Monday, May 16, 2016

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 1

கீதை - 15.15 - நினைப்பும், ஞானமும், மறதியும் நான் - பாகம் 1


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |

வேதை³ஸ் ச ஸர்வைரஹமேவ வேத் யோ
வேதா ந்தக்ருத் வேத விதே வ சாஹம்

ஸர்வஸ்ய = அனைத்திலும்

ச = மேலும்

அஹம் = நான்

ஹ்ருதி = இதயமாக

ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்

மத்த: = என்னில் இருந்து

ஸ்ம்ருதிர் = வேதங்கள்

ஜ்ஞாநம் = ஞானம்

அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது

ச = மேலும்

வேதை³ஸ் = வேதங்களும்

ச = மேலும்

ஸர்வை = அனைத்திலும்

அஹம் = நான்

ஏவ = நிச்சயமாக

வேத்யோ  = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள


வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்

வேத விதே  = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அஹம்  = நான்



அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

வேதங்களில் அறியப்படும் பொருள் நான்.

வேதத்தை உருவாகியவன் நான்.

வேதத்தை அறிபவன்  நான்.


 நமக்கு பல விஷயங்கள் , பல இடங்களில் இருந்து வருகிறது. நம் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், புத்தகங்கள் , தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் என்று பலவழிகளில் நாம் அறிவைப் பெறுகிறோம்.

சிக்கல் என்ன என்றால் எது சரி, எது தவறு என்று நமக்குத் தெரியாது. நாம் சிலவற்றை சரி என்று மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறோம். அதோடு ஒத்துப் போகக் கூடிய புதிய விசயங்களை ஏற்றுக் கொள்கிறோம். அதோடு ஒத்துப் போகாத விஷயங்களை அவை தவறு என்று தள்ளி விடுகிறோம்.

அதாவது, முதலில் வந்தவை சரி. பின்னால் வருபவை சரி அல்ல என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

இன்று உலகில் பெரும்பாலன சிக்கல்களுக்கு இதுவே காரணம்.

நான் நினைத்துக் கொண்டிருப்பது, எனக்குச் சொல்லப் பட்டது, என் வேதம், என் கடவுள் , என் மார்க்கம் இவைதான் சரி. மற்றவை எல்லாம் சரி அல்ல என்று மனிதன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றான்.

வெளியில் மட்டும் அல்ல.

வீட்டிலும்.

கணவன் மனைவிக்கு இடையில் ஆயிரம் சிக்கல். காரணம் என்ன ?

கணவன் நினைக்கிறான் , அவன் நினைப்பதுதான் சரி என்று. அதே போல் மனைவியும் நினைக்கிறாள்.

குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் சில கொள்கைகளை வைத்து இருக்கிறோம். அவற்றோடு உலகம் ஒத்துப் போகா விட்டால் நமக்கு கோபமும், எரிச்சலும் வருகிறது.

இந்த சிக்கல்களுக்கு கீதை வழி சொல்கிறது. அதுவும் இந்த ஸ்லோகத்தில்.

நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன.

நாம் கற்றவற்றை, அறிந்தவற்றை நாம் ஞாபகத்தில் வைத்து இருக்கிறோம். நம் ஞாபகத்தில் இருந்து அவற்றை மீண்டும் வரவழைத்து வாழ்வில் உபயோகப் படுத்துகிறோம். அது நினைவும், ஞானமும்.

ஞானம் வளர வேண்டும் என்றால் மறதியும் வேண்டும்.

தவறானவற்றை , சரி பார்காதவற்றை, துன்பம் தருபவற்றை எப்படியோ  நாம் கற்றுக் கொண்டு விடுகிறோம். அவற்றை மறந்தால் தான்  முன்னேற முடியும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நாம், முதலாவது வகுப்பில், சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, அது மறையும் திசை மேற்கு என்று படித்து இருக்கிறோம்.

ஆறாவது வகுப்பு வந்தால், சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அது பாட்டுக்கு ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பூமி சுற்றுவதால் அது உதிப்பதும், மறைவதும் போலத் தெரிகிறது என்று சொளிழ்த் தருகிறார்கள்.

இப்போது எது சரி ?

சூரியன் உதிக்கிறதா ? அல்லது உதிக்காமல் ஒரே இடத்தில் இருக்கிறதா ?

இல்லை, என் வேதத்தில் சொல்லி இருக்கிறது. அது மிகப் பழமையானது, எப்போது எழுதியது என்றே தெரியாது. எனவே அதில் சொல்லியதுதான் சரியாக இருக்க வேண்டும் என்று ஒன்றாம் வகுப்பு  புத்தகத்தை பிடித்துக் கொண்டு இருப்பது சரியா ?

ஞானம் மேலும் மேலும் வளர வேண்டும் என்றால் , முதலில் கற்றவற்றை மறக்க வேண்டும்.

சரி, சூரியன் நிலையாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால், இல்லை, பொறு...சூரியன் பால் வெளியில் இருக்கிறது...இந்த பால் வெளியே சுற்றுகிறது. அதோடு சேர்ந்து இந்த சூரியனும் சுற்றுகிறது என்கிறார்கள்.

எனவே, சூரியன் நிலையாக இருந்தது என்பதும் தவறு. அது சுற்றுகிறது என்பது சரி.

ஞானம் என்பது இப்படித் தான் வளர வேண்டும்.

நினைப்பு - ஞானம் - மறதி.. மீண்டும் புதிய நினைப்பு, புதிய ஞானம் என்று சக்கரம் போல மாறி மாறி வரும்.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் புதிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமா, பழையனவற்றை பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள். திறந்த மனத்தோடு இருங்கள்.

புதிய புதிய ஞானம் வரும்.  வர விடுங்கள்.

நீங்கள் நினைப்பது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால், அது மட்டும் தான் சரி என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்.

பழைய குப்பைகளை தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள்.

சுமை இல்லாமல் சுகமாக இருப்போம்.

(மேலும் தொடரும் என்று சொல்வதற்கு முன்னால், இதை ஆழமாக சிந்தியுங்கள்...சுகமான சிந்தனைகள் வளரட்டும் )


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1515-1.html )

No comments:

Post a Comment