பகவத் கீதை - 2.14 - பொறுத்துக் கொள்
मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत॥१४॥
மாத்ராஸ்பர்ஸா²ஸ்து கௌந்தேய ஸீ²தோஷ்ணஸுக²து³:க²தா³:|
ஆக³மாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா⁴ரத ||2-14||
மாத்ரா = பொருள்கள், இயற்கை
ஸ்பர்ஸா = உணர்ச்சி
து = அது
கௌந்தேய = குந்தி புத்திரனே
ஸீ²த = குளிர்ச்சி
உஷ்ண = சூடு
ஸுக = சுகம்
து³:க²தா³: = துக்கம்
ஆக³ம் = வரும்
அபாயிநோ = போகும்
அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது
தாம் = அவை
ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்
பா⁴ரத = பாரத குல தோன்றலே
குந்தியின் மகனே, பாரத குலத் தோன்றலே, குளிரும், வெப்பமும், இன்பமும், துன்பமும் ஆகிய இந்த இயற்கையின் தீண்டல்கள் நிரந்தரமானவை அல்ல. இவற்றை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இன்பம் வந்தால் அந்த இன்பம் அப்படியே வாழ் நாள் எல்லாம் தொடர வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். துக்கம் வந்தால், இந்த துக்கம் சீக்கிரம் முடியாத என்று வருந்துகிறோம். ஒரு வேளை இந்த துக்கத்தில் இருந்து நாம் விடுபடவே முடியாதோ, இது இப்படியே இருந்து விடுமோ என்று பயப்படுகிறோம்.
இன்பம் மட்டும் வேண்டும்; துன்பம் வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிறோம்.
எப்படி ஒரு வருடத்தில் குளிர் காலமும், வெயில் காலமும் வந்து வந்து போகிறதோ, அதே போல இன்பமும் துன்பமும் வந்து வந்து போவது இயற்கை.
வாழ்க்கைப் பயணம் இன்பம் , துன்பம் என்ற இரண்டின் வழியாகத்தான் போகும். இது தவிர்க்க முடியாதது.
கீதை என்ன சொல்ல வருகிறது என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
குளிர் காலம் வரும். நாம் என்ன செய்தாலும், எவ்வளவு வருந்தினாலும், எவ்வளவு அது வரக் கூடாது என்று ஆசைப் பட்டாலும், பிரார்த்தனை பண்ணினாலும் அது பாட்டுக்கு வரும். வந்தே தீரும். சரி, வந்து விட்டதே என்று சோர்ந்து உட்கார்ந்து விட்டால், அது போகுமா என்றால் போகாது. எவ்வளவு நாள் இருக்க வேண்டுமோ அவ்வளவு நாள் இருந்து விட்டுத் தான் போகும்.
ஐயோ, குளிர் காலம் வந்து விட்டதே என்று வருந்துவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அதே போல, அடடா இந்த கோடை காலம் போட்டு இப்படி வறுத்து எடுக்கிறதே என்று வருந்துவதில் ஏதாவது பலன் உண்டா? இல்லை அல்லவா? அதே போல துன்பம் வந்த காலத்தில் வருந்துவதில் ஒரு பயனும் விளையாது.
அது இயற்கை. அது அப்படித்தான் இருக்கும். நாம் அதை ஒன்றும் செய்ய முடியாது.
அது மட்டும் அல்ல, ஒரு காலத்தில் இன்பம் தந்த ஒன்று பிற்காலத்தில் அதுவே நமக்கு துன்பம் தரலாம்.
இன்பம் வேண்டும் என்றுதான் திருமணம் செய்து கொள்கிறோம். முதலில் இன்பமாகத்தான் இருக்கிறது. அந்த இன்பம் அப்படியே இருக்கிறதா ? அதுவே துன்பமாக மாறிப் போவது இல்லையா ?
மனைவியோடு ஸ்விட்சர்லாந்து, நைனிட்டால் என்று குளிர் பிரதேசத்தில் தேனிலவு போன போது சுகம் தந்த குளிர் வயதான காலத்தில் மூட்டு வலியை அதிகப் படுத்துகிறது.
சுவை தந்த ஐஸ் கிரீம் , சர்க்கரை நோய் வந்த வயதான காலத்தில் உயிருக்கே உலை வைத்து விடும்.
எதுவும் நிரந்தரம் இல்லை இங்கே.
இன்பத்தின் கருவில் துன்பம் இருக்கிறது. துன்பத்தின் கருவில் இன்பம் இருக்கிறது.
இன்பம் வரும் போது நினைக்க வேண்டும் - இது நிரந்தரம் அல்ல. இது போய் விடும் என்று.
துன்பம் வரும் போது நினைக்க வேண்டும் - இதுவும் நிரந்தரம் அல்ல. இதுவும் போய் விடும் என்று.
எல்லாமே இப்படி நிரந்தரம் இல்லாமல் போய் கொண்டே இருந்தால், இவற்றை அறிவதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது ?
எல்லாமே அநித்தியம் என்று சாமியார் மாதிரி இருக்கவா சொல்கிறது கீதை?
இல்லை.
பின் கீதை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது ?
வாருங்கள், கீதையின் விரல் பற்றி நடப்போம். அது கூட்டிச் செல்லும் வழியில் சென்று அது உணர்த்துவதை அறிவோம்.
http://bhagavatgita.blogspot.com/2018/08/214.html
http://bhagavatgita.blogspot.com/2018/08/214.html
No comments:
Post a Comment