Sunday, April 17, 2016

கீதை - 15.1 - வேத வித்து

கீதை - 15.1 - வேத வித்து


ஷ்ரீ பகவாநுவாச
ஊர்த்வமூலமதஃஷாகமஷ்வத்தஂ ப்ராஹுரவ்யயம்.
சந்தாஂஸி யஸ்ய பர்ணாநி யஸ்தஂ வேத ஸ வேதவித்

ஷ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்

ஊர்த்வ மூலம் = வேர்கள் மேலேயும்

அதஃஷாகம் = கிளைகள் கீழேயும்

அஷ்வத்த = அஸ்வத மரத்தின்

ப்ராஹு = கூறுகிறார்கள்

அவ்யயம் = மாறாத, நிலைத்த

சந்தாஂஸி = வேதங்களில்

யஸ்ய = அவற்றில்

பர்ணாநி = இலைகள்

ய = அவன்

ஸ்த = அவற்றில்

வேத = வேதங்களை

ஸ = அவன்

வேதவித் = விற்பனனாவான் வேதங்களில்

மாறாத அது  மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண் டது. ஆலமரம் போன்ற  அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான்.

மேலே வேரும் , கீழே கிளைகளும் கொண்ட மரம் என்றால் அது என்ன மரம் ? நாம்  அன்றாடம் பார்க்கும் மரங்கள் எல்லாவற்றிற்கும் வேர் கீழேயும், கிளைகள்  மேலேயும் இருக்கும். இது என்ன புது மாதிரியான மரம் , தலை கீழாக இருக்கிறதே.

அது மட்டும் அல்ல, இந்த மரத்தைப் பற்றி புரிந்து கொண்டவனே வேதத்தை அறிந்தவனாவான் என்கிறது கீதை.

அது என்ன மரம் ?

நமது வம்ச வரலாற்றை , நமது குடும்ப வரலாற்றை ஒரு படமாக வரைந்தால் எப்படி இருக்கும்.

நான், எனது சகோதர், சகோதரிகள் ஒரு மட்டத்தில் இருப்போம்.

அதுற்கு மேல், என் தாய் தந்தையர், அவர்களின் உடன் உடன்பிறப்பு.

அதற்கு மேல் என் தாத்தா பாட்டி, அவர்களின் உடன் பிறப்புகள்.

அதற்கு மேல்  அவர்களின் தந்தை, தாய்...என்று போகும்.

இப்படி போகும் மரத்தில் (family tree ), மேலே போய் கொண்டே இருந்தால் அது சிறுத்துக் கொண்டே  போகும்...கடைசியில் யாரோ ஒருவரில் போய் நிற்கும் அல்லவா ?

இந்த உலகை எடுத்துக் கொண்டால், இப்படியே மேலே போய் கொண்டே இருக்கும்...ஒரு கட்டத்தில் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர்களில் இருந்து  வந்திருப்போம். இன்னும் மேலே போனால் அனைத்து முதுகு எலும்பு உள்ள உயிர் இனங்கள் எல்லாம்   ஒன்டிரில் இருந்து வந்திருக்கும்.

இன்னும் மேலே போனால், அனைத்து உயிர் இனங்களும் ஒன்றில் இருந்து வந்திருக்கும்.

இன்னும் மேலே போனால் அனைத்து உயிர் உள்ளதும் உயிர் அற்றதும் ஏதோ ஒன்றில் இருந்து  புறப்பட்டு கிளைத்து கிளைத்து வந்திருக்கும் அல்லவா ?

அது தான் ஆதி மூலம்.

அது தான் ஆணி வேர். அந்த வேரில் இருந்துதான் எல்லாம் கிளைத்து வந்தது.

சரி, இதை வேறு யாராவது எங்காவது சொல்லி இருக்கிறார்காளா என்றால் சொல்லி இருக்கிறார்கள்.

ஒன்றாம் வகுப்பில் படித்த குறள் ...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

அது என்ன "பகவன்"

பகவன் என்றால் பகுப்பவன். பகுத்தல் என்றால் பிரித்தல். கிளைத்தல்.

இந்த உலகம் அனைத்தும் ஏதோ ஒன்றில் இருந்து பிரிந்து  வந்தது. குறள் அதை "ஆதி பகவன்" என்கிறது.

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பார் மணிவாசகர்.  வாழ்கைக்கு முதலான பொருள்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் என்பார் கம்பர்.

