கீதை - 15.5 - நாசமற்ற பதம் - பாகம் 3
निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥
நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||
நிர்மாநமோஹா = அகந்தையும், மயக்கமும் இன்றி
ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)
அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து
விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி
த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு
ஸுக து:க = சுகம் துக்கம்
ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட
க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்
அ மூடா: = மூடத் தன்மை அற்றவர்கள்
பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்
அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற
தத் = அது
அகந்தையும், மயக்கமும் இன்றி;
பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
ஆசைகளில் இருது நீங்கி ,
சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
மடமையற்றோர், அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்
என்ன ஒரு அற்புதமான சுலோகம். மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க அதன் அருமை, இனிமை புரியும்.
இது போல எத்தனை அற்புதமான ஸ்லோகங்களை கீதை நமக்குத் தருகிறது.
கீதை என்பது ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது ஒரு வாழ்கை நூல். நம் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு நூல்.
சம்சாரம் என்ற மரத்தை வீழ்த்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறினார் அல்லவா ?
எல்லா பற்றியும் விட்டு விட்டு என்ன வாழ்க்கை என்று சலிப்பவர்கள் உண்டு .
அப்படி பற்றில்லாமல் வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேள்விக்கு விடை தர வேண்டும் அல்லவா ? சும்மா பற்றில்லாமல் இரு, பற்றற்ற வாளால் சம்சாரம் என்ற மரத்தை வெட்டு என்று சொல்லுவது எளிது. செய்தால் என்ன நடக்கும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?
இன்னும் சில பேர், இதெல்லாம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். வியாசர் இதைத்தான் சொல்லுவார். ஆனால், இதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை என்று தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள்.
கீதை பற்றற்று இரு என்று ஏதோ சாமியார் வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை. நீங்கள் மிக மிக சந்தோஷமாக, எப்போதும் இன்பமாக வாழ வழி சொல்கிறது.
வாழ்க்கையில் துன்பம் ஏன் வருகிறது ?
இரண்டு வழிகளில் துன்பம் வருகிறது.
முதலாவது, நம்மை பற்றிய தவறான எண்ணம். இரண்டாவது, இந்த உலகைப் பற்றிய தவறான எண்ணம்.
தன்னைப் பற்றிய தவாறன எண்ணத்திற்குப் பெயர் அகந்தை, மமதை, செருக்கு.
எப்படி அது துன்பத்திற்கு வழி வகுக்கும் ?
யாராவது என்னை "நீ பெரிய அறிவாளி" என்று சொல்லிவிட்டால், அந்த அறிவாளி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள நான் படாத பாடு படுகிறேன். விழுந்து விழுந்து படிக்கிறேன். பல பட்டங்களை பெறுகிறேன். மேலும் மேலும் படிக்கிறேன். கிடைக்கின்ற சந்தர்பத்தில் எல்லாம் என் மேதாவிலாசத்தை நிரூபிக்க முயல்கிறேன். என்னை யாராவது அறிவாளி இல்லை என்று சொன்னால் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். அவர்கள் எண்ணம் தவறு என்று நிரூபிக்க முயல்கிறேன். நான் அறிவாளியா இல்லையா என்பதல்ல கேள்வி. என்னைப்பற்றிய ஒரு எண்ணத்தை நான் நிரூபிக்க முயல்கிறேன். அதற்காக வாழ் நாள் எல்லாம் முயற்சி செய்கிறேன். அதற்காக மற்றவற்றை தியாகம் செய்கிறேன்.
முடிவில் , அடடா வாழ்க்கையில் என்னென்னவோ இருந்திருக்கிறது. நான் ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு வாழ்கை பூராவும் இதிலேயே செலவழித்து விட்டேனே என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.
இது அறிவாளி என்ற பட்டத்துக்கு மட்டும் அல்ல.
சிறந்த பக்திமான், ஆசாரமானவன், ஆத்திகன், நாத்திகன், தலைவன், தொண்டன், தியாகி, சாது, தீவிரவாதி என்று எத்தனை பட்டங்கள் உண்டோ அத்தனை பட்டத்துக்கும் ஒரு ஆள் இருக்கிறான். அதற்காகவே உயிரை விட. இது தன்னைப் பற்றிய தவறான எண்ணங்களினால் வரும் துன்பம்.
அகந்தையினால் வரும் துன்பம் இது. பட்டங்களின் மேல் உள்ள பற்றுதலால் வரும் துன்பம்.
இன்னொரு பக்கம் உலகைப் பற்றிய தவறான எண்ணம்.
ஆங்கிலத்தில் Delusion என்று சொல்லுவார்கள்.
