பகவத் கீதை - 2.7 - உன்னை சரணடைந்தேன்
कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः।
यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्॥७॥
கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா:|
யச்ச்²ரேய: ஸ்யாந்நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே ஸி²ஷ்யஸ்தேऽஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ||2-7||
கார்பண்ய = கோழைத்தனமாக
தோஷோ பஹத = தோஷம், குற்றம், குழப்பம்
ஸ்வபா⁴வ: = குணத்துடன்
ப்ருச்சா²மி = நான் கேட்கிறேன்
த்வாம் = நீ
த⁴ர்ம = தர்மம், அறம்
ஸம்மூட = அறியாமல்
சேதா:| = அறிவு
யச் = அது, அந்த
ச்²ரேய: = உயர்ந்த, சிறந்த
ஸ்யாந் = இருக்கும்
நிஸ்²சிதம் = நிச்சயமாக, உறுதியாக
ப்³ரூஹி = சொல்
தந் = இந்த
மே = என்னிடம்
ஸி²ஷ்யஸ் = சீடனான
தே = உன்
அஹம் = நான்
ஸா²தி⁴ = கட்டளை
மாம் = எனக்கு
த்வாம் = நீ
ப்ரபந்நம் = சரண் அடைகிறேன்
குழம்பிய அறிவுடன், எது தர்மம், எது அதர்மம் என்று அறியாமல் மயங்கி நிற்கிறேன். நான் உன்னை கேட்கிறேன், எது சரி என்று நீ எனக்கு உறுதியாகச் சொல். நான் உன் சீடன். எனக்கு கட்டளை இது. உன்னை சரணடைந்தேன்.
அவ்வளவுதான்.
கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது.
என்னால் எல்லாம் முடியும் என்று தோள் தட்டி நின்ற அர்ஜுனன், குழம்பி, மயங்கி நிற்கிறான். என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கிறான்.
கடைசியில், அவன் வழியை கண்டு பிடித்து விட்டான்.
கண்ணனிடம் சரண் அடைந்து விடுகிறான். "எனக்கு ஒன்றும் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. என்னை உன் சீடனாக ஏற்றுக் கொள். எனக்கு கட்டளை இது. நீ என்ன சொல்கிறாயோ, நான் அதை கேட்கிறேன். நான் உன் சரண்" என்கிறான்.
இந்த ஸ்லோகத்தை நாம் விரிவாக ஆராய்வோம்.
முதலில், தன் அறியாமையை அர்ஜுனன் அறிந்து கொள்கிறான். தாத்தாவை கொல்ல மாட்டேன், ஆசிரியரை கொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது, "எது சரி, எது தவறு என்று தெரியவில்லை என்கிறான்". அறியாமை, குழப்பம் வருவது பெரிய விஷயம் இல்லை. அது வந்த போது , இது நமக்குத் தெரியாது என்று அறியும் அறிவு இருக்கிறதே, அது தான் பெரிய விஷயம். தெரியாத ஒன்றை, எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி செய்து மேலும் சிக்கலில் மாட்டாமல் இருப்பது புத்திசாலித்தனம் அல்லவா ?
இரண்டாவது, "உன்னை சரண் அடைந்தேன்" என்கிறான். அறிவு தடுமாறும் போது, பெரியவர்களை சரண் அடைவது தான் சரியான வழி. அறிவில், ஆற்றலில், திறமையில், உயர்ந்த அர்ஜுனனுக்கே குழப்பம் வருகிறது என்றால் நாம் எம்மாத்திரம்.
மூன்றாவது, "என்னை உன் சீடனாக ஏற்றுக் கொள் " என்கிறான். நம்மால் சரண் அடைய முடியாது. நம்மை விட மற்றவர்களுக்கு பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறது என்று நினைப்போம். யார் என்ன சொன்னாலும், ஒரு சந்தேகக் கன்னோடேயே பார்ப்போம். நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததை யாராவது சொன்னால் "அதெல்லாம் நடை முறைக்கு சாத்தியம் இல்லை " என்று ஒதுக்கி விடுவோம். சீடன் என்பவன் ஆசிரியர் சொல்வதை கேட்பவன்.
நான்காவது, "நீ எனக்கு கட்டளை இடு" என்கிறான். எனக்குத் தெரியாது. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்கிறான் அர்ஜுனன்.
இது என்ன ஒண்ணும் சரி இல்லையே ? சின்ன பிள்ளை மாதிரி, "எனக்கு ஒண்ணும் தெரியாது, நீ சொல்லு " என்று கேப்டது சரிதானா ? என்ற குழப்பம் நமக்கு வரலாம்.
நாம் ஒரு உண்மையை எவ்வாறு அறிந்து கொள்கிறோம் ?
எதையும் பார்த்து, அறிந்து, சோதித்து, பல முறை சோதனை செய்த பிறகு அது சரியாக வந்தால் , அது உண்மை என்று ஏற்றுக் கொள்கிறோம்.
அது தான் அறிவியல் முறை. தர்க முறை.
நமது பழைய தர்க்க முறை இவற்றை தாண்டி மேலே போகிறது.
உண்மையை அறிந்து கொள்ள மூன்று விதமான பிரமாணங்களை சொல்கிறார்கள். (பதினாறுக்கும் மேலே உள்ளது. முக்கியமானது மூன்று).
காட்சி பிரமாணம்
அனுமான பிரமாணம்
ஆகம பிரமாணம்
என்பவை அவை.
காட்சி பிரமாணம் என்றால், நம் புலன்களால் உணர்ந்து அறிவது. தொட்டு, முகர்ந்து, பார்த்து, ருசித்து, அளந்து அறிவது. அது தான் நவீன அறிவியல் முறை.
