனுமதிக்க முடியும். இவ்வளவு கோபப்படலாம், இவ்வளவு காமம் போதும்,  இத்தனை  ஆசை செல்வத்தின் மீது போதும் என்று எது எவ்வளவு என்று அனுமதிக்கலாம். எல்லாம் அளவு கடந்து போவதால்தானே சிக்கல் எல்லாம் வருகிறது.

அனைத்தையும் தாங்கிப் பிடிப்பவன்...

தாங்கிப் பிடிப்பவன் என்றால் ஏதோ பளு தூக்குபவன் (weight lifter ) என்று நினைக்கக் கூடாது. தாங்குபவன் என்றால், அனைத்தையும் பெற்றுக் கொள்பவன். இன்பமோ துன்பமோ , அவற்றை அனுபவிக்கும் நேரத்தில் புலன்கள்  செயல்படுகின்றன. அந்த அனுபவம் முடிந்த பின் புலன்களின் வேலை தீர்ந்து விடுகிறது. ஆனால், அந்த அனுபவங்களை சேகரித்து வைத்து, அவற்றின் மூலம் நம்மை மாற்றுவது நம் உள் இருக்கும் நான் என்ற அது. ஒரு அனுபவம் நல்லது என்றால் அதை மீண்டும் செய்யத் தூண்டுகிறது. ஒரு அனுபவம் துன்பம் என்றால் அதை விலக்குகிறது . இப்படி அனுபவங்களைச் சேர்த்து, அவற்றை நல்லது கெட்டது , உயர்ந்தது தாழ்த்து என்று தரம் பிரித்து அவற்றின் மூலம் நம் வாழ்கையை நடத்திச் செல்வது அது.

நாம் நம் அனுபவங்களால் உந்தப் படுகிறோம். நாம் படித்தது, நமக்குச் சொல்லப் பட்டது, நம்மைச் சுற்றி நிகழ்வது போன்றவற்றில் இருந்து நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். அந்த அனுபவங்கள் நம்மை வழி நடத்துகின்றன. யோசித்துப் பார்த்தால் நாம் ஒரு சூழ் நிலைக் கைதிதான். நம் சூழ்நிலையைத் தாண்டி நம்மால் வெளியே வர முடியாது.


அப்படி என்றால், நான் என்பது வெளி உலகின் தொகுப்புத்தான். ஆனால், இதை அறியும் போது , நான் என்பது இவற்றையும் தாண்டி ஏதோ ஒன்று என்று புரிபடும். நான் என்பது எனக்குள் செலுத்தப் பட்ட , அனுமதிக்கப்பட்ட எண்ணங்களின் தொகுப்புதான் என்று அறியும் போது , நான் என் சமுதாயத்தை, என் சூழ்நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்று புரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் வேறு, கண்ணாடி என்பது வேறு. திரையிலே காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. காட்சியே திரை அல்ல. அதில் விழும் பிம்பங்களைத் தாண்டி திரை என்று ஒன்று இருக்கிறது. பிம்பங்கள் ஒட்டாத நிர்மலமான திரை ஒன்று இருக்கிறது. பிம்பங்கள் ஓடிக் கொண்டிருக்கும்வரை திரை தெரியாது.

அனுபவிப்பவன்...

எது அனுபவிக்கிறது ? புலன்களா ? புலன்கள் தங்களுக்கு வரும் செய்திகளை பெற்று மூளைக்கு அனுப்புகிறது. அதோடு அதன் வேலை தீர்ந்து விட்டது. ஒரு காட்சியைப் பார்க்கிறோம். அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எவ்வளவு வெளிச்சத்தில் இருக்கிறது என்று கண்டு அதற்குத் தகுந்த மாதிரி கண் தன்னை சரி செய்து அந்த பொருளின் பிம்பம் சரியாக விழித் திரையில் விழ வழி செய்கிறது. விழித் திரையில் இருந்து மூளைக்கு செய்தி போகிறது. கண்ணின் வேலை அவ்வளவுதான். புலன்கள் அனுபவிப்பது  இல்லை.

மூளை, வந்த செய்தியை பகுத்துச் சொல்கிறது. இது லட்டு,அது அம்மா, இது புத்தகம், என்று எதை கண் காண்கிறதோ, அது இன்னது என்று இனம் கண்டு கொள்வது மூளை. மூளை அனுபவிக்கிறதா என்றால் இல்லை. அதன் வேலை உள்ளே வரும் செய்திகளை அறிந்து சொல்வது.

அனுபவம் என்பது அதையும் தாண்டி நிகழும் ஒன்று.

ஒரே ஆள், ஒரே பொருள்...ஒரு நாள் இனிமையாக இருக்கிறது, இன்னொரு நாள் எரிச்சலாக இருக்கிறது. ஒரு நாள் மனைவி தேவதைப் போலத் தெரிகிறாள், இன்னொரு நாள் அவளே எரிச்சலை தூண்டுகிறாள். பொருள் ஒன்றுதான், பார்க்கும் கண்ணும், அறியும் மூளையும் ஒன்றுதான் என்றாலும் அனுபவம் மாறுகிறது.

மூளையையும் தாண்டி அனுபவிப்பவன் அவன். அவன் யார் என்று சிந்தியுங்கள்.

மகேசுவரன்

இத்தனையும் செய்பவன் தான் மகேஸ்வரன். மகேஸ்வரன் என்றால் எங்கோ கைலாயத்தில், பாற்கடலில் இருக்கும் யாரோ அல்ல. உங்களுக்குள் இருந்து மேலே சொன்னவற்றை செய்யும் அவன் தான் மகேஸ்வரன்.


இந்த உடலில் உள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப் படுகிறான்.


அந்த மகேஸ்வரன் வேறு எங்கும் இல்லை, இந்த உடலுக்குள்ளேயே இருக்கிறான்.

அவனை உணருங்கள். அறியுங்கள். தேடுங்கள்.

உங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான் கீதையின் நோக்கம்.








1 comment:

  1. சத்திய வார்த்தைகள் சகோதரரே இன்னும் இது போல ஆத்மாவை தூய்மை அடைய செய்யும் சொற்கள் தேவை நன்றி

    ReplyDelete