Saturday, August 4, 2018

பகவத் கீதை - 2.2 - அக்காலத்தில் வந்த உள்ளச் சோர்வு

பகவத் கீதை - 2.2 - அக்காலத்தில் வந்த உள்ளச் சோர்வு 



कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन॥२॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்|
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||


ஸ்ரீப⁴க³வாநுவாச  = ஸ்ரீ பகவான் (கண்ணன்) சொல்கிறான்

குத = எங்கிருந்து

த்வா = உனக்கு

கஸ்மலம் = சோர்வு, தூய்மை அற்ற தன்மை

இதம் = இந்த

விஷமே = முக்கிய தருணத்தில்

ஸமுபஸ்தி²தம்|= வந்து சேர்ந்தது

அ - ஆர்ய - ஜுஷ்டம் = ஆரியனுக்கு ஒவ்வாத

அ - ஸ்வர்கம் = சொர்கத்தை அடையாத

அ கீர்தி = புகழ் தராத

கரம = செயல்

அர்ஜுந = அர்ஜுனா

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், இந்த முக்கிய தருணத்தில் இந்த உள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய் ? இது ஆரியர்களுக்கு ஒவ்வாத ஒன்று. சொர்கம் செல்வதை தடுக்கும்.  புகழ் வருவதை தடுக்கும். அர்ஜுனா!


இந்த வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டும் ? பேர், புகழ், செல்வம், ஆரோக்கியம் இவை எல்லாம் வேண்டும். இறந்த பின், அந்த வாழ்வில் சொர்கம் வேண்டும்.

அவ்வளவுதானே. இரண்டையும் உங்களுக்கு தரலாம். நீங்கள் இதை அடைய தடையாய் இருப்பது யார் தெரியுமா ?

நீங்கள் தான்.

உங்களின் முதல் எதிரி - நீங்கள்தான்.

உங்களால் எதையும் செய்ய முடியும். சாதிக்க முடியும். ஆனால், நீங்கள் எதையும் பெரிதாக சாதித்ததாகத் தெரியவில்லை. உங்களால் முடியும் என்றால் ஏன் நீங்கள் சாதிக்கவில்லை?

கீதை விடை சொல்கிறது.

"மனச் சோர்வு"

என்னால் எப்படி முடியும் ? என்னால் முடியுமா ? நான் எப்படி இதைச் செய்வேன் ? ஒரு வேளை தவறாகாப் போய் விட்டால் ? எல்லோரும் சிரிப்பார்களே என்ன செய்வது ?

என்றெல்லாம் சிந்தித்து, மனம் சோர்வு அடைந்து நீங்கள், உங்களால் முடிந்ததை  செய்யாமல் விட்டு விடுகிறீர்கள்.

யாரோ ஒருவரால் இமய மலை ஏற முடியும் என்றால் , உங்களாலும் முடியும்.  நீங்கள் ஏறவில்லை, காரணம், உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை.

என்னால் முடியாது என்று பயந்து, தயங்கி நின்று விடுகிறீர்கள்.

இமய மலை ஏற்றம் என்பது ஒரு உதாரணம் தான்.

எவ்வளவோ பெரிய சாதனைகளை நீங்கள் செய்ய முடியும். இன்று தொடங்கினால் கூட , நீங்கள் பெரிய சாதனைகளை செய்ய முடியும்.

இவ்வளவு வயசுக்கு அப்புறமா ? இப்ப போய் எப்படி முடியும் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.

அர்ஜுனனிடம் பலம் இருக்கிறது, ஆற்றல், தைரியம் எல்லாம் இருக்கிறது. இருந்தும்  வில்லையும், அம்பையும் தூர எறிந்து விட்டு, தேரில் அழுது கொண்டே அமர்ந்து விட்டான்.

காரணம் , கண்ணன் சொல்கிறான் - மனச் சோர்வு.

எவ்வளவு திறமை, அறிவு இருந்தாலும், மனச் சோர்வு வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அதன் எதிர்மறை, மனம் உற்சாகமாக இருந்தால், எதையும் சாதிக்கலாம்.

மனம் தான் காரணம். முடியும் என்று நினையுங்கள். முடியும்.

நான் அழகாக இல்லை, என்னிடம் அவ்வளவு அறிவு இல்லை, எனக்கு திறமை இல்லை என்றெல்லாம் நீங்களே உங்கள் "மனதில் " கற்பனை பண்ணிக் கொள்கிறீர்கள்.

உங்களை விட அழகு இல்லாதவர்கள் சினிமாவில் நடிக்கிறார்கள். உங்களை விட அறிவும் திறமையும் குறைந்தவர்கள் எவ்வளவோ பெரும் புகழும் பெற்று  விளங்குகிறார்கள்.

உங்கள் மனச் சோர்வை விடுங்கள். முடியும், என்று எழுந்திருங்கள். நடத்திக் காட்டுவேன் என்று உற்சாகமாக நினையுங்கள்.

ஒளவை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்

"ஊக்கமது கை விடேல்"

அவ்வளவுதான்.

மனச் சோர்வை விட்டுத் தள்ளுங்கள். முடியும் முடியும் என்று ஆர்வத்துடன், உற்சாகத்துடன் புறப்படுங்கள்.

வானம் வசப்படும்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/22.html



No comments:

Post a Comment