Monday, April 18, 2016

கீதை - 15.3 - பற்றின்மை என்ற வாள்

கீதை - 15.3 - பற்றின்மை என்ற வாள் 


न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥१५- ३॥

ந ரூபமஸ்யேஹ ததோ²பலப்யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா |
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூல மஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா || 15- 3||


ந = இல்லை

ரூபம் = உருவம்

அஸ்ய = இதற்கு

இஹ  = இங்கே

ததோ = அப்படியாக

உபலப்யதே = நினைக்கப் பட்டது

ந = இல்லை

அந்த = முடிவும்

ந = இல்லை

ஆதி = தொடக்கமும்

ந = இல்லை

ச = மேலும்

ஸம்ப்ரதிஷ்டா = அடிப்படையும்

அஸ்வத்தம் = ஆல மரத்தின்

ஏனம் = இந்த

ஸுவிரூடமூல = ஆழமான அதன் மூலம்

அஸங்க = பற்றின்மை என்ற

ஸஸ்த்ரேண   வாளால்

த்ருடேந = திட சிந்தையால்

சித்த்வா = வெட்டுவாய்

இந்த வாழ்கை என்ற ஆல மரத்தின் வடிவத்தை யாரும் முழுவதும் கண்டதில்லை .  இதன் ஆரம்பமும், நிகழ் காலமும், முடிவும் தெரிவதில்லை; ஆழமான வேர் ஊன்றிய இந்த ஆல மரத்தை பற்றின்மை என்ற வாளால் வெட்டி எறிந்து விட்டு; 

நாம் சில சமயம் சிந்தித்து இருப்போம்...இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன என்று.  நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், எங்கே போகிறேன், இதன் முடிவு என்ன, இதன் அர்த்தம் என்ன, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, அல்லது இவ்வளவு பெற நான் என்ன பெரிய புண்ணியம் செய்து விட்டேன் என்றெல்லாம் நாம் நினைத்து இருப்போம்.

கீதை சொல்கிறது

"இந்த வாழ்கை என்ற ஆல மரத்தின் வடிவத்தை யாரும் முழுவதும் கண்டதில்லை"

இந்த வாழ்கை என்ற மரத்தை யாரும் முழுவதும் கண்டது இல்லை. எப்படி இது ஆரம்பித்தது, எப்படி வளர்ந்தது, கிளைத்தது, புது விதை வந்தது, அது இன்னொரு மரமாக வளர்ந்தது...யாருக்குத் தெரியும்...எத்தனை காலமாக இது நடந்து கொண்டு இருக்கிறது, இன்னும் எத்தனை காலம் நடக்கும் என்று.

யாரும் இதை முழுவதும் அறிந்தது இல்லை என்றால், நீங்கள் வீணாக உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதில் செலவிடாதீர்கள். எவ்வளவு முயன்றாலும் இதை நீங்கள் முழுவதும் அறியப் போவது இல்லை.

அது மட்டும் அல்ல


"இதன் ஆரம்பமும், நிகழ் காலமும், முடிவும் தெரிவதில்லை"

இந்த வாழ்கை எப்போது தொடங்கியது, இப்போது என்ன நிகழ்கிறது, இனி என்ன நிகழப்  போகிறது என்றும் நமக்குத் தெரியாது. தெரியாத மிகப் பெரிய சுழலில் எல்லாம் தெரிந்தவர்களைப் போல நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

சரி, பிறப்பு நம் கையில் இல்லை. நாளை நடப்பது நம் கையில் இல்லை. சரி, இறப்பாவது நம் கையில் இருக்கிறதா என்றால், அதுவும் நம் கையில் இல்லை.  இந்த வாழ்க்கையில் பலப் பல ஆசைகளுடன், இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நல்லதும் செய்கிறோம், தெரிந்தோ தெரியாமலோ கெட்டதும் செய்கிறோம். செய்கின்ற வினைகளுக்கு ஏற்ற மாதிரி எதிர் கால வாழ்க்கை மாறுகிறது. அடுத்த பிறப்பு என்று சொல்லவில்லை நான். செய்யும் வினைகளுக்கு ஏற்ப வாழ்வின் திசை மாறுகிறது.

