கீதை - 15.7 - எல்லாம் ஒன்றே
ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥१५- ७॥
மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந: |
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||
மம = என் , என்னுடைய
ஏவ = நிச்சயமாக
அம்சா = அம்சம், பகுதி
ஜீவலோகே = உயிருள்ள உலகில்
ஜீவபூத: = உயிர்களில்
ஸநாதந: = காலம் காலமாக
மந:= மனம் முதலான
ஷஷ்ட = ஆறு
இந்த்ரியாணி = இந்திரியங்களும்
ப்ரக்ருதி = பிரகிரிதியில்
ஸ்தாநி = நிலை நிறுத்தப்பட்டு
கர்ஷதி = ஈர்க்கிறது
எனது அம்சமே , இந்த உயிருள்ள உலகில் என்றும் நிலைத்து உள்ள ஜீவனாகி, மனம் முதலிய ஆறு இந்திரியங்களை கவர்கிறது
என் அம்சமே எல்லா உயிர்களிலும் இருக்கிறது.
இது சரிதானா ? இது எப்படி சாத்தியமாகும் ? நாம் காணும் உலகில் ஒவ்வொன்றும் வேறு வேறாகவே இருக்கிறது. ஒன்றைப் போல ஒன்று இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி எல்லாம் ஒன்றின் அம்சம் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும் ?
இதை விளக்க எப்போதும் சொல்லப்படும் ஒரு உதாரணம் உண்டு. இந்த வெளி, ஆகாயம் ஒன்று தான். ஆனால் குடத்துக்குள் இருக்கும் ஆகாயம் வேறு என்றும் அதற்கு வெளியில் இருக்கும் ஆகாயம் வேறு என்றும் நமக்குத் தோன்றுகிறது அல்லவா ?
அவை வேறு வேறா ?
இல்லை , ஒரே ஆகாயம்தான். அதில் பிரிவு என்று ஒன்று இல்லை. பிரிவு இருப்பது போலத் தெரிவது ஒரு தோற்றப் பிழையே அன்றி உண்மை அல்ல.
சூரியன் ஒன்றுதான். அதன் பிம்பம் , நிழல் குளத்தில், குட்டையில், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் என்று ஒவ்வொரு இடத்திலும் தனித் தனியாக தெரிகிறது.
நீரின் தன்மைக்கு ஏற்ப அதன் தோற்றம் மாறித் தெரியலாம்.
தெளிந்த , அசைவற்ற நீரில் அது ஒரு மாதிரித் தெரியும்.
சலனம் உள்ள நீரில் வேறு மாதிரி தெரியும்.
சூரியன் ஒன்றுதான். பிம்பம் மாறிக் கொண்டே இருக்கும்.
அனைத்து உயிரிலும் இருக்கும் சக்தி ஒன்றுதான். ஒவ்வொரு உடைலையும் பொறுத்து அது மாறித் தெரியும்.
"மனம் முதலிய ஆறு இந்திரியங்களை அது ஈர்க்கிறது"
ஐந்து புலன்கள், மற்றும் மனம் சேர்ந்து ஆறு இந்திரியங்கள். இவை ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும்.அப்போதுதான் ஒரு உயிர் சரிவர செயல் பட முடியும்.
இந்த ஐந்து புலன்களையும், மனதையும் இழுத்து ஒன்றாக இணைப்பது அந்த சக்திதான்.
Consciousness என்று சொல்லக் கூடிய அந்த தன் உணர்வு, நான் என்ற அறிதல் எப்படி வருகிறது. புலன்கள் அறிவை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கின்றன. அனுபவங்கள் சேர்ந்து கொண்டே போகிறது. இந்த அறிவும், அனுபவமும், சேர்ந்து "நான்" என்ற என்னை உருவாக்குகிறது.
புலன்களையும், மனதையும் சேர்த்து வைக்க ஒரு சக்தி வேண்டும்.
அந்த சக்தி எல்லா உயிரிலும் இயங்குகிறது.
பாத்திரம் மாறினாலும், அதனுள் இருக்கும் ஆகாயம் மாறுவது இல்லை..
"எனது அம்சமே அனைத்து உயிரிலும் நிறைந்து இருக்கிறது" என்று தினமும் சொல்லிப் பாருங்கள். அது கிருஷ்ணன் சொன்னது இல்லை. நீங்கள் சொல்ல வேண்டியது. ஒருமுறை சொல்லிப் பாருங்கள்.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவர் முன்னாலும் ஒரு நொடி "எனது அம்சமே அனைத்து உயிரிலும் நிறைந்து இருக்கிறது" என்று நினைத்துப் பார்த்து விட்டு பேசத் தொடங்குங்கள்.
உங்கள் பேச்சு இனிமையாக இருக்கும்.
உருவங்கள் மாறினாலும், நாம் எல்லாம் ஒன்றுதான்.
அந்த எண்ணம் வரும்போது பிரிவினை மறையும், கோபம் மறையும், போட்டி பொறாமை மறையும்.
மனதில் அமைதியும், சாந்தியும் நிலவும்.
நிலவட்டும்.
(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/157.html )
No comments:
Post a Comment