கீதை - 14.24 - நடுவு நிலைமை
समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥१४- २४॥
ஸமது³:க²ஸுக²: ஸ்வஸ்த²: ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: |
துல்யப்ரியாப்ரியோ தீ⁴ரஸ்துல்யநிந்தா³த்மஸம்ஸ்துதி: || 14- 24||
ஸம துக ஸுக = துக்கத்தையும் இன்பத்தையும் சுகமாக பார்ப்பான்.
ஸ்வஸ்த = தன்னிறைவு கொண்டான்
ஸம லோஷ்டாஸ்ம காஞ்சந: = மண்ணாங் கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்
துல்ய ப்ரிய அப்ரியோ = மனதிற்கு பிடித்ததையும் பிடிக்காததையும் ஒரே அளவாக பார்ப்பான்
தீர = உறுதியுடன் இருப்பான்
துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி: = நிந்தனையையும் புகழ்ச்சியையும் ஒன்றாகப் ஏற்றுக் கொள்வான்
துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக கொள்வான்
தன்னிறைவு கொண்டவன்.
மண்ணாங்கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்.
மனதுக்கு பிடித்ததையும் , பிடிக்காததையும் ஒன்றாக பார்க்கும் தீரன்.
இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாக ஏற்றுக் கொள்வான்.
குணங்களின் பிடியில் இருந்து விடுபட்டவன் எப்படி இருப்பான் என்று மேலும் கண்ணன் சொல்கிறான்....
எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பான் - இன்பம்/துன்பம், மண்ணாங்கட்டி/ தங்கக் கட்டி, பிடித்தது / பிடிக்காதது, இகழ்ச்சி / புகழ்ச்சி என்று வேறுபட்டு துருவங்களை ஒன்றாகக் காண்பான் .
இப்படி இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும் அது ஒரு வாழ்க்கையா ? வாழ்க்கை என்றால் இன்பத்தை நுகர வேண்டும், துன்பத்தை விலக்க வேண்டும். இரண்டையும் சமமாக பார்ப்பது என்றால் அது என்ன மாதிரியான வாழ்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் என்ன சுகம் இருக்க முடியும் என்ற கேள்விகள் நம் மனதில் எழும்.
சிந்திப்போம்.
இன்பம் துன்பம் என்றால் என்ன ?
இன்பமும் துன்பமும் எப்படி நிகழ்கின்றன ?
ஏதோ ஒன்றின் மேல் ஆசைப் படுகிறீர்கள்.
அது கிடைத்தால் இன்பம்.
கிடைக்காவிட்டால் துன்பம்.
ஆசைப் படாத ஒன்று கிடைத்தால் , சரி இருந்து விட்டுப் போகட்டும் என்று வேண்டுமானால் நினைக்கலாமே தவிர அதனால் இன்பம் வராது.
ஆசைப் பட்ட பெண், ஆசைப் பட்ட வேலை, கனவு கண்ட கார், வீடு, நிறைய மதிப்பெண்கள், மனதில் நினைத்த வரன் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ என்று எதுவுமே ஆசைப் பட்டு, அது கையில் கிடைத்தால் இன்பம். ஆசைப் பட்டு கையில் கிடைக்காவிட்ட்டல் துன்பம். கிடைத்தது கை நழுவி போய் விடுமோ என்று பயம்.
நீங்கள் ஆசைப் பட்ட பெண் உங்களுக்குக் கிடைத்தால் உங்களுக்கு இன்பம். அதே பெண்ணை , அவள் மேல் ஆசை இல்லாத ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அவனுக்கு அது ஒன்றும் பெரிய இன்பமாக இருக்காது. இன்பம் அந்த பெண்ணினால் அல்ல, நீங்கள் அவள் மேல் கொண்ட ஆசையினால்.
எனவே, இன்பம் என்பது நீங்கள் கொண்ட ஆசையினால், நீங்கள் கண்ட கனவினால், உங்களது ஆவலினால் வருகிறது என்று தெரிகிறது அல்லவா.
அதே போல , நீங்கள் ஆசைப்பட்ட ஒன்று உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால் உங்களுக்கு வருத்தம் வரும். அதன் மேல் ஆசைப் படாத ஒருவருக்கும் அது கிடைக்க வில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் வருந்துவாரா ? மாட்டார்.
எனவே இன்பமும் துன்பமும் நீங்கள் கொண்ட ஆசையினால் என்று புரிகிறது அல்லவா ?
ஆசை எதனால் வருகிறது ? சாத்வீக மற்றும் தமோ குணத்தினால் ஆசை வருகிறது.
இந்த குணங்களை கடந்தவனுக்கு ஆசை இல்லை. அதனால், இன்பமும் இல்லை துன்பமும் இல்லை.
ஏன் என்றால் அவன் ஆசை கொள்வதும் இல்லை. வருத்தம் கொள்வதும் இல்லை.
குணங்களின் பிடியில் இருந்து விடுபட்டவன் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பார்ப்பான் ஏன் என்றால் உலகில் இன்பம் என்றும் துன்பம் என்றும் எதுவும் தனியாக இல்லை. எல்லாம் நாம் நினைப்பதில் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.
