பகவத் கீதை - 2.6 - யாரை யார் வென்றால் நலம்?
न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः।
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः॥६॥
ந சைதத்³வித்³ம: கதரந்நோ க³ரீயோ யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா: ||2-6||
ந = இல்லை
ச = மேலும்
எதத் = இந்த
வித்³ம: = நாம் அறிந்த
கதரந் = இரண்டில்
நோ = நமக்கு
க³ரீயோ = சிறந்தது
யத்³வா = அல்லது
ஜயேம = வெற்றி
யதி³ வா = அல்லது
நோ = நம்
ஜயேயு:| = வெற்றியா
யா = அவர்கள்
எவ = நிச்சயமாக
ஹத்வா = கொன்ற பின்
ந = இல்லை
ஜிஜீவிஷாமஸ் = வாழ விருப்பம்
தே = அவர்கள்
அவஸ்தி²தா: = அணி வகுத்து நிற்கும்
ப்ரமுகே²= எதிர்த்து நிற்கும்
தா⁴ர்தராஷ்ட்ரா: = திருதராஷ்ட்ர கூட்டத்தார்
நாம் அவர்களை கொல்லுவது . அவர்கள் நம்மை கொல்லுவது . இதில் எது சிறந்தது என்று எனக்கு விளங்கவில்லை. யாரை கொன்ற பின் நாம் உயிர் வாழ விரும்ப மாட்டோமோ, அந்த திருதராஷ்ட்ர கூட்டத்தார் நம் முன்னால் போருக்கு அணி வகுத்து நிற்கிறார்கள்.
எது சரி. எது தவறு என்று அர்ஜுனனுக்குப் புரியவில்லை. குழம்புகிறான். "நாம் வெல்வது சரியா. அல்லது அவர்கள் வெல்வது சரியா" என்று தெரியாமல் தவிக்கிறான்.
காரணம் என்ன ?
அறத்தின் சூட்சுமம் புரியாததால் வந்த குழப்பம். அறம் வெல்ல வேண்டும். ஆனால், எது அறம் என்று தெரியவில்லை. அவர்கள் வெல்வது அறமா அல்லது நாம் வெல்வது அறமா என்று தெரியவில்லை.
தான், அறத்தின் வழி நிற்கிறேனா இல்லையா என்று அவனுக்குத் தெரியவில்லை.
இது அர்ஜுனனின் குழப்பம் மட்டும் அல்ல. நம் அனைவரின் குழப்பமும் கூட. எது அறம் என்று அவ்வளவு எளிதாக கூறி விட முடியாது.
எது சரி என்று எப்படி அறிந்து கொள்வது ? சட்டப் படி நடப்பது சரியா? எல்லாவற்றிற்கும் சட்டம் இருக்கிறதா ? சட்டம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? சட்டத்தில் ஓட்டைகள் இல்லையா ?
நாம் எப்படி வாழ்வது என்றே நமக்குத் தெரியவில்லை. பின் எப்படி பிள்ளைகளை சரியாக வளர்ப்பது ? அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லித் தருவது ?
அறிவியலின் முன்னேற்றம் சந்தேகத்தை மேலும் மேலும் வளர்த்து விடுகிறது. எதிலும் சந்தேகம். எதிலும் ஒரு உறுதியற்ற தன்மை என்று வந்து விட்டது.
அர்ஜுனன் அறிவின் உச்சம் தொட்டவன். எனவே, குழப்பத்தின் உச்சத்தையும் தொடுகிறான். படித்தவனுக்கு ஆயிரம் சந்தேகம் வரும். குழப்பம் வரும். படிக்காதவனுக்கு ஒரு குழப்பமும் இல்லை. தான் நினைத்ததே சரி என்று அவன் நினைப்பான்.
அறிவின் அடையாளம் குழப்பம். அறிவு விரிவடைய விரிவடைய , அறியாமையும் விரிகிறது. அறியாமை விரிய விரிய குழப்பம் விரிகிறது.
சரி இதற்கு என்னதான் வழி.
எது சரி, எது தவறு என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது ?
சரியான கேள்வி. இது ஒரு நல்ல கேள்வி.
அர்ஜுனன் வழி கண்டுபிடித்து விட்டான். அது என்ன வழி தெரியுமா ?
http://bhagavatgita.blogspot.com/2018/08/26.html
No comments:
Post a Comment