தான் எல்லாவற்றிலும் இருக்கும் படி உலகை ஆக்கினான் என்பார்.

சரி, இருந்து விட்டுப் போகட்டும்...இந்த உலகம் ஏதோ ஒன்றில் இருந்து வந்ததாகவே இருக்கட்டும் , அதனால் என்ன ? அதை அறிவதற்கும் , வேதத்தை அறிவதற்கும் என்ன தொடர்பு ?


இந்த உலகம் அனைத்தும் ஏதோ ஒன்றில் இருந்து வந்தது என்றால் நீங்களும், நானும், இங்குள்ள நாய் குட்டியும், மற்றைய மனிதர்களும், உயிர்களும் எல்லாம்  ஒன்றில் இருந்து வந்தவை. நாம் எல்லாம் சொந்தக்காரர்கள். ஒரே குடும்பம்.  மனிதர்கள் மட்டும் அல்ல, அனைத்து உயிர்களும் ஒரே குடும்பம்.

இதில் வேற்றுமை எங்கே வந்தது ? இதில் சண்டை சச்சரவு என்ன ? அடி பிடி என்ன ? பொறாமை கோபம் என்ன ?

யார் மீது கோபம் ? யார் மீது பகை ? யார் மீது பொறாமை ? நமக்குள் என்ன. ஒன்றுக்குள் ஒன்றாக இருப்போம்.

வேதம் இதையேதான்  சொல்கிறது.

வேதத்தின் சாரம் "பரோபகாரம் இதம் புண்யம் "

சரி, வேர் மேலே இருக்கிறது என்பது புரிகிறது.

அதன் இலைகளே வேதம் என்றால் என்ன அர்த்தம் ?

இலைகள் என்ன செய்கின்றன ?

இலைகள் , மேலிருந்து சூரிய ஒளியையும், மண்ணில் இருந்து நீர் மற்றும் தேவையான  உப்புகளைக்யும், காற்றில் இருந்து கரிய மில வாயுவையும் எடுத்து தன்னிடம் உள்ள  பச்சையம் (chlorophyll )  என்பதன் மூலம் உணவு தயாரிக்கிறது.

வாழ்க்கையின் அனுபவங்களை, நூல்களின் அர்த்தங்களை எல்லாம் ஒன்று சேர்த்து  வேதங்கள் நமக்குத் தருகின்றன. எப்படி இலைகள் கனிகளை தருகிறதோ அது போல  வேதங்கள் நமக்கு அறிவு என்ற கனியைத் தருவதால் அது  இலைகள் எனப்பட்டது.

அது மட்டும் அல்ல, இலைகள் மூலம் நீர் வெளியேற்றப் படுகிறது. நீர் ஆவியாகிப் போனால்  மரம் தன் வேர் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி மேலே அனுப்பும். அப்படி அனுப்பும் போது கிளைகளும், இலைகளும் அந்த நீரைப் பெற்று வளரும்.  மரம் வாழ வேண்டும் என்றால் இலைகள் வேண்டும். அதே போல  இந்த சம்சாரம் என்ற வாழ்கை தொடர வேதங்கள் வேண்டும்.

வேதங்கள் வாழ வைக்கின்றன.

அறிவு என்பது நின்று போய் விடுவது அல்ல. அது நாளும் நாளும் விரிந்து கொண்டே போவது.

இலைகள் பழுத்து கீழே விழும். அவை மக்கி உரமாகி அந்த மரத்தில் சேர்ந்து புது இலைகள்  உருவாக வழி செய்யும்.

அது போல , வேதங்கள் காலத்தோடு சேர்ந்து தன்னைத் தானே புதுபித்துக் கொள்ளும். அப்படி புதுபித்து அது என்றும் வழி காட்டும்.

அப்படியா ? அப்படி புதியதாய் வேதம் வந்த மாதிரி தெரியவில்லையே என்று நினைகிறீர்களா ?

நாள்லாயிர திவ்ய  பிரபந்தமும் , தேவாரமும் திருவாசகமும்  வேதத்தின்   சாரங்கள்தான்.

வேதத்தை எளிமை படுத்தி அவற்றின் சாரத்தை புதிதாக கொண்டு தந்தவை இந்த நூல்கள்.

வேதம் தன்னை மீண்டும் மீண்டும் புதுபித்து கொண்டு வரும் - நமக்கு வழி காட்ட.

அந்த வழி உங்களுக்காகவும் இருக்கட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/151.html )

No comments:

Post a Comment