கீதை - 14.26 - பக்தியும் சேவையும்
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥१४- २६॥
மாம் ச யோவ்ய பிசாரேண பக்தியோகே³ந ஸேவதே |
ஸ கு³ணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே || 14- 26||
மாம் = என்னை
ச = மேலும்
யோ = எவன்
அவ்யபிசாரேண = மாறாத
பக்தியோகேந = பக்தி யோகத்தில்
ஸேவதே = சேவை செய்கிறானோ
ஸ = அவன்
குணாந் = குணங்களின்
ஸமதீத்யை = தாண்டி , கடந்து
எதத் = இவை
ப்ரஹ்ம பூயாய = பிரம்மத்தின் நிலையை
கல்பதே = அடையத் தகுந்தவன்
எவன் என் மேல் மாறாத பக்தியோடு சேவை செய்கிறானோ, அவன் குணங்களைத் தாண்டி பிரம்மத்தின் நிலையை அடையத் தகுதி .உள்ளவன் ஆவான்.
இந்த அத்யாயம் முதலில் குணங்களைப் பற்றி கூறியது. பின், குணங்களை எப்படி கடப்பது என்று கூறியது. பின், அப்படி குணங்களை கடந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூறியது.
நமக்கு ஆவல் அதிகரித்துக் கொண்டே போகிறது...எப்படி நாம் இந்த குணங்களின் பிடியில் இருந்து தப்புவது என்று.
இந்த ஸ்லோகத்தில் வியாசர் அதை சொல்கிறார்.
எவன் என்மேல் மாறாத பக்தி கொண்டு சேவை செய்வானோ அவன் குணங்களை கடந்து பிரமத்தை அடையும் தகுதி பெறுவான் என்கிறார்.
அட, இதுக்குத்தான் இவ்வளவு build up ஆ என்று நமக்குத் தோன்றும். "என்மேல் பக்தியோடு சேவை செய்தால் " .
என்னமோ பெரிசா சொல்லப் போகிறார் என்று பார்த்தால் மிகச் சாதாரணமாக பக்தி செய் , சேவை செய் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
பக்திதான் எவ்வளவோ பேர் செய்கிறார்கள். சேவையும் நிறைய பேர் செய்கிறார்கள். அப்படி செய்த யாரும் குணங்களை கடந்து பிரமத்தை அடைந்த மாதிரி தெரியவிலையே நமக்கு.
சில சமயம் மிக உயர்ந்த உபதேசங்கள் மிகச் சாதாரணமாய் தெரியும்.
உதாரணமாக,
வாழ்க்கை வெறுத்துப் போய் , அண்ணாமலை கோபுரத்தின் மேல் ஏறி குதித்து உயிரை விடத் துணிந்தார் அருணகிரிநாதர். குதித்தும் விட்டார். கீழே விழு முன்னே அவரைக் கையில் ஏந்தி முருகன் அவருக்கு ஒரு உபதேசம் சொன்னான். நாம் நினைப்போம், ஒரு ரெண்டு மூணு மணிநேரம் உபதேசம் செய்திருப்பார் என்று. இல்லவே இல்லை.
இரண்டே ரெண்டு வார்த்தை தான் முருகன் சொன்னான்.
"சும்மா இரு"
அவ்வளவுதான். உபதேசம் முடிந்து விட்டது.
அட, என்னமோ பெரிசாக செய்யச் சொல்லப் போகிறான் முருகன், தீயின் நடுவில் நிற்க வேண்டும், ஊசி முனையில் நின்று தவம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லப் போகிறான் என்று நினைத்தவருக்கு, இது ரொம்ப சுலபமாகப் பட்டது.
சும்மா இருக்கணும், அவ்வளவுதானே. இருந்துட்டா போகுது னு நினைத்து, வந்து அமர்ந்து விட்டார்.
அமர்ந்த பிறகுதான் தெரிந்தது சும்மா இருப்பது என்பது எவ்வளவு கடினமான செயல் என்று.
