கீதை - 15.9 - தொடரும்
श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥१५- ९॥
ஸ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஸ நம் சரஸநம் க்ராணமேவ ச |
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே || 15- 9||
ஸ்ரோத்ரம் = கேட்பது (சுரு என்றால் கேட்டல். சுருதி)
சக்ஷு= பார்ப்பது
ஸ்பர்ஸ நம் = தொடுவது, தொடு உணர்ச்சி
ச = மேலும்
ரஸநம் = சுவை, சுவைப்பது
க்ராணம் = முகர்வது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அதிஷ்டாய = நிலை பெற்று (ஸ்த = நிலையான, ஸ்தாபிதம்)
மந = மனம்
ச = மேலும்
அயம்= அவன்
விஷயன் = விஷயங்களை
உபஸேவதே = சேவை செய்கிறான், நடத்திச் செல்கிறான்
கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவைத்தல், முகர்தல் , மனம் என்ற இவற்றில் நிலை கொண்டு அவன் விஷயங்களைத் நடத்திச் செல்கிறான்.
நமது புலன்கள் சதா சர்வ காலமும் நமக்கு ஏதோ ஒரு உணர்ச்சியை, அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றன.
இவற்றால், நாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கிறோம்.
ஒரு நிமிடம், அமைதியாக இருக்க முடிவதில்லை..
நாம் யார், நம்மை செலுத்துவது எது, ஏன் இப்படி இருக்கிறோம், எங்கே போகிறோம், எதற்குப் பிறந்தோம் ...இப்படி ஆயிரம் கேள்விகள். இவற்றிற்கு விடை வெளியில் இல்லை. இருந்திருந்தால் போய் வாங்கி இருக்கலாம்தானே. உள்ளுக்குள் தேட வேண்டும்.
தேட வேண்டும் என்றால் வெளியில் இருந்து வரும் சப்த்தங்கள் நின்றால் அல்லவா .
உள்ளே வரும் உணர்சிகளை, அனுபவங்களை ஒரு வினாடி நிறுத்தினால் என்ன ஆகும் ?
வெளியில் இருந்து வரும் விஷயங்கள் நிற்கும் போது நாம் நம்மை அறியத் தலைப் படுவோம்.
இந்த உணர்சிகளை, அனுபவங்களை யார் பெறுகிறார்கள், இவை ஏன் நமக்கு இன்பமும் துன்பமும் செய்கின்றன என்பவற்றை கண்டு கொள்ளலாம்.
ஒரு நிமிடம் "சும்மா இருக்க " வேண்டும்.
முடிகிற காரியமா ?
அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட முருகன் சொன்ன ஒரே உபதேசம்
"சும்மா இரு"
சும்மா இருக்க முடியவில்லை
சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக் காசை பராபரமே.
என்பார் தாயுமானவ சுவாமிகள்.
வெளியில் இருந்து புலன்களுக்கு அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
புலன் மூலம் பெறும் அனுபவங்களை அறிவு இன்பம் துன்பம் என்று பகுத்துக் கொண்டே இருக்கிறது.
இன்பம் என்றால் மேலும் வேண்டும் என்கிறது. அதன் பின்னால் ஓடுகிறது.
துன்பம் என்றால் வேண்டாம் என்று தள்ளுகிறது. அதை ஓடுகிறது.
அனுபவங்கள் சேரச் சேரச் ஓட்டம் அதிகரிக்கிறது.
அந்த வீடு, அந்த கார், இந்த நகை, அந்த ஊர் , இந்த உடை, அங்கே சாப்பாடு, அந்த கச்சேரி, இந்த சினிமா என்று செய்திகள் உள்ளே வர, புலன்கள் தூண்டப் பட்டு, ஆசை மற்றும் பயத்தால் நம் வாழ்கை செல்கிறது.
தூண்டில் புழுவைப் பார்த்த மீன் போல , விளக்கை கண்ட விட்டில் போல அலைகிறோம்.
இந்த செய்திகள் வருவதும், அவற்றின் மூலம் புலன்கள் தூண்டப் படுவதும், அதன் மூலம் நம் வாழ்கை நகர்வதும் நமக்குத் தெரிவதில்லை.
ஏன் தெரிவதில்லை என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கீதை விளக்குகிறது.
அடுத்த முறை தொலைக் காட்சியில் ஒரு விளம்பரத்தை பார்த்தவுடன் உங்களுக்குள் என்ன பாதிப்பு நிகழ்கிறது என்று கவனியுங்கள், உங்கள் நண்பர் உங்களை சந்தித்து விட்டு போன பின் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள். இந்த கவனிப்பு உங்களை நீங்களே நெறிப் படுத்த உதவும்.
உங்களுக்கு உள்ளே செல்லும் எதுவும் உங்களை பாதிக்கும்.
கவனமாக இருங்கள்.
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/159.html )
No comments:
Post a Comment