பகவத் கீதை - 2.5 - பிச்சை எடுப்பது மேல்
गुरूनहत्वा हि महानुभावाञ्छ्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान्॥५॥
கு³ரூநஹத்வா ஹி மஹாநுபா⁴வாஞ்ச்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யமபீஹ லோகே|
ஹத்வார்த²காமாம்ஸ்து கு³ரூநிஹைவ பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந்ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ||2-5||
கு³ரூந் = குருமார்கள்
அ -ஹத்வா = கொல்லாமல்
ஹி = அதனால்
மஹாநுபா⁴வா = மிகுந்த அனுபவம் உள்ளவர்கள்
ச்²ரேயோ = சிறந்த
போ⁴க்தும் = உண்பதற்கு
பைக்ஷ்யம = பிச்சை எடுத்து
அபி = மேலும்
இஹ = இந்த
லோகே = உலகில்
ஹத்வ = கொன்ற பின்
அர்த காமாம்ஸ் = சிறந்தவற்றின் மேல் பற்றுள்ள
து = மேலும்
கு³ரூ = குருமார்கள்
இஹ = இங்கே
எவ = நிச்சயமாக
பு⁴ஞ்ஜீய = நான் அனுபவிப்பேன்
போ⁴கா = போகங்களை
ருதி⁴ர = உதிரத்தில்
ப்ரதி³க்³தா⁴ந் = நனைந்த
பெரியவர்களாகிய குரு மார்களை கொல்வதை விட நாம் பிச்சை எடுப்பது மேல். சிறந்தவற்றின் மேல் பற்று கொண்ட குருக்களை கொன்று வரும் போகம், இரத்தத்தில் நனைந்ததாக இருக்கும்.
இதுவும் போன ஸ்லோகத்தின் தொடர்ச்சியே. பொதுவாக, தனக்கு ஒரு சங்கடம் வரும் என்றால் மனிதன் அதை செய்வதை தவிர்க்க நினைப்பது இயல்பு. குருமார்களை கொன்று வரும் செல்வம் நல்லதல்ல என்பது அர்ஜுனனின் எண்ணம். மேலோட்டமாக பார்த்தால் அது சரி என்று படும்.
அது ஏன் சரி இல்லை என்று பார்ப்போம்.
குருமார்களை கொன்று வரும் செல்வம் சரி இல்லை என்றால், வேறு யாரையாவது கொன்று அதன் மூலம் வரும் செல்வம் பரவாயில்லையா ? தாத்தா, குரு என்றால் கொல்லக் கூடாது. மற்றவர்ளை கொல்லலாம் என்பது சரியா ?
கொல்வதன் மூலம் வரும் செல்வம் வேண்டாம் என்கிறான். செல்வம் வேண்டும், ஆனால் அவர்களை கொல்லாமல் அந்த செல்வம் வேண்டும்.
தன்னுடைய தாத்தா, மற்றும் குருவை கொல்லக் கூடாது. வேறு எவரின் தாத்தா மற்றும் குருவாக இருந்தால் கொல்லலாம் என்பது சரியா?
செல்வம் வராவிட்டால், கொல்வது சரியா ?
இதெல்லலம் சிறு பிள்ளைத்தனமான பேச்சு.
மனிதன் சுயநலம் மிக்கவனாக மாறும் போது , இந்த குழப்பங்கள் வந்தே தீரும்.
ஒரு பிள்ளை, தெரியாமல் பக்கத்து பையனின் சாமானை எடுத்து வந்து விட்டான். அந்தப் பையனின் தாய் , அந்தப் பையனை ஏசுகிறாள் , அடிக்கிறாள். அவனை தண்டிக்கிறாள்.
ஏன் ?
சொந்த பிள்ளையை எப்படி அடிக்க முடியும் ? அடித்தால் தாய்க்கு வலிக்காதா ? நான் பெற்ற பிள்ளையை நானே எப்படி அடிப்பது என்று அவள் நினைக்கலாம். அதில் தவறு இல்லை. அர்ஜுனன் நினைப்பதைப் போல. என் தாத்தாவை நானே எவ்வாறு கொல்வேன்.
ஆனால் , தாய் அடித்து திருத்துகிறாள். காரணம், அவள் அந்த ஒரு நிமிடத்தில், தான் ஒரு தாய் என்பதை மறந்து, இந்த பிள்ளை சரியாக வளர வேண்டும், சமுதாயத்தில் ஒரு திருடனாக மாறிவிடக் கூடாது, அவனை இப்போதே திருத்த வேண்டும் என்று ஒரு நல்ல குடிமகனை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வலித்தாலும் பரவாயில்லை என்று அந்தப் சிறுவனை தண்டிக்கிறாள்.
பாசம் தாண்டி, ஒரு சமூக கடமை அவளை அவ்வாறு தூண்டுகிறது.
பாசம் மட்டும்தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் , "சரி போகட்டும், இனி இப்படி செய்யாதே " என்று சொல்லி விட்டிருக்கலாம். அது சரியான வழியாக இருந்திருக்காது. தாய் என்ற சுயநலம் தாண்டி, தர்மம், சமூக கடமை என்ற தளத்தில் இருந்து யோசித்ததால் அவள் பிள்ளையை கண்டிக்கிறாள் , தண்டிக்கிறாள்.
அவள் அப்படி எல்லாம் யோசித்துத் தான் செய்தாளா என்று தெரியாது. அது இயற்கையாகவே அவளிடம் இருக்கிறது.
அர்ஜுனன், அறிவின், தர்க்கத்தின் வழி செல்பவன். அவனுக்கு அது இயற்கையாக வரவில்லை. தடுமாறுகிறான். பாசம் கண்ணை மறைக்கிறது.
சுயநலத்தில் தடுமாறுகிறான்.
http://bhagavatgita.blogspot.com/2018/08/25.html
No comments:
Post a Comment