உலகம் நிரந்தரமானது, மற்றவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள், நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தல் கெட்டது நடக்கும் , நல்லது செய்தால் சொர்க்கம் போகலாம், கெட்டது செய்தால் நரகம் கிடைக்கும் என்று வெளி உலகைப் பற்றி ஆயிரம் அபிப்ராயம் உண்டு நம்மிடம். நமக்கு உள்ள அபிப்ராயம் எல்லாம் சரியானது என்றே நாம் உறுதியாக நினைக்கிறோம். அதில் சந்தேகம் இல்லை. அது தான் மயக்கம் அல்லது delusion எனப்படுவது. இந்த தவறான எண்ணத்தினால் என்ன நிகழ்கிறது என்றால், வெளி உலகம் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் நமக்கு கோபமும் வருத்தமும் வருகிறது.
"நான் அவனுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன்...எனக்கு தேவை என்ற போது அவன் எனக்கு உதவி செய்ய வில்லையே "
"எப்படி அவளை/அவனை காதலித்தேன்...கடைசியில் கை விட்டுவிட்டாளே /விட்டுவிட்டானே"
"நான் எவ்வளவு பூஜை செய்தேன்....இந்த சாமிக்கு நன்றியே இல்லை "
என்று வருந்துகிறோம். கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தன்னிரக்கம் மேலிடுகிறது.
தன்னைப் பற்றிய தவறான எண்ணம்.
வெளி உலகைப் பற்றிய தவறான எண்ணம்.
இந்த இரண்டையும் , பற்றற்ற வாளால் சம்சாரம் என்று மரத்தை வெட்டியவர்கள், விட்டு விடுவார்கள்.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.
இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.
முதல் ஒரு வரியில், முதல் பாதிக்கு இவ்வளவு அர்த்தம்.
மேலும் வரும்.
நல்லா இருக்கு தானே ?
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155.html )
================ பாகம் 2 ================================================
ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)
அது என்ன எப்ப பார்த்தாலும் பற்றை விடு, பற்றை விடு என்று சொல்லிக் கொண்டு....பற்றை விடுவது என்றால் பிள்ளைகளை என்ன செய்வது, உடன் பிறப்புகளை என்ன செய்வது, சேர்த்து வைத்த செல்வத்தை என்ன செய்வது, செல்வம் இல்லாமல் எப்படி வாழ்வது....இந்த பற்றை விடுவது என்பது நடை முறைக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது.
சாமியார்களுக்கு வேண்டுமானால் இது சரியாக வரலாம். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு சரி வருமா ? உறவுகளை எல்லாம் உதறி விட்டுப் போக முடியுமா ? கீதை நடை முறைக்கு ஏற்ற நூல் தானா ?
சிந்திப்போம்.
பற்று என்றால் என்ன ?
முழுமையை விட்டு விட்டு பகுதியைப் பிடித்துக் கொள்வது.
நாட்டுப் பற்று.
நாட்டுப் பற்று என்றால் என்ன ? உலகம் முழுவதும் இருக்க...அதை எல்லாம் விட்டு விட்டு ஒரு பகுதியை மட்டும் நேசிப்பது , தான் பிறந்த இடத்தை மட்டும் நேசிப்பது. அது மட்டும் அல்ல, தான் பிறக்காத மற்ற இடங்களை வெறுப்பது. அங்கு பிறந்தவர்களை எதிரிகளாக நினைப்பது, அவர்களை கொல்லவும் துணிவது. எல்லா நாடும் என் நாடு என்றே நினையுங்கள். எல்லா நாட்டையும் நேசியுங்கள். யாது ஊரே, யாவரும் கேளிர் என்று எண்ணுங்கள். எல்லா நாடும் உங்கள் நாடு என்றால் எந்த நாட்டின் மேல் பற்று வைப்பீர்கள் ? நாட்டுப் பற்று விட்டுப் போய் விடும் அல்லவா ?
சமயப் பற்று என்றால் என்ன ?
உண்மை ஒன்றுதான். எல்லாம் சமயங்களும் அந்த உண்மையைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வழியை சொல்கின்றன. என் வழிதான் சரி என்று சொல்வது சமயப் பற்று. அது மட்டும் அல்ல, மற்ற வழிகள் தவறு, அதை பின் பற்றுபவர்கள் தீயவர்கள், அவர்களை கொல்ல வேண்டும் என்று நினைப்பது சமயப் பற்று. என் சமயம் உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தவை என்ற பாகு பாடு எதுக்கு ? ஒரு சமயத்தின் மேல்தான் பற்று வைக்க வேண்டும் என்று யார் சொன்னது. எல்லா சமயமும் உங்களுக்காகவே. அனைத்து சமயங்களையும் நீங்கள் பின் பற்றினால், சமயப் பற்று எங்கிருந்து வரும்.
