பகவத் கீதை - 2.8 - நீங்காத துயர்
न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्।
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्॥८॥
ந ஹி ப்ரபஸ்²யாமி மமாபநுத்³யாத்³யச்சோ²கமுச்சோ²ஷணமிந்த்³ரியாணாம்|
அவாப்ய பூ⁴மாவஸபத்நம்ருத்³த⁴ம் ராஜ்யம் ஸுராணாமபி சாதி⁴பத்யம் ||2-8||
ந = இல்லை
ஹி = அதனால்
ப்ரபஸ்²யாமி = நான் காண்கிறேன்
மமா = என்
அபநுத்³யாத்³ = விட்டு விலகி
யட் = அது
சோ²கம் = சோகம்
உச்சோஷணம் = தீர்ந்து போதல்
இந்த்³ரியாணாம்|= புலன்களை
அவாப்ய = அடைந்த பின்
பூமா = பூலோகம்
அஸபத்நம் = பொறாமை படும் படி, உயர்ந்த
ருத்³த⁴ம் = சிறக்கும்
ராஜ்யம் = இராஜ்யம்
ஸுராணாம் = தேவர்கள்
அபி = மேலும்
சா = மேலு
அதி⁴பத்யம் = ஆண்டாலும்
இந்த பூமியில் சிறந்த செல்வங்களை பெற்றாலும், விண்ணரசே கிடைத்தாலும், புலன்களை வருத்தும் இந்த துன்பம் நம்மை விட்டு விலகவே விலகாது
இந்த உலகமே கிடைத்தாலும், சொர்கமே கிடைத்தாலும், இவர்களை எல்லாம் கொன்று வரும் சுகம் ஒரு சுகமே இல்லை. அவர்களை கொன்ற அந்த வருத்தம் ஒரு போதும் நம்மை விட்டு விலகாது என்று வருந்துகிறான் அர்ஜுனன்.
வெற்றி பெற்றால், அரசாட்சி கிடைக்கும். செல்வ செழிப்புடன் இருக்கலாம். ஒரு வேளை தோற்றுவிட்டால், வீர சொர்கம் கிடைக்கும். எப்படியும் இன்பம் கிடைக்கும். அது நல்லதுதான். ஆனால், கூடவே, இந்த குற்ற உணர்வும் இருக்குமே. அதை என்ன செய்வது என்பது தான் அர்ஜுனனின் கேள்வி.
குற்ற உணர்வு இல்லாமல் இன்பம் அனுபவிக்க முடியுமா என்பது அவன் கேள்வி.
ஒவ்வொரு இன்பத்துக்குப் பின்னும் ஏதோ ஒரு துன்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. துன்பமே இல்லாத இன்பம் என்று ஒன்று இல்லவே இல்லை.
இன்பம் தலை என்றால், துன்பம் வால் . தலையை பிடித்து தூக்கினால் , வாலும் கூடவே வரும்.
ஐயோ, எனக்கு இவ்வளவு துன்பம் வந்து விட்டதே, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் என்று புலம்பும் போது சிந்திக்க வேண்டும். யாருக்காவது தீங்கு செய்தால் தான் நமக்கு துன்பம் வரும் என்று இல்லை. ஏதோ இன்பத்தை நாடி இருப்போம். அதன் பக்க விளைவு துன்பம்.
இன்பம் அதிகமாகும் போது துன்பமும் அதிகம் ஆகிறது.
அதிக பட்ச இன்பமான சொர்கம் வேண்டும் என்றால், அதிக பட்ச துன்பமான அனைத்தையும் விட வேண்டும்.
இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்றால் நடக்காது.
ஒவ்வொரு இன்பத்துக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை தரத் தயார் என்றால் , அந்த இன்பத்தை நோக்கி ஓடலாம்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
அர்ஜுனனின் புலம்பல்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வாருங்கள். எது அவனின் துன்பம், ஏன் அவன் கவலைப் படுகிறான், எது அவனை சோர்வடையச் செய்கிறது என்று கவனியுங்கள்.
உறவினர்களை கொல்வதா ?
ஆசிரியரை கொல்வதா ?
அதெல்லாம் இல்லை. அதெல்லாம் வெளியே தெரிவது.
அடிப்படையில் அவன் துன்பத்துக்கு காரணம் இவை அல்ல. இன்னும் சொல்லப் போனால், உலகில் உள்ள அனைத்து துன்பங்களுக்கும் அதுவே காரணம்.
கண்ணன் அதைத்தான் விளக்கப் போகிறான்.
பொறுமையாக படியுங்கள்.
பிடித்திருந்தால், கடை பிடியுங்கள். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது "இதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாது " என்ற நமது உயரிய கொள்கை....
http://bhagavatgita.blogspot.com/2018/08/28.html
http://bhagavatgita.blogspot.com/2018/08/28.html
No comments:
Post a Comment