Tuesday, April 5, 2016

கீதை - 14.25 - குணங்களை துறந்தவன்

கீதை - 14.25 - குணங்களை துறந்தவன் 


मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥१४- २५॥

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: |
ஸர்வாரம்பபரித்யாகீ³ கு³ணாதீத: ஸ உச்யதே


மாநாபமாநயோஸ்துல்ய = மான அவமானங்களை ஒன்றாகக் கருதுவான்

ஸ்துல்யோ = ஒன்றாகக் கருதுவான்

மித்ராரிபக்ஷயோ: = நண்பனுக்கும் பகைவனுக்கும் இடையில்
|
ஸர்வாரம்பபரித்யாகீ = அனைத்து தொழில் முயற்சிகளையும் விடுத்து

குணாதீத: ஸ உச்யதே = குணங்களை கடந்தவனென்று கூறப்படுகிறான்

மானத்தையும் அவமானத்தையும் சமமாக நினைப்பான். நண்பனையும் பகைவனையும் ஒன்றாக கருதுவான். அனைத்து தொழில் முயற்சிகளையும் விட்டு விட்டு  இருப்பான். அவனே குணங்களை கடந்தவன் என்று கூறப் படுவான். 

இது முந்தைய ஸ்லோகத்தில் சொன்னதை விட கஷ்டமா இருக்கும் போல இருக்கே.


மானத்தையும் அவமானத்தையும் சமமாக நினைப்பான்.

அது எப்படி முடியும் ? அவமானம் வந்தால் நம்மால் சகிக்க முடியாதே. மானத்தோடு வாழ வேண்டும் என்று தானே நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இப்போது என்னடா என்றால்  மானத்தையும் அவமானத்தையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி.

மானமும் அவமானமும் எப்படி நிகழ்கிறது.

நான் என்ற அகம்பாவம் இருப்பத்தால் தான் மானமும் அவமானமும் நிகழ்கிறது.

"என்னை எப்படி அப்படிச் சொல்லலாம்"
"என்னுடைய சாதனைகள் என்ன தெரியுமா "
"நான் எவ்வளவு பெரிய ஆள்"

இப்படி என்னைப் பற்றி ஒரு மதிப்பு எனக்குள் இருக்கிறது.

அந்த மதிப்பை விட குறைவாக மதிப்பு வெளியில் இருந்து வந்தால் அவமானமாக இருக்கிறது.

அந்த அளவுக்கோ, அதை விட அதிகமாகவோ கிடைத்தால் பெருமையாக இருக்கிறது.

நான் பெரிய ஆள் என்று நினைத்தால் தானே, "இல்லை, நீ அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை " என்று கூறி நீங்கள் என்னை அவமானப் படுத்த முடியும் ?

நான் பெரிய ஆள் இல்லை என்று நான் நினைத்தால் நீங்கள் எப்படி என்னை அவமானப் படுத்த  முடியும் ?

என்னைப் பற்றி எனக்கு ஒரு அப்பிப்ராயமும் இல்லை என்றால் யாரும் என்னை  அவமானப் படுத்தவோ , பெருமை படுத்தவோ முடியாது அல்லவா.

குணங்களை கடந்தவன் தான் என்ற அகம்பாவம் இல்லாதவன். அவன் மானத்தையும், அவமானத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்.



"நண்பனையும் பகைவனையும் ஒன்றாக கருதுவான்"

அது எப்படி முடியும் ?

நண்பனும் பகைவனும் எப்படி உருவாகிறார்கள் என்று பார்ப்போம்.

நான் வேறு அவர்கள் வேறு என்று நினைப்பதால் அவர்கள் நண்பர்கள் என்றும் பகைவர்கள் என்றும்  நம்மால் பிரித்துப் பார்க்க முடிகிறது.

இந்த பிரிவினை இல்லாவிட்டால் ?

புரியவில்லையா ?

சரி ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.

உங்கள் கண் உங்களுக்கு நண்பனா ? எதிரியா ?

நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அது உங்களில் ஒரு பகுதி. அதை எப்படி நட்பு பகை   என்று பிரிக்க முடியும் ? எனக்கு நானே பகையா நடப்பா என்று கேட்பது போல அது.

நட்பும் பகையும் பிரிவினையால் வருகிறது.

நானும் அவனும் ஒரே சக்தியின் கூறு என்று நினைத்தால் பகையும் நட்பும் எப்படி வரும் ?

குணங்களை கடந்தவனுக்கு தான் வேறு இந்த உலகம் வேறு என்று கிடையாது. எல்லாம் தன்னில் ஒரு பாகம் என்று நினைப்பான். அப்படி நினைப்பதால் அவனுக்கு  நட்பும் பகையும் இல்லை.

"அனைத்து தொழில் முயற்சிகளையும் விட்டு விட்டு  இருப்பான்."

அப்படி என்றால் குணங்களை கடந்தவன் வேலை வெட்டி இல்லாமல்  சும்மா சோம்பேறியாக  இருப்பானா ?

தொழில் முனைவதற்கு ஒரு காரணம் வேண்டும் .

பணம் - புகழ் - அதிகாரம் - சாதிக்க வேண்டும் என்ற வெறி என்று ஏதாவது ஒன்று வேண்டும்.

குணங்களை கடந்தவனுக்கு இந்த பணம், புகழ், அதிகாரம் போன்றவற்றில் எல்லாம்  நாட்டம் இருக்காது. எனவே அவற்றை நாடி அவன் தொழிலில் ஈடுபடமாட்டான்.

அவன் செய்யும் தொழிலுக்கு முனைப்பு இருக்காது. அது இயல்பாக நிகழும்.

மூச்சு விடுவது போல.  நாம் முயற்சி செய்தா மூச்சு விடுகிறோம் ? அது பாட்டுக்கு இயல்பாக  நிகழ்கிறது. அது போல குணங்களை கடந்தவன் செயலில் ஈடுபடுவான் , ஆனால் அது ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினால்  அல்ல. அந்த வேலை அவனில் இருந்து நிகழும்.

தியாகராஜ ஸ்வாமிகள் இராமனின் மேல் பாடினார். எதனால் ? பணம் வேண்டும் என்றா ? புகழ் வேண்டும் என்றா ?

மீரா, கண்ணன் மேல் உருகி உருகி பாடினாள் . எதற்கு ?

அதற்கெல்லாம் காரணம் கிடையாது. அது நிகழ்ந்தது.

தான் எற்ற ஒன்று இல்லாமல்....தன்னை மறந்த நிலையில் ....தானாகவே நிகழ்ந்தது.

குணங்களைக் கடந்தவன் இது வேண்டும், அதை அடைய வேண்டும் என்று நினைத்து தொழிலில் ஈடு படமாட்டான். அவனில் இருந்து அது நிகழும்.

அப்படி நிகழும் போது , அந்த தொழிலின் வெற்றி தோல்விகள் அவனை பாதிப்பது இல்லை. வெற்றி பெற்றால் புகழும், தோல்வி அடைந்தால் அவமானமும் அவனுக்கு இல்லை.

அகந்தை கரையும் போது , தான் என்பது மறையும் போது ...மானம், அவமானம், நட்பு, பகை, தொழில் முனைவு என்று எல்லாம் போய் விடும்.

அது ஒரு சுகம்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் 
சொல்லாய் முருகா சுர பூபதியே 

என்பார் அருணகிரி.

எல்லாம் இழந்த பின் நலம் வந்தது என்கிறார் அருணகிரி.

அந்த நலம் உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/1425.html )

No comments:

Post a Comment