இப்படி மொழிப் பற்று, இனப் பற்று என்று ஒவ்வொரு பற்றும் நம்மை பிரித்து, சிறிய வட்டத்துக்குள் அடைத்து விடுகின்றன.
என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்...மற்ற பிள்ளைகள் எக்கேடும் கெட்டு போகட்டும் என்பது பிள்ளை மேல் வைத்த பற்று.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பே எவ்வளவு சுகம்.
எல்லா நாடும் நன்றாக இருக்க வேண்டும், எல்லா மொழியும் தழைக்க வேண்டும், அனைத்து மதங்களும் உயர வேண்டும்....
இப்படி அனைத்தும் உங்களது என்று ஆகிவிட்டால் எப்படி பற்று வரும் ?
என்றாவது உங்கள் வலது கண்ணின் மேல் பற்று வைத்து இருகிறீர்களா ? முழுவதும் இருக்க , பகுதியில் மட்டும் ஏன் பற்று வைக்க வேண்டும் ?
கீதை இந்த பற்றை விடச் சொல்கிறது.
பற்று என்ற தீய எண்ணம் விலகி, எல்லோருக்கும் மனம் விரியட்டும்.
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-2.html )
================= பாகம் 3 ===============================================
அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து
எதற்காக ஆத்ம ஞானத்தில் நிலைக்க வேண்டும் ? ஆத்மாவைப் பற்றி நினைப்பதால் என்ன கிடைக்கும் ? முதலில் ஆத்மா ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. அது உறுதியானால் அல்லவா அது பற்றிய ஞானத்தில் இலயிப்பது.
ஆத்மா என்ற பெயரை விட்டு விடுவோம்.
நம் மனம் எப்போதும் வெளி நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது. பொருள்கள், உறவுகள், அனுபவங்கள் என்று ஆலாய் பறக்கிறது. இது வேண்டும், அது வேண்டும், என்று அனைத்துக்கும் ஆசைப் படுகிறது. ஆசைப் படுவது மட்டும் அல்ல, அவற்றை அடைய முயற்சி செய்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால் மனம் மகிழ்கிறது. இல்லை என்றால் வருந்துகிறது.
சரி, முயற்சி செய்து அடைந்த பின்னும், அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கிடைக்கும் வரை தான் ஆவல். கிடைத்த பின், அதன் மேல் உள்ள ஆர்வம் போய் போய் விடுகிறது. அடுத்த ஒன்றை மனம் துரத்தத் தொடங்குகிறது.
முடிவில்லா ஓட்டம்.
இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இதை விட்டால் வேறு வழி என்ன ? ஆசைப் படாமலும் இருக்க முடியவில்லை. ஆசைப்படுதலும் சரி இல்லை என்று தெரிகிறது. என்னதான் செய்வது.
ஒன்றும் செய்யாமல் இருக்க முடியுமா ?
சும்மா எப்படி இருப்பது ?
கீதை சொல்கிறது...வெளியே ஓடும் மனதை உள் நோக்கித் திருப்பு என்று.
எது ஆசைப் படுகிறது ? ஏன் ஆசைப் படுகிறது ? ஆசைப் பட்டு இதுவரை அடைந்தது என்ன ?
மனம் ஏதோ ஒன்றைப் பற்ற வேண்டும். வெளி உலகைப் பற்றுவதை விட, இன்பத்தை, மகிழ்ச்சியை வெளியே தேடுவதை விட, அந்த இன்பத்தின் தன்மை, அதை அறியும் விதம் பற்றி சிந்தித்தால், அது பற்றிய தெளிவு வந்தால், மனம் நிலைப்படும்.
ஓட்டம் குறையும்.
நிற்கும்.
"ஆத்ம ஞானத்தில் நிலைத்து இருப்பது " என்றால் வெளி நோக்கி ஓடும் மனத்தை உள் நோக்கி திருப்புவது.
தன்னைத் தான் அறிவது.
இது எப்போதோ பொழுது போகாத நேரத்தில் செய்வது அல்ல. நித்யமும். எப்போதும். அந்த நினைவிலேயே இருக்க வேண்டும் என்கிறது கீதை. அதாவது, தன் உணர்வு, தான் யார் என்ற எண்ணம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் போது உலக இன்பங்களின் பின்னால் மனம் ஓடாது. அது தான் இப்போது வேறு ஒன்றைப் பற்றிக் கொண்டு இருக்கிறதே.
மனம் ஓடாத போது , சலனம் இல்லாத போது , ஆசைகளினால் வரும் துன்பம் தொலையும்.
ஆனந்தம் பிறக்கும்.
பிறக்கட்டும்.
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-3.html )
No comments:
Post a Comment