பகவத் கீதை - 1.46 - நான் இறந்தாலும் பெரிய நன்மையே
यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्॥४६॥
யதி³ மாமப்ரதீகாரமஸ²ஸ்த்ரம் ஸ²ஸ்த்ரபாணய :|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் ப⁴வேத் ||1-46||
யதி= எனவே
மாம் = என்னை
அப்ரதீகாரம் = எதிர்த்து போர் புரியாமல் இருக்கும்
அஸ²ஸ்த்ரம் = ஆயுதம் இல்லாமல்
ஸ²ஸ்த்ரபாணய = ஆயுதம் இருக்கும் அவர்கள்
தா⁴ர்தராஷ்ட்ரா = திருதராஷ்ட்ர
ரணே = யுத்த களத்தில்
ஹந்யுஸ் = கொன்றாலும்
தத் = அது
மே = எனக்கு
க்ஷேமதரம் = பெரிய நன்மையே
ப⁴வேத் = அது
நிராயுதபாணியாக, போரிடாமல் இருக்கும் என்னை இந்த திருதராஷ்ட்ர கூட்டத்தினர் கொன்று விட்டாலும், அது ஒரு பெரிய நன்மையே
நமக்கு ஏன் கவலை வருகிறது. துக்கம் எங்கிருந்து வருகிறது. நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்ய வில்லையே. எனக்கு ஏன் இந்த துன்பம் எப்போதாவது கவலைப் பட்டு இருக்கிறீர்களா.
கவலைக்கு ஒரே காரணம், நீங்கள் உங்கள் கடமையை செய்யாமல் இருப்பதுதான்.
அர்ஜுன் கவலைப் படுகிறான். என்னால் யுத்தம் செய்ய முடியாது. அப்படி யுத்தம் செய்யாமல் இருக்கும் என்னை என் எதிரிகள் கொன்று விட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறான்.
யுத்தம் செய்வது அவன் கடமை. கடமையில் இருந்து தவற நினைத்தாலே துக்கம் வந்து சேரும்.
துக்கத்தை மாற்ற ஒரே வழி, கடமையை செய்து கொண்டே இருப்பது தான்.
சுய விருப்பு வெறுப்புகளுக்காக கடமையை செய்யாமல் இருக்க நினைக்கிறான். துக்கம் மலை போல வருகிறது. செத்து தொலைந்து விடலாமா என்று கூட நினைக்கிறான்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், கடமையை செய்யாவிட்டால், துன்பம் வந்தே தீரும்.
கவலை வருகிறதா, வேலை செய்யுங்கள். கவலை பறந்தே விடும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
நிறுத்தாமல் கடமையை செய்து கொண்டே இருப்பவர்கள் , விதியையும் புரட்டிப் போட்டு விடுவார்கள் என்கிறார் வள்ளுவப் பேராசான்.
கண்ணன் ஏதேதோ சொல்லப் போகிறான். அது ஒரு புறம் இருக்கட்டும். ஒன்றைப் புரிந்து கொள்வோம். கடமையை விட்டு தவறி நடக்க நினைப்பவனுக்கே, துக்கம் வந்து சேர்கிறது என்றால், கடமையை செய்யாதவனுக்கு என்ன நிகழும் என்று யோசித்துப் பார்ப்போம்.
கடமையைச் செய் - இது தான் கீதையின் அடி நாதம்.
என்ன சரிதானே?
http://bhagavatgita.blogspot.com/2018/08/146.html
No comments:
Post a Comment