அதற்கு மேலே உள்ளது அனுமான பிரமாணம். காணாத ஒன்றை, புலன்களால் அறியாத ஒன்றை அறிவது. அது எப்படி ?
தூரத்தில் உள்ள மலையில் புகை வருகிறது. புகை வந்தால், அங்கே நெருப்பு இருக்கும் என்று அனுமானிக்கிறோம். நெருப்பை கண்ணால் பார்க்கவில்லை, அதன் சூட்டை உடல் அறியவில்லை. எங்கோ புகை வருகிறது. அதை வைத்து நெருப்பு இருக்கும் என்று அறிகிறோம். இது அனுமான பிரமாணம்.
மூன்றாவதாக உள்ளது ஆகம பிரமாணம். அதாவது, பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்பது. அவர்கள் எழுதி வைத்து விட்டு போன்றவற்றை கடை பிடிப்பது. அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். உண்மையைத் தான் சொல்வார்கள் என்று நம்புவது.
இராமன் முதலில் வசிட்டரிடம் படித்தான். அனைத்து சாத்திரங்களையும் படித்து அறிந்து விட்டான். ஒரு நாள் அவன் விசுவாமித்திரருடன் காட்டில் சென்று கொண்டு இருக்கிறான். அப்போது தாடகை என்ற அரக்கி வருகிறாள். விசுவாமித்ரன் அவளை கொல் என்கிறான்.
இராமன் மறுக்கிறான். பெண்ணைக் கொல்லக் கூடாது என்பது அவன் படித்த சாத்திரம்.
விசுவாமித்த்ரன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான்.
கடைசியில் இராமன் , விசுவாமித்த்ரன் சொல் கேட்டு தாடகையை கொன்று விடுகிறான்.
இராமானுக்குப் புரிகிறது. புத்தக அறிவின் எல்லை மிகச் சுருங்கியது. அறம் என்பது படித்த புத்தகங்களோடு நிற்பது அல்ல. ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் சொல்வதுதான் அறம் என்று முடிவு செய்கிறான்.
இராமன் சொல்கிறான், "நீ (விஸ்வாமித்ரர்) அறம் அல்லாதவற்றை சொன்னால் கூட அதை வேதம் என்று கொண்டு செய்து முடிப்பேன் என்கிறான் "
ஐயன் அங்கு அது கேட்டு,
‘அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க
என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம்
எனக் கொடு
செய்கை அன்றோ அறஞ்
செயும் ஆறு? ‘என்றான்.
பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதே அறத்தின் வழி (அறம் செய்யும் ஆறு) என்கிறான்.
இராமாயணத்தின் முக்கிய புள்ளி அது.
இராமாயணம் என்றால் இராமன் + அயனம். அயனம் என்றால் பாதை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று சொல்வது போல. இராமன் காட்டிய பாதை எது ?
சகோதரத்துவம் என்று சொல்லுவார்கள். வாலியை கொன்று சுக்ரீவனுக்கு அரசு தந்தான், இராவணனை கொன்று வீடணனுக்கு அரசு தந்தான் ...இதுவா சகோதரத்துவம்?
அல்ல.
இராமன் காட்டிய பாதை பெரியவர்களை மதிப்பது . அவர்கள் சொல்வதை ஏற்று நடப்பது.
இராமாயணம் முழுக்க இதைக் காணலாம். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம். அதைப் புரிந்து கொண்டால் வாலி வதம் குற்றம் அற்றது என்று புரியும்.
அறம் என்றால் என்ன என்று சொல்ல வந்த பரிமேல் அழகர் இரண்டே வரியில் அழகாக சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
வேதம் முதலிய நூல்களில் சொன்னவற்றை கடை பிடிப்பது. அவை விலக்கச் சொன்னவற்றை விலக்குவது . அதுதான் அறம்.
இதை விட எளிமையாகச் சொல்ல முடியாது.
மீண்டும் கீதைக்கு வருவோம். தான் படித்த சாத்திரங்கள் கை கொடுக்கவில்லை என்று அறிந்த பின், அர்ஜுனன் கண்ணனை சரண் அடைகிறான்.
பெரியாரை துணை கோடல் என்று ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். படித்துப் பாருங்கள்.
வாழ்வில் சிக்கல் வரும். குழப்பம் வரும். மயக்கம் வரும். எது சரி, எது தவறு என்று தெரியாமல் தள்ளாடுவோம். அப்போது , ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பெரியவர்களை சரண் அடைந்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.
இப்போது, பெரியவர்களுக்கு எங்கே போவது. கண்ணன் போன்ற ஒரு ஆள் கிடைக்குமா ? நிச்சயம் கிடைக்காது.
நீங்கள் மதிக்கும் பெரியவர், படித்தவர், ஒழுக்கம் நிறைந்தவர், உங்கள் நலனில் அக்கறை உள்ளவர் என்று ஒருவர் இருந்தால், அவர் சொல்வதைக் கேளுங்கள்.
இல்லை என்றால், பெரியவர்களை எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். அவற்றை படித்து தெளிவு பெறுங்கள். அவற்றைப் படித்து அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
சரி. அர்ஜுனன் சொன்னான், "எனக்கு கட்டளை இடு " என்று.
கண்ணன் "சரி. போ போர் செய்" என்று கட்டளை இட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால், கீதை இந்த ஸ்லோகத்தோடு முடிந்து இருக்கும்.
கண்ணன் அப்படி கட்டளை எதுவும் இட்ட மாதிரி தெரியவில்லை.
பின் என்னதான் சொன்னான் ?
No comments:
Post a Comment