கீதை - 15.8 - பூவும் மணமும்
शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहित्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥१५- ८॥
ஸ²ரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர: |
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்க³ந்தா நிவாஸ யாத் || 15- 8||
வாயு: ஆஸ யாத் க ந்தாந் இவ
ஸரீரம் = உடல்
யத் = எப்போது
அவாப்நோதி = அடைகிறானோ
யட் = எது
ச = மேலும்
அபி = அதுவன்றி
யுத்க்ராமதி = வெளியே செல்லும்போது
ஈ ஸ்வர: = ஈஸ்வரன்
க்ருஹித்வ = எடுத்துக் கொண்டபின்
எதாநி = இவைகளை
ஸம்யாதி = அவன் அடைகிறான்
வாயு = காற்று
க³ந்தா = மணம்
இவ = அதைப்போல
அசையாத் = மனம்
பூவின் வாசனையை காற்று கவர்ந்து செல்வது போல , ஈஸ்வரன் உடலை அடையும் போதும் , அதை விட்டு விலகும் போதும் இந்திரியங்களை பற்றிச் செல்கிறான்.
நாம் இந்த பிரபஞ்சத்தில் தனி ஒரு மனிதன் அல்ல.
நாம் ஒரு தீவு அல்ல.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த உலகை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது.
நீங்கள் நல்லது செய்தாலும் சரி, அல்லது செய்தாலும் சரி , அது உங்களோடு முடிவது இல்லை.
உங்கள் செயல் , அதன் விளைவு உலகம் எங்கும் பரவுகிறது.
மனிதன் இதை உணர்வது இல்லை.
நான் பெரியவன். நான் முக்கியம். என் சந்தோஷம் முக்கியம். என் மகிழ்ச்சிக்காக நான் எனக்கு வேண்டியதை செய்து கொள்கிறேன். இதில் யாருக்கு என்ன நட்டம் என்று நினைக்கிறான்.
அப்படி நினைத்துத் தான் இன்று இந்த உலகம் இப்படி ஆகி விட்டது.
காற்றும் நீரும் மாசு பட்டு கிடக்கிறது.
பசுமை எங்கும் மறைந்து உலகம் வெப்பமயமாக இருக்கிறது.
வறட்சி, மழை இல்லை.
சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை.
ஏன், சுயநலமாக செய்த வினைகளின் விளைவு.
பூவில் இருந்து மணத்தை காற்று கொண்டு செல்வது போல....
பூ தன் பாட்டுக்கு இருக்கிறது. அதில் இருந்து வரும் நறுமணத்தை காற்று எங்கும் கொண்டு செல்கிறது.
பூவுக்குத் தெரியாது தன்னில் இருந்து வரும் நறுமணம் உலகம் எங்கும் பரவுகிறது என்று.
காற்று அந்த வேலையைச் செய்கிறது.
நீங்கள் (பூ) செய்யும் வேலைகளின் பலன் (நறுமணம்) உலகம் எங்கும் பரவும்.
கீதை பூவையும் நறுமணத்தையும் மட்டுமே சொல்கிறது. குப்பை கூளத்தையும் அதில் இருந்து வரும் துர்நாற்றத்தியும் பற்றி சொல்லவில்லை. நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரிகம் கருதி சொல்லாமல் சொல்லிப் போகிறது கீதை.
இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உண்மை புலப்படும்.
பூ ஒன்றும் வேலை செய்வது இல்லை. அது பாட்டுக்கு இருக்கிறது.
அது போல, நீங்கள் ஒன்றும் வேலை செய்ய வேண்டாம், உங்கள் மனதில் எழும் எண்ணங்களே எங்கும் பரவும்.
எப்போதும் நல்லதையே நினையுங்கள். எல்லோருக்கும் நல்லதையே நினையுங்கள். நினைத்தால் போதும். செய்யக் கூட வேண்டாம். அந்த நல்ல நினைவுகளே , அந்த அதிர்வுகளே உலகம் எல்லாம் பரவும்.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், உலகில் உள்ள எல்லோரும் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று.
அறம் செய்ய விரும்பு என்றாள் அவ்வை.
விரும்பினால் போதும். செய்யக் கூட வேண்டாம்.
நல்லதையே நினையுங்கள். நல்லதையே பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்.
அந்த நன்மை உலகம் எங்கும் பரவும்.
எப்படி பரவும் ?
காற்று பூவில் இருந்து நறுமணத்தை கொண்டு செல்வது போல, ஈஸ்வரன் இந்த்ரியங்களை கொண்டு செல்கிறான்.
இந்திரியங்களை கொண்டு செல்கிறான் என்றால் ஏதோ நம் காது, மூக்கு இவற்றை கொண்டு செல்கிறான் என்று அர்த்தம் அல்ல.
முந்தைய ஸ்லோகத்தில் கூறிய மனம் முதலான ஆறு இந்திரியங்கள் செய்யும் செயலை கொண்டு செல்கிறான்.
ஊர் உறங்கிற்று என்றால் ஊரில் உள்ளவர்கள் உறங்கி விட்டார்கள் என்று பொருள்.
அந்த வீடு இனிமையான வீடு என்றால், அந்த வீட்டில் உள்ள செங்கலும் சுண்ணாம்பும் அருமையானவை என்று அர்த்தம் அல்ல. அந்த வீட்டில் உள்ளவர்கள் இனிமையானவர்கள் என்று அர்த்தம்.
அது போல ஈஸ்வரன் இந்திரியங்களை கொண்டு செல்கிறான் என்றால் இந்திரியங்கள் செய்யும் செயல்களை கொண்டு செல்கிறான் என்று அர்த்தம்.
மனம் செய்யும் செயல், நினைப்பது. அந்த நினைவுகளை கொண்டு செல்கிறான்.
தீயவற்றை நினைத்தால் , தீயவை பரவும்.
மனத்துக்கன் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர்.
உலகம் திருந்த வேண்டும் என்றால், உலகில் நல்லவை நடக்க வேண்டும் என்றால்...உங்களில் இருந்து தொடங்குங்கள்.
நல்லவற்றையே நினைப்போம்
நல்லவற்றையே சொல்வோம்.
நல்லவற்றையே செய்வோம்.
நன்மை எங்கும் பரவும்.
உலகம் உயர இதுதான் வழி.
உலகம் உயர நீங்கள் தான் வழி.
அந்த வழியில் முதல் அடியை இன்றே எடுத்து வைப்போமா ?
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/158.html )
No comments:
Post a Comment