கீதை - 14.15 - தமோ குணத்தில் இருந்து விடுபட
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥१४- १५॥
ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கி ஷு ஜாயதே |
ததா ப்ரலீநஸ்தமஸி மூட யோநி ஷு ஜாயதே || 14- 15||
ரஜஸி = ரஜோ குணம் மிகுந்துள்ள ஒருவன்
ப்ரலயம் = முடிவில்
கத்வா = செல்வான்
கர்ம ஸங்கி ஷு = கர்மத்தில் பற்று உள்ளவர்களுடன்
ஜாயதே = பிறப்பான், சேருவான்
ததா = அதே போல்
ப்ரலீநஸ் = முடிவில்
தமஸி = தமோ குணம் மிகுந்துள்ளவன்
மூட = அறிவற்றவர்களுடன்
யோநி ஷு ஜாயதே = தோன்றுவான், சேருவான்
ரஜோ குணம் மிகுந்துள்ள ஒருவன், முடிவில் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமோ குணம் மிகுந்துள்ள முடிவில் மூடர்களிடையே தோன்றுகிறான்.
முந்தைய ஸ்லோகத்தில் சாத்வீக குணம் உள்ளவர்கள் பரிசுத்தமான ஞானிகள் உள்ள இடத்தில் சேர்வார்கள் என்று பார்த்தோம்.
அடுத்து, இந்த ஸ்லோகத்தில், ரஜோ மற்றும் தமோ குணம் உள்ளவர்கள் எங்கு செல்வார்கள் என்று வியாசர் கூறுகிறார்.
ரஜோ குணம் உள்ளவர்கள், கர்மத்தில் பற்று உள்ளவர்களிடம் சென்று சேர்வார்கள்.
தமோ குணம் உள்ளவர்கள், அறிவற்ற மூடர்களிடம் சென்று சேர்வார்கள்.
இந்த ப்ளாகை படிக்கும் என் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டது "ரொம்ப சரி...எனக்கு தமோ குணத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது. அதில் இருந்து விடுபட விரும்புகிறேன் ...அதற்கு கீதை ஏதாவது வழி சொல்கிறதா "
ஆம் வழி சொல்கிறது. முதல் வழி இந்த ஸ்லோகத்தில். மேலும் பல வழிகளை பின்னால் சொல்கிறது.
தமோ குணத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது ?
தமோ குணம் மூடர்களிடம் சென்று சேர்க்கும் என்றால், மூடர்களிடம் இருந்து விலகினால் தமோ குணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
தமோ குணம் உள்ளவர்கள் , தமோ குணம் உள்ளவர்களையே சென்று அடைகிறார்கள்.
சென்று அடைகிறார்கள் என்றால் ஏதோ கொள்ளை கும்பலில் சேர்ந்து தீய வழிகளில் ஈடுபடுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல.
அறிவில் சிறந்தவர்களிடம் சேராமல், மூடர்களிடம் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பது, அவர்களோடு முகநூல் (facebook) , மின்னஞ்சல் (emial) போன்றவற்றில் chat செய்வது, தொலைபேசியில் பேசுவது, அப்படிப்பட்ட குணம் உள்ளவர்களுடன் உணவருந்தச் செல்வது போன்ற சேர்கை.
பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்
என்றார் வள்ளுவர். பயன் இல்லாத சொற்களை பேசுபவர்களை விட்டு விலக வேண்டும். பயனுள்ள சொற்களை பேசுபவர்களோடு சேர வேண்டும்.
உயர்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும்.
வார, மாத புத்தகங்களை விட வேண்டும். கொலை, கொள்ளை நாவல்களை விட வேண்டும். அர்த்தமற்ற தொலைக்காட்சி நாடகங்களை விட வேண்டும். அதே போல் சினிமா.
நாளும் நாளும் நாம் விழித்து இருக்கும் நேரங்களில் இது போன்று மூடத்தனமான காரியங்களை நம்மை அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம். இவற்றை விட்டு விலக வேண்டும்.
அதன் முதல் படி, இந்தத் தொடர்புகளை குறைக்க வேண்டும்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களின் சராசரி நாள் எப்படி போகிறது என்று ? யாரோடு போகிறது என்று.
- தொலைக் காட்சி
- அறிவில் குறைந்த நண்பர்களோடு தொடர்பு
- அறிவைக் கூட்டாத வாசிப்பு
படிப் படியாக குறையுங்கள்.
பொழுது தான் போக வேண்டாமா ? தொலைக் காட்சி ஒண்ணு தானே இருக்கிறது என்று நினைத்தால், தொலைக் காட்சியில் நல்ல விஷயங்களைப் பாருங்கள். உடற் பயிற்சி செய்வது, நல்ல உணவுகள் தயாரிப்பது போன்ற நல்ல விஷயங்களை பாருங்கள்.
குப்பைகளை உள்ளே தள்ளிவிட்டு , அறிவும் மனமும் குப்பையாக கிடக்கிறதே என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. நீங்கள் உள்ளே போடுவதுதான் அங்கே இருக்கும்.
சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் அறிவில், ஞானத்தில் உயர்ந்தவர்கள் என்று. உயர்ந்தவர்களின் தொடர்பை நாடுங்கள். அது உங்களை தமோ குணத்தில் இருந்து விடுபட உதவும்.
பட்டியல் இடுங்கள். எதை குறைக்க வேண்டும், எதை கூட்ட வேண்டும் என்று.
முடியும் தானே ?
(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1415.html )
No comments:
Post a Comment