அடுத்ததாக,
இன்பமும் துன்பமும் ஒன்றென்று அறிந்தால், அந்த இன்பத்தை பிடிக்க ஓட வேண்டியது இருக்காது. இன்பம் வேண்டும் என்றால் அதை அடைய செல்வம் வேண்டும். செல்வம் வேண்டும் என்றால் உழைப்பு வேண்டும்.
குணங்களை கடந்தவனுக்கு இன்பம் துன்பம் இரண்டும் இல்லை. எனவே செல்வத்தை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. .
"மண்ணாங்கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்"
இதெல்லாம் நடக்கிற காரியமா ? கல்லையும் தங்கத்தையும் ஒன்றாக பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?
இருந்தார்கள்.
ஆச்சரியமாக இருக்கும் நமக்கு. கீதையின் இதே வரிகள் பெரிய புராணத்தில் , திருநாவுக்கரசரின் வாழ்க்கையை சித்தரிக்கும் பாடலில் வருகிறது. இதே வரிகள் என்றால் இதே வரிகள்.
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
சீர் பிரித்த பின்
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
என்பார் அப்பரைப் பற்றி தெய்வப் புலவர் சேக்கிழார்.
நாவுக்கரசர் உழவராப் பணி (கோவிலை சுத்தம் செய்தல் ) செய்து கொண்டிருக்கும் போது , கல்லோடு சில விலை உயர்ந்த வைர வைடூரியங்களும் வந்தன. அவருக்கு அந்த சாதாரண கல்லுக்கும், விலை உயர்ந்த வைரம் வைடூரியம் போன்ற கற்களுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. மத்த குப்பைகளோடு, இந்த வைரத்தையும் தூக்கிப் போட்டார்.
செல்வத்தின் மேல் ஆசை உள்ளவனுக்குத் தான் பொன் என்றும் செங்கல் ஓடு என்றும் வித்தியாசம் தெரியும்.
செல்வத்தின் மேல் ஆசை உள்ளவனுக்குத் தான் பொன் என்றும் செங்கல் ஓடு என்றும் வித்தியாசம் தெரியும்.
அவரே சொல்கிறார்...
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலை நான்
படைத்த அப்பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக்
கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
குணங்களைக் கடந்தவன் பொன்னையும், செங்கலையும் ஒன்றாக நோக்குவான்.
அப்படி நோக்கிய பெரியவர்கள் இருந்தார்கள்.
"மனதுக்கு பிடித்ததையும் , பிடிக்காததையும் ஒன்றாக பார்க்கும் தீரன்."
அது எப்படி பிடித்ததையும் பிடிக்கததையும் ஒன்றாகப் பார்க்க முடியும் ?
மனதுக்கு ஏன் ஒன்று பிடிக்கிறது ?
முந்தைய அனுபவத்தால், அந்த ஞாபகத்தால்.
முதன் முதலில் லட்டு சாப்பிடும் போது அதன் சுவை பிடித்துப் போய் விடுகிறது. அதற்குப் பிறகு அதைப் பார்த்ததும் மனதில் ஆசை எழுகிறது. காரணம், முன் அனுபவம். ஞாபகம்.
அதே போலத்தான் பிடிக்கதாதும்.
பிடித்தது, பிடிக்காதது எல்லாம் நம் மனதுக்குள் நிகழ்வது. வெளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் சாயம் பூசுகிறோம்.
குணங்களின் பிடியில் இருந்து விடுபட்டவன் இரண்டையும் ஒன்றாகப் பார்பான்.
அவனுக்கு பகையும் இல்லை, நட்பும் இல்லை.
வேண்டியவர்களும் இல்லை, வேண்டாதவர்களும் இல்லை.
யார் உற்றார் ? யார் அயலார் ?
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாண்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
அவன் புகழையும் இகழையும் ஒன்றாகப் பார்ப்பான்
பெருமை புகழ் எல்லாம் ரஜோ மற்றும் தமோ குணத்தின் தாக்கம். அந்த குணங்களில் இருந்து விடு பட்டவனுக்கு புகழ் வந்தாலும் இகழ் வந்தாலும் ஒன்றுதான். அவன் புகழைத் தேடி ஓடுவதும் இல்லை; இகழ் வந்தால் அதை நினைத்து வருந்துவதும் இல்லை.
நாம் புகழையும் இகழையும், வெற்றியையும் தோல்வியையும், பிடித்ததையும் பிடிக்காததையும் வேறு வேறாகப் பார்க்கிறோம். எனவே, இது வேண்டும், அது வேண்டாம் என்று நினைக்கிறோம்.
குணங்களைக் கண்டந்தவர்களுக்கு இந்த பாகுபாடெல்லாம் இல்லை. அவர்கள் இவற்றை ஒன்றாவே பார்க்கிறார்கள். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல.
முயற்சி செய்து பாருங்கள்.
இன்பம் வரும்போது தாம் தூம் என்று குதிக்காமல் இருந்தால், துக்கமும் பெரிதாகத் தெரியாது.
இது குணங்களை கடந்தவர்களின் அடையாளம்.
என்றேனும் உங்களுக்கும் இது நிகழலாம்.
வாழ்த்துக்கள்.
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/1424.html )
No comments:
Post a Comment