அந்த "சும்மா இரு" என்ற சொல்லின் பெரிய பொருளை நான் புரிந்து கொள்ளவில்லை என்றார்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மாப் பொருள் ஒன்றும் அறிந்திலனே
அம் + மா = அந்த பெரிய பொருளை அறிந்திலேன் என்கிறார்.
அது போல இங்கே,
"என் மேல் இடை விடாத பக்தியோடு சேவை செய்வது:" என்றால் என்ன ?
பக்தி என்றால் ஏதோ ஒன்றின் மேல் மனம் ஒன்றி , இலயித்து இருப்பது.
மனித மனம் அலை பாயும் தன்மை கொண்டது. ஒரு நொடி கூட எதன் மேலும் நிற்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது.
எத்தனை முறை சொன்னாலும் ஞாபகப் படுத்தினாலும் "நமக்குள் ஒளி விடும் ஞானமே, தன் உணர்வே, பரம் பொருள்" என்று சொன்னாலும் மறந்து போகிறது.
உலகில் நடக்கும் சம்பவங்களில் சிக்கி, குணங்கள் பிடித்துத் தள்ள அதில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது.
இந்த உலகில் நன்மை தீமைகளை படைக்கும் கர்த்தா நான், நட்பு பகை என்ற உறவுகளை நிர்ணயிக்கும் தலைவன் நான், என்னால் இந்த உலகம் அர்த்தம் பெறுகிறது என்ற எண்ணத்தில் எப்போதும் இருக்க முடிவது இல்லை.
அதைத்தான் "என் மேல் இடையறாத பக்தி" என்கிறது கீதை.
நான் என்னை அறிய வேண்டும்.
சிக்கல் என்ன என்றால், நாம் அறிவோம். வீட்டில் அமர்ந்து, கீதை போன்ற புத்தகங்களை படிக்கும் போது , அமைதியாக சிந்திக்கும் போது அந்த எண்ணம் வரும். நம்மால் அதை உணர முடிகிறது. ஆனால், அந்த எண்ணத்திலேயே இடையறாது இருக்க முடிவதில்லை.
அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
"சேவை"
சேவை செய்ய வேண்டும். தொண்டு செய்ய வேண்டும்.
பக்தி என்றால் ஏதோ துறவறம் மேற்கொண்டு கானகம் போவது இல்லை.
நாட்டில் இருந்து கொண்டே அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்வதிலே அந்த பக்தி வரும்.
சேவை, தொண்டு என்றால் இலாபத்திற்காக இல்லாமல், ஆதாயத்திற்காக இல்லாமல் பக்தியோடு செய்வது. அப்படிச் செய்தால் இந்த குணங்களின் பிடியில் இருந்து விடுபடலாம்.
பிறருக்காக வாழ்வது, மற்ற உயிர்களின் துயர் துடைப்பது, தனகென்று இல்லாமல் பிறருக்கென்று உழைப்பது, மற்ற உயிர்களின் துன்பங்களை தன் துன்பமாக நினைத்து உதவுவது....
அப்படி செய்யும் போது பொருளாசை விலகும், நண்பன் பகைவன் என்ற வேறுபாடுகள் மறையும், எதுவும் தனக்கு வேண்டும் என்று நினைக்காததால் வெற்றி தோல்வி இல்லை, மான அவமானம் இல்லை....
என்னைபோலவே அனைத்து உயிர்களும் என்ற பரந்த எண்ணம் வரும்.
அப்படி வரும் போது அவன் பிரம்மத்தை அடையும் தகுதி பெறுவான் என்கிறார் வியாசர்.
அது என்ன பிரம்மம்.
ப்ருஹ் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு வளர்தல் , பெருகுதல் என்று பொருள்.
அனைத்து உயிரையும் தன் உயிராக நினைத்து தொண்டு செய்யும்போது நம் எல்லைகள் விரியத்தானே செய்கிறது...
எல்லோரும் ஒன்றென வாழும் அந்த மனம் விரியட்டும்...
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/1426_6.html )
No comments:
Post a Comment