கடைசியில், ஓடி நிற்கும் போது பார்த்தால் என்ன சாதித்தோம், என்ன நடந்தது, இன்னும் அதைச் செய்திருக்கலாம், இதை அனுபவித்து இருக்கலாம் , அப்படி வாழ்ந்து இருக்கலாம், இப்படி வாழாமல் இருந்து இருக்கலாம் என்று ஆயிரம் எண்ணங்கள் ஓடும். பொதுவாக ஒரு ஏமாற்றமும், விரக்தியும், ஏக்கமுமே மிஞ்சும். 

இதில் இருந்து விடுதலை கிடையாதா ? இதை எப்படி மாற்றி அமைப்பது. இப்படித்தானே எல்லோரும் வாழ்கிறார்கள். இதைத் தவிர்த்து வேறு விதமாக வாழ முடியுமா ?


"ஆழமான வேர் ஊன்றிய இந்த ஆல மரத்தை பற்றின்மை என்ற வாளால் வெட்டி எறிந்து விட்டு; "

இந்த வாழ்கை முறை மிக ஆழமாக வேர் ஊன்றி இருக்கிறது. காலம் காலமாக நாம் இதையே செய்து வருகிறோம்.  வேறு விதமான, இன்பமான வாழ்கை வேண்டும் என்றால், இந்த வாழ்கை முறை போக வேண்டும். எப்படி போகும் ?


பற்றின்மை என்ற வாளால் இதை வெட்டி ஏறிய வேண்டும்.

இந்த வாழ்கை முறை, இந்த தொடர்ச்சி இதன் மேல் கொண்ட பற்றினால் வருகிறது. பற்று அற்றுப் போகும் போது , இந்த சுழற்சி நிற்கிறது. 

காரில் போய்க் கொண்டே இருக்கிறோம். போகிற வழி தவறான வழி என்று தெரிகிறது. என்ன செய்ய வேண்டும் ? முதலில் accelerator இல் இருந்து காலை எடுக்க வேண்டும். காலை எடுத்தால் வண்டி கொஞ்ச தூரம் போய் தானாகவே நிற்கும். அதற்குப் பின், வேண்டிய திசைக்கு நாம் வண்டியை திருப்பிக் கொள்ளலாம். 

பொருள்கள் மேல், மனிதர்கள் மேல், உறவுகளின் மேல், அனுபவங்களின் மேல் கொண்ட  பற்றினால் வாழ்க்கை மேலும் மேலும் நம்மை தவறான வழியில்  இழுத்துக் கொண்டு போகிறது. இதை மாற்ற வேண்டும் என்றால் முதலில் பற்றை விட வேண்டும். 

அது சரி, பற்றை விட்டு விட்டு என்ன செய்வது ?

கணவன் மேல், மனைவி மேல், பிள்ளைகள் மேல், பேரன் பேத்திகள் மேல் , பெற்றோர், உற்றார், உறவினர் மேல் உள்ள பற்றை விட்டு விட்டு என்ன செய்வது ? நாமும் வியாசர் மாதிரி சாமியாராகப் போக வேண்டியதுதானா ? அதுக்கு இந்த வாழ்கையே நல்லா இருக்கும் போல இருக்கே என்று நாம் நினைக்கலாம்.

பற்றற்ற தன்மையால் விளையும் நன்மைதான் என்ன ?

அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி சொல்கிறார். 

அதுவரை, இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை ஆழ்ந்து யோசியுங்கள். 

வாதம் பண்ணுவதற்காக அல்ல, வாழ்கையை புரிந்து கொள்வதற்காக.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/153.html

No comments:

Post a Comment