Wednesday, April 6, 2016

கீதை - 14.27 - தனிமை இன்பம்

கீதை - 14.27 - தனிமை இன்பம் 


ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥१४- २७॥

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச |
ஸா²ஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச || 14- 27||

ப்ரஹ்மணோ = பிரம்மமும்

ஹி = என்றால்

 ப்ரதிஷ்டா = அடிப்படை, மூலம்,

அஹம் = நான்

அம்ருதஸ்யா = நிலைத்த, அழிவற்ற

அவ்யயஸ்ய = மாற்றம் இல்லாத

ச = மேலும்

ஸாஸ்வதஸ்ய = நிலைத்த

ச =மேலும்

தர்மஸ்ய = தர்மத்தின் படி, தாங்கிப் பிடிக்கும் (திர் = தாங்கிப் பிடிப்பது)

ஸுகஸ்யை = சுகம்

ஆகாந்திகஸ்ய / ஏகாந்திகஸ்ய = தனிமை, ஏகாந்தம்

ச = மேலும்


இறப்பு, அழிவற்ற பிரம்மத்துக்கு நானே அடிப்படை. ; நிலைத்து இருக்கும் அறத்துக்கும் தனிமை இன்பத்துக்கும் நானே அடிப்படை. 

இந்த சுலோகத்திற்கு அர்த்தம் என்ன என்று சிந்திப்பதற்கு முன், ஒரு ஜென் கதை.

சீனாவில் ஒரு கிராமத்தில் ஒரு ஜென் குரு இருந்தார். ஒரு நாள் அவர் தன் சீடன்  ஹோடேய் என்பவனை அழைத்து அவனுக்கு ஒரு புதிர் ஒன்றைச் சொன்னார்.

"என்னிடம் ஒரு பாட்டில் இருந்தது. அதற்குள் ஒரு நாள் ஒரு வாத்து முட்டையை இட்டு வைத்தேன். சிறிது நாளில் அந்த முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வந்து விட்டது.  நானும் அந்த வாத்து குஞ்சுக்கு உணவை அந்த பாட்டிலுக்கு உள்ளேயே  போட்டு வந்தேன். அந்த வாத்தும் அதை உண்டு வளர்ந்து  வந்தது. இப்போது அந்த வாத்து வளர்ந்து பெரிதாகி விட்டது. பாட்டிலுக்குள் இருப்பது அதற்கு  கடினமாக இருக்கிறது.

பாட்டிலையும் உடைக்காமல், வாதத்தையும் கொல்லாமல் எப்படி வாத்தை வெளியே எடுப்பது "

இது தான் புதிர்.

சீடன் எவ்வளவோ யோசித்தான். ஒரு வழியும் தெரியவில்லை.


ஒரு நாள் அவன் இந்த புதிரை ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு இருக்கும் போது , அந்த குரு  அவன் அருகில் வந்து "ஹோடேய்" என்று சத்தம் போட்டார்.

அவன் ஒரு கணம் அதிர்ந்தான் பின் கூறினான் "குருவே வாத்து வெளியே வந்து விட்டது  (the goose is out ) " என்று.

புரிகிறதா ?

எபப்டி அந்த வாத்து வெளியே வந்தது ?

பாட்டில் என்பது நம் "நான்" என்ற அகந்தை (ego ).

கொஞ்சம் கொஞ்சமாக நாம் நமது அகந்தையை வளர்த்து வளர்த்து நம்மைச் சுற்றி ஒரு  வேலி , சுவரை உண்டாக்கி விடுகிறோம்.

நான் தமிழன்
நான் இந்தியன்
நான் இந்து / கிறித்துவன்/இஸ்லாமியன்
நான் ஆண் /பெண்
நான் இந்த ஜாதி, இந்த மதம், இந்த குலம் ,
நான் இந்த தத்துவங்களை பின் பற்றுகிறேன்
நான் கறுப்பன் , நான் சிவப்பன்
....

இப்படி எத்தனையோ "நான்" களை உருவாக்கி அதற்குள் கிடந்து துன்பப் படுகிறோம்.

இந்த "நான்" கள் எல்லாம் கற்பனையானவை. நிஜத்தில் ஒன்றும் கிடையாது.

அதை உணரும் போது , இந்த அகந்தை விலகுகிறது. நான் என்ற திரை விலகும் போது  உண்மை புலப்படுகிறது.

நான் எப்படி உண்மை இல்லையோ, அது போலத்தான் அந்த பாட்டிலும் உண்மை இல்லை. அதை அறிந்த உடன், வாத்து வெளியே வந்து விட்டது. இன்னும் சொல்லப் போனால்  , அந்த வாத்து ஒரு போதும் சிறைப் படவில்லை நாமே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது சிறை பட்டதாக.

இப்போது சுலோகத்திற்கு போவோம்.

