Tuesday, May 10, 2016

கீதை - 15.13 - உணவும் மருந்தும் நான்

கீதை - 15.13 - உணவும் மருந்தும் நான் 


गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: || 15- 13||

கம் = பூமியில்

அவிஸ்ய  = நுழைந்து

ச = மேலும்

பூதாநி = உயிர்களைத்

தாரயாமி = தாங்குகிறேன்

அஹம் = நான்

ஒஜஸா  = சக்தியால்

புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்

ச = மேலும்

ஔஷதீ: = மருந்தாக

ஸர்வா: = அனைத்து

ஸோமோ = சாறாக, அமிர்தமாக

பூத்வா = ஆனபின்

ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்


நான் பூமியில் புகுந்து , உயிர்களை என் சக்தியால் தாங்குகிறேன். ரச வடிவான  சோம பாணமாகி மருந்தாக அவைகளை காக்கிறேன்.

இது என்ன திடீரென்று கீதை வேறு எங்கோ போவது மாதிரி இருக்கிறதா ?

கீதையை படிக்கும் பொழுது நமக்கு அடிக்கடி ஒன்று தோன்றும்.

இந்த நூல் நம்மைப் போல இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அல்ல. எல்லாவற்றையும்  துறந்த துறவிகளுக்கு உண்டான நூல் இது என்று நமக்குத் தோன்றும்.

வேலையைச்  செய், பலனை எதிர் பார்க்காதே.

பற்றற்று இரு.

என்று இப்படி சொல்லிக் கொண்டிருந்தால், "கேக்க நல்லாத்தான் இருக்கு ...நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று புத்தகத்தை ஏறக் கட்டிவிட்டு போய் விடுவோம்.

அது அப்படி அல்ல.

கீதை எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியான நூல்.

சரி, அது இருந்து விட்டுப் போகட்டும், அதற்கும் இந்த சுலோகதிற்கும் என்ன சம்பந்தம் ?

இன்று உலகம் மிகவும் ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.

மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. மக்களுக்கு வேண்டிய உணவு, நீர், தூய காற்று, இருப்பிடம், போன்றவையோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. அனைத்தும் மாசு படிந்து கிடக்கிறது.

சுவாசிக்கும் காற்று,
பருகும் நீர்,
உண்ணும் உணவு
ஏன் தாய் பாலே கூட மாசு பட்டு போய் இருக்கிறது என்கிறார்கள்.

எதனால்,

சுற்றுச் சூழல் மேல் மரியாதை இல்லை. இயற்கையின் மேல் மரியாதை இல்லை. கண்டபடி உபயோகப் படுத்துகிறோம்.

நீர் நிலைகளை மாசு படுத்துகிறோம்.

நிலத்தடி நீரை மாசு படுத்துகிறோம்.

கண்ணன் சொல்கிறான் - உண்ணும் உணவும், மருந்தும் என் சாராம்சம் என்று.

இதன் அர்த்தம் என்ன என்று சிந்திப்போம்:

முதலாவது, உணவு என்பது ஏதோ உடலுக்கு சக்தி தரும் ஒரு பொருள் என்று நினைக்கக் கூடாது. சக்தியையும் தாண்டி உணவில் மற்ற விஷயங்களும் இருக்கிறது. கீதை, உணவை ஒரு தெய்வீக நிலைக்கு கொண்டு செல்கிறது. உணவு, கடவுளின் அம்சம் என்று சொல்கிறது. அப்படி என்றால்  அந்த உணவுக்கு எவ்வளவு மரியாதை செய்ய வேண்டும். ஒரு கடவுளுக்கு தரும் மரியாதையை உணவுக்குத் தர வேண்டும். அலட்சியம் கூடாது. மரியாதை வேண்டும். உணவின் மேல் அன்பு வேண்டும். பக்தி வேண்டும். 

இரண்டாவது, உணவு உயிரையும் உடலையும் சேர்த்து வைப்பது. உணவு இல்லை என்றால் உயிர் உடலை விட்டுப் போய் விடும். அது தான் அமிர்தத்தின் வேலை. உடலை இறவாமல் காப்பது. உணவை அமிர்தம் என்று நினைத்து உண்ண வேண்டும்.

மூன்றாவது, கீதை நம்மை துறவியாகப் போ, பட்டினி கிட, விரதம் இரு என்று சொல்லவில்லை. உணவு கூடாது என்றால் பின் ஏன் கண்ணன் நான்  என் வீரியத்தின் மூலம் உணவாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் ? உணவு வேண்டாம் என்றால், கண்ணனை வேண்டாம் என்று கூறியது மாதிரிதானே.

நான்காவது, உணவை உருவாக்க எத்தனையோ பேர் பாடு பட வேண்டி இருக்கிறது. உழவன், களை எடுப்பவன், நீர் இரைப்பவன் , அறுவடை செய்பவன், அரைத்து அரிசியாக்குபவன் , அதை நம்மிடம் கொண்டு சேர்பவன், அதை சமைக்கும் ஆள், பரிமாறும் ஆள் என்று ஆயிரம் கைகள் சேர்ந்து நம் உணவை உருவாக்கி நம் முன்னால் கொண்டு வைத்து வைக்கிறது. அனைத்திலும் இயங்கும் ஒரு சக்தி நமக்கு இந்த உணவை நமது மேஜை மேல் கொண்டு வந்து சேர்கிறது. நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது எத்தனை பேரின் உழைப்பு   அதில் இருக்கிறது என்று. அத்தனை சக்தியும் சேர்த்ததுதான்  நாம் ஒரு வேளை உண்ணும் உணவு. எவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் அந்த உணவின் மேல். 

ஐந்தாவது, ஞான மார்க்கமோ, கர்ம மார்க்கமோ, பக்தி மார்க்கமோ எந்த மார்கத்தில் போவதானாலும் இந்த உடம்பு வேண்டும். உடல் இல்லாமல் படிக்க முடியுமா ? வேலை செய்ய முடியுமா ? பக்திதான் செய்ய முடியுமா ? அந்த உடலை பேணி காப்பது உணவும் மருந்தும்.  உடலை வைத்துதான் இறைவனை/உண்மையை/ தன் உணர்வை அடைய முடியும். 

உணவை இறை அம்சமாக நினைத்து உண்டு பாருங்கள். 

அதன் சுவையே தனிதான். 

அடுத்த தடவை உண்பதற்கு முன் அந்த உணவை உற்று நோக்குங்கள். எவ்வளவு அளவு கடந்த கருணையின் விளைவு அந்த உணவு என்று உங்களுக்குப் புரியும். 

சுவைத்துப் பாருங்கள். 

நாவில் தித்திக்கும். 

 ஓ ராம நீநாம ஏமி ருசிரா என்கிறார் தியாகப்ரமம் 

உண்ணும் உணவு மட்டும் அல்ல அனைத்து இன்பங்களும் தெய்வீகமானவை தான். 

நீங்களும் அவனை ருசித்துப் பாருங்கள். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1513.html )

No comments:

Post a Comment