Saturday, August 25, 2018

பகவத் கீதை - 2.13 - உடலும் , உடலை செலுத்துபவனும்

பகவத் கீதை - 2.13 - உடலும் , உடலை செலுத்துபவனும் 




देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தே³ஹிநோऽஸ்மிந்யதா² தே³ஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா² தே³ஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||


தேஹிநா = உடலை உடையவன்

அஸ்மிந் = இந்த


யதா = அப்படியே

தேஹே  = உடல்

கௌமாரம் = குழந்தைப் பருவம்

யௌவநம் = இளமைப் பருவம்

ஜரா = முதுமை பருவம்

ததா = எப்படியோ

தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவைத்தைப் போல

தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்

தத்ர = அது போல

ந = இல்லை

முஹ்யதி = குழப்பம


உடலுக்கு எப்படி குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மூப்பு என்று தோன்றுகிறதோ அது போல உடலை உடையவனுக்கும். தீரன் இவற்றைப் பற்றி கலங்க மாட்டான். 

உரை

பயத்தில் பெரிய பயம், மரண பயம். மரணம் பற்றி பயப்படாதவர்கள் யார்? தன் மரணம், தனக்கு நெருங்கிய உறவினர் மரணம் இரண்டுமே துக்கம் தான்.

எத்தனை வருடத்தில் ஒருவர் இறந்தாலும், அந்த மரணம் எப்படியோ சிலருக்கு துக்கத்தை உண்டாக்கத்தான் செய்கிறது.

என்னதான் சமாதானம் சொன்னாலும், அறிவு ஏற்க மறுக்கிறது. அது எப்படி துக்கம் இல்லாமல் போகும் என்ற கேள்வி முன்னே வந்து நிற்கிறது.

கீதை என்ன சொல்கிறது?



நாம் குழந்தையாக இருந்தோம். பின் இளமைப் பருவத்தை அடைந்தோம்.  பின் முதுமை பருவத்தை அடைகிறோம். இல்லையா. அதில் சந்தேகம் இல்லையே.


நாம் ஒரே சமயத்தில் குழந்தையாகவும், இளைய வயது உடையவராகவும் இருந்து இருக்கிறோமா ?

ஒரே சமயத்தில் இளைய வயது உடையவராகவும், வயதானவராகவும் இருந்து இருக்கிறோமா ?

இல்லை அல்லவா ?

குழந்தை என்பது மறைந்து, இளமை பிறக்கிறது. இளமை மறைந்து மூப்பு தோன்றுகிறது.

அதாவது, குழந்தையின் மரணத்தில் இளமை, இளமையின் மரணத்தில் முதுமை ஜனனம்.

ஒன்று மறைந்தால் தான், இன்னொன்று தோன்றும்.

விதை அழிந்தால் தான் விருட்சம் தோன்றும்.

விதையும் வேண்டும், விருட்சமும் வேண்டும் என்றால் முடியுமா ?

கூட்டுப் புழு மறைந்தால் தான் பட்டுப் பூச்சி தோன்றும்.

குழந்தை, இளமை,முதுமை என்று நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.

நமது ஒரு வயது படத்தைப் பார்த்தால் நமக்கே நம்மை அடையாளம் தெரியாது.

அந்த குழந்தை யாரோ மாதிரி இருக்கும்.

90 வயது தாத்தா, தனது 18 வயது படத்தைப் பார்த்தால் "இது நானா " என்று கேட்பார்.

குழந்தை மறைந்து விட்டது.

இளமைப் பருவம் மறைந்து விட்டது.

ஆனால், இந்த உடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் தான் குழந்தை, நான் தான் இளைஞன், நான் தான் முதியவன்.

இந்த உடல் மாறி விட்டது. ஆனால், நான் மாறவில்லை. இந்த அனைத்து நிலைகளிலும் இருப்பவன் "நான்".

யார் இந்த நான் ?

மாறும் இந்த நிலைகளுக்கு நடுவில், மாறாமல் இருக்கும் அந்த நான் யார் ?

அந்த நான் என்பது இந்த உடல் இல்லை என்று தெரிகிறது. ஏன் என்றால் இந்த உடல் மாறுகிறது. நான் மாறாமல் இருக்கிறது.

மாறாத அந்த நான் யார் ? குழந்தை, இளமை, மூப்பு வரை வந்த அந்த நான் இதோடு நின்று விடுமா ? அல்லது இன்னும் தொடருமா ?

"உடல் எப்படி மாறி மாறி வருகிறதோ, அது போல அந்த உடலை கொண்ட அதுவும் தொடர்ந்து மாறி மாறி வரும் "

என்கிறது கீதை.

கீதை , உடல், உடலைக் கொண்டது என்ற இரண்டு வார்த்தைகளை கையாள்கிறது.

தேஹே , தேஹினா ...உடல், உடலைக் கொண்டது. ஆத்மா என்று நேரடியாகச் சொல்லவில்லை.

உடல் வேறு, உடலை செலுத்தும் அது வேறு என்று அடையாளம் காட்டுகிறது கீதை.

இந்த வேறுபாட்டை அறிந்தவன் மரணத்தை கண்டு கலங்க மாட்டான் என்கிறது கீதை.

இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கீதை என்ற நீண்ட பயணத்தில் முதல் அடி இந்த வேறுபாட்டை அறிந்து கொள்வது.

அடுத்தது, இதை விட மிக மிக ஆழமான கருத்தை கூற இருக்கிறது.

இதை முதலில் மனத்தில் நிறுத்துங்கள்.

நான் என்பது இந்த உடல் அல்ல என்பதை உணருங்கள்.

நான் என்பது இந்த உடல் அல்ல என்றால், மற்றவர்களும் அவர்களின் உடல் அல்ல என்று புரிகிறது அல்லவா ?

பின் தாய், தந்தை, உறவு, பகை, நட்பு, கருணை , பாசம், கோபம், பொறாமை என்பதெல்லாம் யாருக்கு யார் மேல் வருகிறது ?

இதை அறிவது தான் கீதையை அறிவது.

கண்ணன் சிலைக்கு மாலை போடுவது, ஊதுவத்தி கொளுத்துவது, விரதம் இருப்பது, பட்சணம் செய்வது சாப்பிடுவது அல்ல கீதையின் நோக்கம்.

தன்னைத் தான் அறிவது தான்  கீதையின் நோக்கம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/213.html

No comments:

Post a Comment