கீதை - 15.2 - சம்சாரம் எனும் மரம்
अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसंततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥१५- २॥
அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா: |
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே || 15- 2|
அத = கீழே
ச = மேலும்
உர்த்வம் = மேலே
ப்ரஸ்ருத = பரந்து விரிந்த
தஸ்ய = அதன்
ஸாகா = கிளைகள்
குணப்ரவ்ருத்தா = குணங்களால் உருவாக்கப்பட்ட
விஷயப்ரவாலா: = புதிதாக முளை விட்டு
அத = கீழே
ஸ்ச = மேலும்
மூலாநி = மூல காரணமான
அநுஸந்ததாநி = பரவியுள்ள
கர்மாநுபந்தீநி = கர்மங்களால் பிணைக்கப்பட்டு
மநுஷ்ய லோகே = மனித குலமே
அந்த ஆல மரத்தின் கிளைகள் குணங்களால் வளர்ந்து; விஷயங்களால் துளிர்விட்டு, பரந்து விரிந்து , கர்ம வினைகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
ஒரு மரத்தை வைத்துக் கொண்டு வியாசர் வாழ்கையை விளக்குறார்.
மரத்தின் அடியில் இருந்து பலர் ஞானம் பெற்றது இதனால்தானோ ? மரம் எத்தனையோ விஷயங்களை விளக்குகிறது.
நாம் நாளும் மாற்றம் அடைகிறோம்.
சில நேரம் உயர்கிறோம். பல நேரங்களில் மேலே செல்லாமல் பக்கவாட்டில் செல்கிறோம். சில நேரம் கீழ் நோக்கி கூட செல்கிறோம்.
சில நாட்கள் நல்ல புத்தகங்களை படிப்பது, அறிவார்த்த விஷயங்களை கேட்பது, நல்லவர்களுடன் பழகுவது, என்று உயர்வான விஷயங்களில் ஈடுபடுகிறோம்.
சில நாள், தொலைக்காட்சி, வாரப் பத்தரிகைகள், அரட்டை என்று செல்கிறது.
சில நாள் கோபம், பொறாமை, பொய் பேசுவது, கட்டுப் பாடு இல்லாமல் உண்பது என்று செல்கிறது.
ஏன் இப்படி நிகழ்கிறது ?
எது நம்மை இப்படி செலுத்துகிறது ?
மரத்தின் கிளைகள் மேல் நோக்கியும் வளர்கின்றன, பக்கவாட்டிலும் வளர்கின்றன, வேர்கள் கீழ் நோக்கியும் செல்கின்றது.
"அந்த ஆல மரத்தின் கிளைகள் குணங்களால் வளர்ந்து"
நமது குணங்கள் நம்மை வளர்க்கின்றன. மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ, பக்கவாட்டிலோ ஏதோ ஒரு விதத்தில் நம்மை அவை தூண்டி வளர்க்கின்றன.
சாத்வீக குணம் மேல் நோக்கி வளர்க்கிறது.
ரஜோ குணம் பக்கவாட்டில்.
தமோ குணம் கீழ் நோக்கி செலுத்துகிறது.
எந்த குணம் உங்களுக்குள் மிகுந்து இருக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும்.
இரண்டாவது,
"விஷயங்களால் துளிர்விட்டு, பரந்து விரிந்து "
நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களால் நம்மில் புதுப் புது துளிர்கள் எழுகின்றன. புதிதாக ஒரு கார் வந்திருக்கிறதாமே, அதை வாங்கினால் என்ன ? அங்கே ஒரு புது அபார்ட்மெண்ட் வருகிறதாம் , நமக்கும் அதில் ஒரு பிளாட் எடுத்தால் என்ன, அயல் நாட்டு சுற்றுப் பயணம் செல்ல குறைந்த செலவில் ஏதோ திட்டம் அறிவித்திருக்கிறார்கள்...போய் விட்டு வந்தால் என்ன என்று விஷய ஞானங்களால் புதுப் புது துளிர்கள் எழுகின்றன.
புதிதாக ஒரு துளிர் விடும் பொழுது, ஒரு மொட்டு வெளி வரும்போது பார்க்க அழகாகத்தான் இருக்கும்.
புது கிளை வளரும். அது பரந்து விரியும்.
அப்போது என்ன ஆகும் ?
அந்த கிளைக்கு, அதில் உள்ள இலைகளுக்கு, அதில் உள்ள மலர்களுக்கு, காய் , மற்றும் கனிகளுக்கு வேர் நீரைத் தேடிச் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டிய சத்துக்களை உறிஞ்சி மேலே அனுப்ப வேண்டும்.
மரம் பெரிதாக வளர வளர வேர் மேலும் மேலும் கீழ் நோக்கி வளர வேண்டும். அது மட்டும் அல்ல, மரம் கீழே விழுந்து விடாமல் இருக்க அது பக்க வேர்களையும், சல்லி வேர்களையும் உருவாக்கி மண்ணோடு இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
அதே போல, புதுப் புது ஆசைகள் , புதுப் புது தேவைகளை உருவாக்கும்.
அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய மேலும் கடினமாக உழைக்க வேண்டும். அது மட்டும் அல்ல, பல பேரின் தயவு தேவைப் படும். இந்த உலகில் மேலும் மேலும் பற்று கூடிக் கொண்டே போகும்.
கர்மா (வேலை) ஒரு புறம். செல்வம் சேர்க்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும், சரியானபடி அதை செலவழிக்க வேண்டும் என்ற பயம், ஆசை என்று உலகியல் பற்றுகள் நாளும் நாளும் கூடிக் கொண்டே போகும்.
"கர்ம வினைகளால் பிணைக்கப் பட்டுள்ளது. "
இப்படி, புது விஷயங்கள், புதுத் தேவைகள், புது முயற்சிகள் என்று கர்ம வினைகள் கூடிக் கொண்டே போகிறது.
இதுதான் சம்சார என்ற மரம்.
இந்த மரத்தை எப்படி இல்லாமல் போக்குவது ? வெட்டினால் மீண்டும் துளிர்விடும். ஒரு ஆசை போனால், இன்னொரு ஆசை வரும்.
மரமே இல்லாமல் செய்து விட்டால் ?
அது எப்படி முடியும் ?
முடியும் என்று சொல்வது மட்டும் அல்ல, அதற்கான வழியும் சொல்லித் தருகிறார் வியாசர்.
கேட்டுப் பயன் பெறுவோமா ?
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/152.html )
No comments:
Post a Comment