இறப்பு, அழிவற்ற பிரம்மத்துக்கு நானே அடிப்படை

நாம் என்ன செய்கிறோம் ? உலகில் , நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் பாதிக்கப் பட்டு  பலவற்றை நினைக்கிறோம், செய்கிறோம். அது வேண்டும், இது நன்றாக இருக்கும் போல இருக்கிறதே , இதுவும் வேண்டும் என்று பொருள்களின் பின்னால், அனுபவங்களின் பின்னால் அலைகிறோம். அவை கிடைக்க வேண்டுமே என்று ஏங்குகிறோம்.  நாம் பார்ப்பவை , படிப்பவை, கேட்பவை இவற்றால்  பாதிக்கப் படுகிறோம். அதனால் இன்பம், துன்பம், வெறுப்பு, விருப்பு என்று பல உணர்சிகளுக்கு ஆட்படுகிறோம். இப்படி ஒவ்வொரு கணமும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.

பசி, தாகம், தூக்கம், துக்கம், மகிழ்ச்சி, சோகம், காதல், கருணை, பகைமை என்று மாறிக் கொண்டே இருக்கிறோம்.

உங்களை நன்றாக நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும், எப்படி எல்லாம் நீங்கள் மாறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று.

ஒரு நாளில் மட்டும் அல்ல, வயதாகும் போது சில மாற்றங்கள், இடம் மாறும்போது சில மாற்றங்கள், என்று எத்தனை மாற்றங்கள்.

இந்த மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் "நான்" என்றும் மாறுவது இல்லை. அது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறது. அழிவற்றது.  அனைத்து மாற்றங்களுக்கும்  அதுவே அடிப்படை.

முன்பே சொன்னதுதான், வேறு உதாரணம் கிடைக்காததால் மீண்டும் சொல்கிறேன்.

கடலும் அலையும் போல. அலை போல வாழ்க்கை நம்மை அலைக்கழிக்கிறது. கடல் போல நாம் அடிப்படையில் மாற்றம் இன்றி இருக்கிறோம். அலையும் கடல் தான். இருந்தாலும் அது வேறாகத் தெரிகிறது. நான் அலை இல்லை, கடல் என்று அறியும் போது அலை அடங்கும்.


தனிமை இன்பத்துக்கும் நானே அடிப்படை.

தனிமை இன்பம் என்றால் என்ன ? எல்லோரையும் விட்டு விட்டு ஏதாவது ஒரு குகையில் சென்று அமர்ந்து கொள்வதா. உற்றார் , உறவினர், சொந்தம், நட்பு என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்காவது ஓடி விடுவதா ? அப்படி ஓடி விட்டாலும், இன்பம் வரும் ? அந்த நினைவுகள் வருத்தாதா ?

தனிமை என்பது அது அல்ல.

நமது அறிவுக்குள்,  மனதுக்குள், எத்தனை பேர் இருந்து நம்மை செலுத்துகிறார்கள் ?

நம் பெற்றோர், நமக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்கள், உடன் பிறப்புகள், நண்பர்கள், உறவினர்கள், நாம்   படித்த புத்தகங்கள், பார்த்த தொலைக்காட்சி, (டிவி), நிழற்படம் (movie ), மத குருமார்கள்,  என்று அத்தனை பேரும் நம் மண்டைக்குள் இருந்து கொண்டு நம்மை செலுத்துகிறார்கள். ஒரு பெரிய கும்பலே நமக்குள் இருக்கிறது. இத்தனை பேரின் சத்தம் எப்படி இருக்கும். நமக்குப் பழகிப் போய் விட்டதால் சத்தம் கேட்கவில்லை. குப்பை வண்டி ஓட்டுபவனுக்கு அந்த வண்டியின் நாற்றம் தெரிவது இல்லை. அது போல இந்த கும்பல்களின் சத்தம், இரைச்சல் நமக்கு கேட்பது இல்லை.

இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு, அமைதியாக இருந்தால் , அந்த தனிமை இன்பம் என்ன என்று தெரியும்.

இனிது இனிது ஏகாந்தம் இனிது என்பார் ஔவையார்.

தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா என்றான் பாரதி.

கூட்டி வந்த கூட்டத்தை, பெற்ற இரவல் ஞானத்தை விட்டு விட்டு வாருங்கள்.

முதன் முதலாக நீங்கள் யார் என்று அறிவீர்கள்.

உங்களை, உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது கீதை.

கை குலுக்கிக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்கள் அறியும்போது மற்றவர்களையும் அறிவீர்கள்.

கீதை வாசலை திறந்து விட்டது. வெளியில் வாருங்கள்.

முதன் முதலாக , இந்த உலகை , உங்கள் கண்ணால் பாருங்கள்.

வாழ்த்துக்கள்

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.com/2016/04/1427.html )

No comments:

Post a Comment